நாளைக்கு சம்பள நாள்
தலைவலி அதிகமாகும் அளவுக்கு
மூளையை போட்டு குழப்பியாச்சு
நெற்றி முடிகளை மெதுமெதுவாக
வருடிக் கொண்டே
யோசனையில் ஆழ்ந்து இருக்கிறேன்.
நான்கு பச்சைநிற
1000 ரூபாய் தாள்கள்
முதலாளி கையால்
நாளைக்கு கிடைக்கும்
எப்படியும் கட்டாயமாக
இரண்டு தாள்கள்
வீட்டுக்கு கொடுக்க வேண்டும்
சில்லறை கடையில்
அம்மா வைத்திருக்கும்
பாக்கி பணத்தைக் கொடுப்பதா?
தம்பியின்
வருங்கால படிப்புக்கு உதவும் என்று
சீட்டுப் பணம் கட்டுவதா?
உயிர் நண்பன் போல்
என்னுடனே தெரியும்
எனது வாகனத்துக்கு எரிபொருள் நிரப்புவதா?
சராசரி குடும்பத்தில் பிறந்ததற்கு
இப்படி ஒரு சாபக்கேடு தேவையா?
அடிப்படைத் தேவைகளையும் கொண்டு
இத்தனை தேவைகள்
நிறைந்து நிற்கின்றதே?!!
தோழிகளிடம் நல்ல செருப்பு இருக்கிறது
எனக்கு ஒரு
நல்ல செருப்பு வாங்கி தாவன் அண்ணா
ஆசைப் பட்டு விட்டால்
தங்கை மறுக்க முடியாதே!!
அம்மாவின் திட்டுக்கள்
கேட்டு கேட்டு சலித்துவிட்டது
வேறு எதுவும் இல்லை
தாடி அதிகமாக வளர்ந்துவிட்டது….
இத்தனையும் முடிய
மிஞ்சப் போவது எவ்வளவோ ??
இன்னும்
கடன் கேட்டு கெஞ்சப்போவது யார் யாரிடமோ??
வெற்றியை தடவிக்கொண்டே
மேலும்
மூளையில் சிந்தனையை
சிந்திக் கொண்டே இருக்கிறேன்
கடைவீதியை ஒருவித பார்வையுடன் வெறித்துக்கொண்டு..
போய் வருகிறேன்
கடைக்கு வாடிக்கையாளர்
ஒருவர் உள்ளே நுழைகிறார்..