சின்னஞ் சிறு கிளியே….

0
1899
அவள் அப்போதிலிருந்து
அழகானவளாகவும்
என்னை
அழவைப்பவளாகவும்
இருந்து கொண்டிருக்கிறாள்

மூக்கு சுளித்து
கண்கள் விரித்து
உதடுகளால்
பழிப்புக் காட்டும் போதும்

நீ இப்படித்தான்
என நான்
பொய்யுரைக்கையில் 
எனை
இடித்துக் காட்டும் போதும்

அவள்
ஓர் அப்சரஸை போல
அத்தனை
அழகாய் இருக்கிறாள்

செல்லமாய் சிணுங்கி
எனை கோபமூட்டி
பின் முத்தங்களால்
சமாதானம்
செய்யும் போதும்

என்னோடு கோபித்துக் கொண்டு
கண் தொலைவில்
கண்ணாமூச்சி ஆடும் போதும்

நான் உறங்கிப் போகும்
சமயங்களில்
கேசம் கலைத்து
என் காது மடல்
கடிக்கும் போதும்

குறும்புக்காரி வேஷத்திலும்
அவள் 
அத்தனை அழகாய் இருக்கிறாள்

எப்போதும்
என் தனிமைகளில்
ஒரு பேயைப் போல
புகுந்து கொண்டு
சில நேரங்களில் எனை
திடுக்கிடச் செய்பவளாயும்

பல நேரம்
என் கவிதைகளின்
கருவாயும்
நிழலாடுகிறாள்

இது வரையில்
இந்த உலகிற்கு
இறைவன் தர மறுத்த
அழகை எல்லாம்
வஞ்சனையின்றி கண்களில்
தேக்கிக் கொண்டு

கலை மானின் 
மருண்ட பார்வையில்
எனை கட்டிப் போடுகிறாள்

என் அந்தரங்கத்தின்
அத்வைதமாயும்

என் நிம்மதி அத்தனையும்
அவளுக்குள்ளே
ஒழித்து வைத்தவளாயும்

புதையல் கொண்டாடும்
கரீபியன் தீவு போல
விகல்பமின்றி
புன்னகைக்கிறாள்

அவள் செந்நிற பாதங்களை
என் மார்பில் பரவவிட்டு
முத்தங் கேட்டு என்னை
அடிமையாக்குகிறாள்

பித்துப் பிடித்த
பக்தன் போல
அவள் அழகில்
தினமும் நான்
ஜெபித்து
மரித்து
ஜனித்துப் போகும்
இன்ப வதை செய்கிறாள்

ஆர்ப்பரிக்கும் கடலாயும்
அமைதி கொண்ட முகிலாயும்
அவள் அன்பில்
எனை கரைக்கிறாள்

அவள் கைகளுக்குள்
எனை சிறைப்படுத்தி
பெண்மையின்
ஒட்டு மொத்த
மென்மையையும்
எனக்கு கற்றுத் தருகிறாள்

அவளின்
இம்மென்ற சொல்லிலும்
இல்லையென்ற சொல்லிலும்
எனை பல நேரம்
பைத்தியம் பிடிக்க செய்கிறாள்

எனக்கும் அவளுக்குமாய்
ஓர் இரண்டாம்
உலகம் சமைக்கிறாள்

அத்தனை குழந்தைத்தனங்களையும்
அந்தக் கன்னங்களில்
அப்பிக் கொண்டு

என் மடி மீது
அவள் துயில வாகாய்
என் தோளில் மாலையாகிறாள்

பொய்க் கதை புனைகையில்
எனை ஓரப் பார்வை
பார்த்தபடி
நூறு டிகிரி டென்ஷனேற்றி
பதற்றம் பரவுகையில்
உதடு குவித்து
கண்ணில் கெஞ்சலோடு
என் மார்புக்குள்
ஒழிந்து கொள்கிறாள்

இத்தனையும் செய்து விட்டு
வருடங்களில் வளர்ந்து விட்டு

பிரியமானவன் கை சேர
எனை கை காட்டி

என் வளர்ப்பு
என் குழந்தை என
மார் நிமிர்த்தும் பொழுதினிலே

என் செல்ல ராட்சஷி
“உடம்பைப் பார்த்துக்கோ
கூட என் நினைவையும்”

என கட்டி
கலங்கி
கண்ணீரில்
எச்சிலொற்றி

தன்னவனோடு விடை பெறுகையில்
ஊஞ்சல் கட்டி
என் இமைகளுக்குள்
நின்றாடுகிறாள்

என் செல்லமே
வளர்ந்த என் அன்னைடா
நீ
வயது முதிர்ந்த
குழந்தை
உன் தகப்பன்
நான்…..
(மகள்களைக் கொண்டாடும் ஒவ்வொரு அப்பாக்களுக்கும் சமர்ப்பணம்.)

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments