சமுதாய புரட்சி செய்!

0
1514

அளவில்லா ஆற்றலுடையவள்
அஞ்சியதால் தானோ ? உனை
அழிக்கிறார்கள் கருவிலே
அறியாமையை அகற்றி

அணுவைப் போல பிளந்து
ஆற்றல் பிழம்பாகி
அந் நயவஞ்சகர்களை பொசுக்கி
ஆளுமை புரட்சி செய்…!!!


கருக்கலைப்பைக் கடந்தாலும்
கள்ளிப் பாலாபிசேகமிட்டு
கொல்லுகிறார்கள் உன்னோடு
குலத்தின் ஈராயிரம் சிசுவையும்

அறிவெனும் ஆயுதத்தை தீட்டி
அக்கயவர்களின் சிரத்தை சீவி
அறிஞர்களை மிஞ்சுமளவு ஆராய்ந்து
அறிவியலிலே புரட்சி செய்…!!!

கழிவாக கழிவறையிலும்
குப்பையாக குப்பையிலும்
கொன்று வீசுகிறார்கள் பிரம்மனின்
குழந்தை நீயென அறியாதோர்

உலகமில்லை நீயில்லையெனில்
உடைத்தெறி அடக்குமுறையை
உனக்கோர் பாதையில் அயராது
உழைத்து தொழில் புரட்சி செய்…!!!

மலர்ந்து மங்கையானதும்
மனித தசைத் தின்னிகள்
மலரின் கற்பை கொத்தி
மயானத்தில் புதைக்கிறார்கள்

நவீன கலையறிந்து அந்த
நச்சு நாகங்களை
நறுக்கி கழுகுக்கு கூறிட்டு
நல்லதொரு வீரப் புரட்சி செய்…!!!

வீட்டிலே அடிமையாக்கி
விலைப் பேசி விலங்கிட்டு
விடுதலையில்லா கைதியாக
விற்கிறார்கள் திருமணத்தில்


சிறைவாசியாகவே சாகாதே
சுயநலவாதிகளை சூறையிட்டு
சீறிப் பெண்ணடிமையை ஒழித்து
சுதந்திர புரட்சி செய்…!!!

விதியில் விதவையாகி
வாழ்வை இழந்தவளுக்கு
வீட்டிலே தினம் தினம்
வார்த்தையிலே கருமாதி

வண்ண பூந்தோட்டத்துக்கு
வெள்ளை உடையுடுத்தும்
கருப்பு சமூதாயத்தை தீயிட்டு
நல்லதொரு சமுதாய புரட்சி செய் !!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments