வேறு வழியில்லை…..
இத்தனை காலமும் அதற்கு உணவூட்டி
வளர்த்தேன்
அதை கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு
அதை இறுதியாக தூக்கினேன்
அது சிணுங்கியது
நிலத்தில் போட்டு ஒரே அடி
சில்லறைகள் இசைத்தன சிதறி ஓடி
என் நெடுங்கால சேமிப்பு – அது
என் சொந்த உழைப்பு
மிகுந்த பூரிப்பு….
காசை எடுத்து அப்பாவிடம் கொடுத்து
மோட்டார் சைக்கிளில் சவாரி,
வந்தோம்! அந்தக் கடைவீதி…
தேடுகிறேன்
கண்வெட்டாமல் தேடுகிறேன்
என் மனம் கவர்ந்த பரிசை
இதோ ! இது தான்!
காசைக் கொடுத்து அதையும் என்
கைகளால் தூக்குகிறேன்
இதுவும் சிணுங்குகிறது!
என் உண்டியல் போலவே
அப்பா சீக்கிரம் போவோம்!
தங்கச்சி பாப்பாவிடம்
அவளுக்கு தான் இந்தக் கொலுசு
என் மனசெல்லாம் சிரிப்பு
“பாப்பா பிறந்திருப்பாளா?”
தெரியல….
கருவில் இருக்கும் போதே
பெண்பால் பெயர் வைத்தாள் – என் தாய்
மகள் தான் வேண்டும் என்று
என் தங்கச்சி பாப்பா அது….
அவளும்…
நான் தூக்கும் போது சிணுங்குவாள்
என் உண்டியல் போல
இந்த கொலுசைப் போல
வந்தது வைத்தியசாலை….
ஓடுகிறேன்……..
இப்போது தான் தாதி வந்து சொல்கிறாள்
“ தாயும் சேயும் நலம்”என்று
இப்போது என் மனம் சிணுங்குகிறது
என் தங்கையைக் காண….
மிக அருமை, இக்கவிதையினை படிக்கும் போது எனக்குமொரு தங்கை இருந்திருப்பின் நன்றாயிருந்திருக்கும் போலும் என தோன்றுகிறது. இவ்வருமையான கவிதையை தந்தமைக்கு தோழருக்கு நன்றி மற்றும் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பா
சிறந்த ஒரு மையக்கரு.
முக்காலம் மற்றும் சிணுங்கல் வகைகள் பற்றிய உத்தி அருமை
வாழ்த்துக்கள்…..
மிக்க நன்றி சகோதரி