சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 22

0
1147

இரகசிய ஆலோசனை

ஆலோசனை மண்டபத்தில் இளவரசர் சிங்கைபரராசசேகரர் முன்வைத்த அத்தனை விடயங்களையும் அங்கிருந்த அத்தனை சிற்றரசர்களும் ஏகமனதாக ஒப்புக்கொண்டிருந்தார்கள் என்பதை கூட்டத்தில் ஏககாலத்தில் எழுந்த ஆமோதிப்பு குரல்களே வெளிப்படையாக காட்டி நின்றனவாகையால், தான் அமர்ந்திருந்த பீடத்தில் சற்று நிமிர்ந்து உட்கார்ந்த இளவரசர் அங்கிருந்த அத்தனை பேர் மீதும் தன் விசாலமான பார்வையை ஒருமுறை படரவிட்டு, பின் தன் கம்பீரமான வசீகரக்குரலில்,

“வன்னியஅரசர்களே! இனி தாங்களும் தங்களின் அபிப்பிராயங்களை இவ்விடத்தில், அவையின் முன் முன்வைக்கலாம்” என்றார்.

கூட்டத்தில் இருந்து எழுந்து முன்னே வந்த முள்ளிமாநகர் வன்னியர்,

“இளவரசே! அவையிலுள்ள மற்றைய குறுநில வன்னிமைகளே! வன்னிபெருநிலப்பரப்பில் எங்கள் வன்னியர்களின் ஆட்சி ஆரம்பமான காலம் தொடக்கம், எங்களின் மூதாதையர்களான வன்னிமைகள் சிங்கை மன்னர்களுடன் இணைந்து ஒரு போதும் செயற்பட்டதில்லை. பல சந்தர்ப்பங்களில் சிங்கை மன்னர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையே மேற்கொண்டும் உள்ளனர். சிங்கை மன்னர்களுடன் வன்னிமைகள் இணைந்து நட்புறவுடன் செயற்பட்ட சந்தர்ப்பங்கள் மிக மிக சொற்பம் தான். ஆனால் இம்முறை நாம் இளவரசருடன் இணைந்து செயற்பட வேண்டியது மிக அவசியம். நம்முள் ஆயிரம் பகையிருந்தாலும், இன்னுமொரு அந்நியன் எம்மை ஆட்சிசெய்ய நாம் ஒரு போதும் அனுமதித்தலாகாது. மன்னர் செண்பகப்பெருமாள் அவர்கள் அனைத்து மத இன மக்களையும் சமமாக மதித்து ஆட்சி செய்தாரென்றாலும், அவர் கோட்டை ராசதானிக்கு செல்கையில் இங்கு மன்னராக்கி விட்டு சென்ற அவரின் பிரதிநிதியான அந்த விசயபாகு, நம் மக்கள் மீது பல அநியாயமான திறைகளை விதிப்பதன்றி, எம் கலாசாரங்களையும் எம்மிடையே தடை செய்திருக்கின்றான். நம் தேசமும் மக்களும் அந்நியர்களுக்கு அடங்கி வாழ்வதென்பதை எண்ணிப்பார்க்கவே என் மனம் குமுறுகின்றது. ஆகையால் இப்போரில் சிங்கைநகரை மீண்டும் சுகந்திரராஜ்ஜியமாய் மிளிர செய்ய நாம் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகின்றது. அதற்காகத்தான் இவ்விடத்தில் இந்த ஆலோசனைக்கூட்டத்தை நான் ஏற்பாடு செய்து உங்கள் அனைவரையும் வரவழைக்கவும் செய்தேன்.” என்றார் உறுதியான குரலில்.

“ஆம், முள்ளிமாநகர் மாப்பாணர் கூறுவது முற்றிலும் சரியே! இம்முறை நாம் இணைந்து செயற்பட வேண்டியது மிக அவசியம்.” என்றார் மட்டுமாநகர் வன்னியர்.

“இத்தனை தலைமுறைகளாக தனி ராஜ்ஜியமாய் மிளிர்ந்த சிங்கை நகர் ராசதானியானது, மன்னர் கனக சூரிய சிங்கையாரிய சக்கரவர்த்தியின் வீரமரணத்துடன், தன் சுயாட்சியை இழந்து சிங்களஅரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. வன்னியர்களாகிய எங்களின் அதிகாரமும் மட்டுப்படுத்தப்பட்டு விட்டது. இதுவரை காலமும் எவருக்கும் அடங்காத வன்னி பெருநிலப்பரப்பும் சிங்கள அரசுக்கு கப்பம் செலுத்தி ஆள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதுடன், பெருமளவு அதிகாரங்கள் எம் கைகளை விட்டு சென்றுவிட்டன.” என்றார் திருமலை வன்னியர்.

மேற்குறித்த பேச்சில் இடையிடையே “ஆமாம் ஆமாம்” என்று கூட்டத்தில் சிலர் தம்பங்குக்கு ஏகோபித்த கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தவும் செய்திருந்தார்கள்.

இவற்றையெல்லாம் மிக அவதானமாகவே கேட்டுக்கொண்டிருந்த சிங்கை பரராசசேகரர் தான் அமர்ந்திருந்த பீடத்தை விட்டு எழுந்து இருமுறை அங்கும் இங்கும் நடந்து ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டு, பின் அவையோர் முன் கம்பீரமாக நிமிர்ந்து நின்றபடியே

“திருமலை வன்னியரே! உங்களுக்கு மட்டுமல்ல இங்கிருக்கும் எவருக்குமே தெரியாத பெரும் இரகசியம் ஒன்று உள்ளது. இன்று இச்சிங்கை நகரில் நடமாடிக்கொண்டிருக்கும் ஒரு சில நபர்களைத் தவிர வேறு எவருமே அறிந்திராத பரம இரகசியம் அது” என்றார் பழைய உறுதியான குரலிலேயே.

“என்ன இரகசியம் அது?” என்றார் மட்டுமாநகர் வன்னியர் குரலிலும் வியப்பு தொனிக்க.

ஏதோ கனவுலகில் சஞ்சரித்து வலம்வருபவர் போலவே பேச ஆரம்பித்த இளவரசர்,

“அந்த சம்பவம்! அது தான் என்னை இச்சிங்கைநகர் மீது படையெடுக்க தூண்டியது, மீண்டும் இவ்விராச்சியத்தை கைப்பற்றியே ஆக வேண்டும் என்கின்ற எண்ணத்தை என்னுள் விதைத்தது. என் வம்சத்தின் மீது படிந்த கறையை இல்லாதொழிக்க வேண்டும் என்கின்ற வெறியை எனக்குள் புகுத்தியது, அதற்காகவே இந்த படையெடுப்பு.” என்றார் மிகுந்த ஆவேசத்துடன்.

“என்ன இரகசியம் அது?” என்று ஏககாலத்தில் பல குரல்கள் அவையோரிடையே ஒலித்ததுமட்டுமன்றி, அந்த இரகசியம் என்னவாக இருக்கும் என்கின்ற சந்தேகம் அங்கிருந்த அனைவரின் மனதிலும் அச்சமயம் எழுந்திருந்ததாகையால் கூட்டத்தினரிடையெ பெரும் சலசலப்பும் உண்டாகியிருந்தது.

“தயவுசெய்து அதைப்பற்றி இப்பொழுது எதுவும் கேட்க வேண்டாம், பிறிதொரு சந்தர்ப்பத்தில் நானே சொல்கிறேன்.” என்று துன்பச்சாயை படர்ந்த குரலிலேயே கூறிய இளவரசர் விறுவிறு என நடந்து தாம் பேசிக்கொண்டிருந்த அரசவை மண்டபத்திற்கு அடுத்து, கோட்டை சுவர்களுக்கும் அந்த மண்டபத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலிருந்த அந்த முற்றம் போன்ற வெளியில் வந்து, வானத்தை அண்ணாந்து நோக்கியபடியே நின்று ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தார். அவரை பின்பற்றி திருமலை வன்னியரும் முள்ளிமாநகர் வன்னியரும் முன்னர் வழிகாட்டி அழைத்து வந்த அந்த வீரனும் முதலில் அந்த இடத்தை அடைந்தார்கள். பின் சிறிது நேரத்திற்கெல்லாம் மற்றவர்களும் அந்த இடத்தை அடைந்திருந்தார்கள்.

பௌர்ணமி கழிந்து சில நாட்களே கடந்திருந்ததாகையால் வானில் ஓரளவு தேய்ந்த முழுநிலவே தோன்றியதுடன், பலலட்சக்கணக்கான உடுக்களும் இணைந்து வெள்ளொளியை பாய்ச்சி அந்த மண்டபத்துக்கு ஓரளவு ஒளியை வழங்கினாலும், அந்த முற்றத்தின் ஒரு மூலையில் எரிந்து கொண்டிருந்த தீவர்த்தியின் வெளிச்சமே அந்த இடத்தை இன்னும் தெளிவாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. வானில் ஒளிர்ந்துகொண்டிருந்த உடுக்களையும் நிலவையும் பார்த்த படியே நீண்ட நேரம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த இளவரசர், பின் துன்பம் கலந்த பெருமூச்சொன்றையும் தன் நாசியிலிருந்து பிறப்பித்தார். பின் தன்னை சுதாகரித்துக்கொண்டு தன்னை பின்பற்றி வந்திருந்த மற்றைய சிற்றரசர்கள் மீது தன் பார்வையை செலுத்திவிட்டு, அந்த கோட்டை சுவர்களை, ஒரு முறை தன் கண்களை சுழற்றி ஆராயவும் செய்தார். பின் தன் பழைய கம்பீரத்தை குரலிலே வரவழைத்துக்கொண்ட இளவரசர்,

“நான் இங்கு வரும் போது இந்த கட்டடத்தின் அமைப்பை நன்கு அவதானித்தேன். தேவைப்பட்டால் இந்த கட்டடம் ஒரு சிறு கோட்டையாகவும் உபயோகிக்கதக்கது தான் என்று எனக்கு தோன்றியது.” என்றார்.

“ஆம் இளவரசே!” என்றான் முன்னரே வழிகாட்டி வந்த அந்த வீரன்.

“தாங்கள்” என்று இழுத்தார் இளவரசர்.

“முள்ளிமாநகர் கோட்டைதலைவர். அதாவது இந்தக்கோட்டை கூட என் பொறுப்பிலே தான் உள்ளது.” என்றான் அந்த வீரன்.

அந்த வீரனை பார்த்து மெல்ல தலையசைத்த இளவரசர் அவனை நோக்கி “இந்த கோட்டையின் கொத்தளங்களை மேலும் பலப்படுத்துங்கள், இக்கோட்டையின் சுவர்களையும் இன்னும் பலப்படுத்துங்கள். இப்போரில் இந்த கோட்டையும் மிக முக்கியபங்காற்ற இருக்கிறது.” என்றார் மிக உறுதியாக.

“நிச்சயமாக இளவரசே! நாளை காலையே பணியை ஆரம்பித்து விடலாம்” என்றான் அந்த கோட்டைத்தலைவன்.

பின் திருமலை வன்னியரை நோக்கி திரும்பிய இளவரசர்,

“திருமலை வன்னியரே இப்பொழுதே நாம் திருமலையை நோக்கி புறப்பட்டாக வேண்டும். எமக்கு போதிய நேர அவகாசமில்லை” என்றார்.

“இந்த நள்ளிரவிலா?” என்றார் திருமலை வன்னியர் அதிர்ச்சியுடன்.

“ஆம் காலையில் செல்வது அத்தனை பாதுகாப்பானதல்ல. இப்பொழுதே நாம் புறப்பட வேண்டும்.” என்றார் இளவரசர்.

“சரி இளவரசே” என்றார் திருமலை வன்னியர்.

“மாப்பாணரே என் குதிரை” என்றார் இளவரசர்.

“நான் சொன்ன இடத்தில் அதை கட்டிப்போட்டீர்கள் அல்லவா? என் ஆள் அதை பத்திரமாக அழைத்து சென்று தன் குடிலில் வைத்திருப்பான், தாங்கள் இங்கிருந்து வேறு குதிரையில் புறப்படலாம்” என்றார் முள்ளிமாநகர் மாப்பாணர்.

இருபத்துமூன்றாம் அத்தியாயம் தொடரும்..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments