தினமும் நாள் இப்படிதான் போய்க்கொண்டிருக்கிறது. இன்றோடு நான்கு மாதங்கள் முடிந்து விட்டன. ‘ச்சே.. இண்டைக்காவது தைரியமா போய் கதைக்கனும்..‘ என்று நினைத்துக் கொண்டே ஸ்கூட்டியை கிளப்பினாள் லீனா.
கோவிலுக்கு வந்து சுவாமியை கும்பிட்டுவிட்டு, அவனைத் தேடி கண்களை அலைய விட்டாள். அவனைக் காணவில்லை. ஏமாற்றமாக இருந்தது. கோவில் தூண் ஒன்றிற்கு பக்கத்தில் உட்கார்ந்தாள்.
நான்கு மாதங்களுக்கு முன் இதேபோல் ஒரு நாளில்தான் அவனை முதன்முதலில் சந்தித்தாள் லீனா. அந்த அலுவலகத்தில் வேலை கிடைத்து முதல் நாள் வேலைக்கு போகும் போதுதான் அலுவலகத்திற்கு பக்கத்தில் இருந்த கோவிலைக் கண்டாள். சரி போய் பிள்ளையாரை பார்த்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டே போய்விடலாம் என்று போனாள்.
குழாயில் காலைக் கழுவிக்கொண்டு திரும்பும் போது எதிரில் வந்தவனோடு மோதப் பார்த்து சுதாகரித்து நின்றுவிட்டாள். ஆனால் அவன் கண்களின் ஈர்ப்பில் விழுந்தே விட்டாள். முகத்துக்கு மாஸ்க் அணித்திருந்தான். நேர்த்தியாக உடை அணிந்திருந்தான். ஒரு கனம் அவன் கண்களின் ஈர்ப்பு அவளை நிலைகுலையத்தான் செய்தது. அவனோ சற்றுவிலகி நடந்து குழாயடியில் போய் கால்களை கழுவிவிட்டு கோவிலுக்குள் நுழைந்தான்.
அடுத்தநாள் அலுவலகம் வரும்போது கோவிலைத்தாண்டி வர அவளுக்கு மனமில்லை. ‘அவன் இன்றும் வருவானா..?’ என்று மனம் நச்சரித்தது. ஸ்கூட்டியை கோவில் பக்கம் திருப்பினாள். மனம் ரெக்கை இல்லாமல் சிறகடித்தது, அவனை கோவில் வாசலில் கண்டபோது.
இப்படியே பிள்ளையாரை பார்க்க போகிறாளோ இல்லையோ அவனை பார்க்கவென்றே தினமும் கோவிலுக்கு போனாள். அவள் மனம் அறிந்தோ என்னவோ அந்த தேவிக்கு தேவன் தரிசனம் தினமும் கிடைத்தது. லீனா கோவிலுக்குள் போனதும் முகக்கவசத்தை கழட்டிவிட்டு சுவாமி கும்பிடுவாள். அவன் ஒரு நாளும் முகக்கவச்தை கழட்டியதில்லை. ஆனால் கண்களால் சிரிப்பான் அவளைப் பார்த்து. அந்த கண்களின் ஈர்ப்பும் சிரிப்பும் அவளை இம்சித்தது.
எப்படியாவது அவனுடைய முகத்தை முழுதாக பார்க்கவேண்டும் என்று அவளுக்கு தவிப்பாகவே இருந்தது. கற்பனை பண்ணி பார்த்தாள் மீசை வைத்திருப்பானா? அதை முறுக்கி விட்டிருப்பானா? தாடி வைத்திருப்பானா? என்றெல்லாம். கற்பனை செய்து பார்த்தாள். ஆனால் தினமும் அவன் அவளை பார்த்து கண்களாலேயே சிரிப்பான். ‘ப்ப்பா.. படுபாவி.. வதைக்கிறடா மனச..‘ என்று மனதிற்குள்ளே அவனை செல்லமாக திட்டிக்கொண்டு அலுவலகம் வந்து விடுவாள்.
அதையும் தாண்டி சில நேரம் ‘பிள்ளையாரப்பா.. ப்ளீஸ்.. அவன மாஸ்க்க கழட்ட வைங்களேன்.. கண்ணாலயே சிரிச்சு.. மயக்கிறான்..‘ என்று விக்னேஸ்வரனிடமும் கெஞ்சிப் பார்த்தாள் அவரும் அவளை கண்டுகொள்ளவே இல்லை. இப்படியே நான்கு மாதங்கள் போய் விட்டது.
இன்று எப்படியாவது அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்ற முடிவோடு கோவிலுக்கு வந்திருந்தாள் லீனா. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அவன் வரவில்லை. கண்கள் லேசாக எரிந்து கொண்டு அழுகை வந்தது அவளுக்கு. கோபமும் வெறுப்பும் போட்டிபோட்டுக்கொண்டு மனதை வதைக்க வேகமாக எழுந்து ஒரு அடி எடுத்து வைத்தவள் அப்படியே நின்று விட்டாள்.
அதற்கு மேல் ஒரு அடி எடுத்து வைக்க முடியாதபடி அவன் நின்றான் அவள் எதிரில். அவள் அவன் கண்களை பார்க்கவும் கண்ணாலேயே சிரித்தான். அவள் அவனிடம் பேச வாயெடுக்கவும் அவள் பேசும் முன் தன்னுடைய முகத்திலிருந்த மாஸ்க்கை கழட்டினான். லீனாவுக்கு கனவு போல் இருந்தது. அவன் மாநிறமும் இல்லை அதைவிடவும் கொஞ்சம் கருமை. மீசை வளர்த்து அதை அழகாக முறுக்கி விட்டிருந்தான். தாடி வைத்திருந்தான். நான்கு மாதங்களாக இரவு பகலாக அவள் எண்ணங்களை ஆட்கொண்டு அடிமையாக்கிவிட்டிருந்த அவன் முகத்தை முழுமையாக அதுவும் இவ்வளவு பக்கத்தில் பார்க்க அவளுக்கு மூச்சு முட்டியது.
அவன் தனது தொலைபேசியில் எதையோ பாரக்கும்படி அவளிடம் நீட்டினான். வாங்கி அதில் டைப் பண்ணப்பட்டிருந்ததை வாசித்தாள். லீனா. அதில் அவன் பிறப்பிலேயே பேசமுடியாத மாற்றுதிறனாளியாக பிறந்தவன் என்றும் தற்போது விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றுவதாகவும் தனது பெயர் “மிதுரன்” எனவும் குறிப்பிட்டிருந்தான்.
தொலைபேசியை அவனிடம் கொடுத்துவிட்டு ‘தெரியும்..‘ என்றாள். அவன் புரியாமல் குழப்பத்தோடு அவளை பார்த்தான். ‘இந்த கோவில்ல அர்ச்சனை டிக்கட் எழுதி தாற ஐயா சொன்னார்.. நீங்க கதைக்க மாட்டீங்க என்டு..‘ என்றாள் லீனா.
அவன் முகம் வாடிவிட்டது. அவள் தலையை சரித்து அவன்முகத்தை பார்த்து ‘நா.. ஒன்டு சொல்லனும்.. கேட்டுட்டு போவிங்களா..‘ என்றாள் கெஞ்சலாக. அவன் ஆம் என தலையாட்டவும் கையை பிசைந்து கொண்டு தயங்கி தயங்கி ‘ம்ம்ம்… இப்டி அழகா மீசையெல்லாம் வச்சிட்டு.. இம்பிரஸிவா சிரிச்சிட்டு.. கண்ணா… ம்ம்ம்.. கண்ணாலயே பேசிட்டு இருக்கீங்களே.. அப்டி என்கிட்யும் கண்ணாலயே கதைக்கலாமே லைப் லோங்..‘ என்றாள்.
ஒருவழியாக இவ்வளவு நாள் நெஞ்சுக்கும் தொண்டைக்கும் இடையில் நின்று அவளை வதைத்த வார்த்தைகளை அவனிடம் சொல்லிவிட்டு நிமிர்ந்து அவனை பார்த்தாள். இப்பொழுதும் அவன் கண்கள் தான் புன்னகைத்தன ஆனால் காதலோடு. அவன் கையிலிருந்த மாஸ்க்கை எடுத்து அவன் முகத்தில் போட்டுவிட்டு ‘மாஸ்க்க போட்டுக்கொள்ளுங்க.. இந்த அழகன நான் மட்டும் ரசிச்சுக்கொள்றன்.. ‘ என்றாள் அவள்.