கொல்லும் முதலைகளுக்கும் நச்சுச்சிலந்திகளுக்கும் பெயர் பெற்ற ஆஸ்திரேலியாவில், நம்மை தற்கொலைக்கு தூண்டும் தாவரங்களும் இருக்கின்றன.
டெண்ட்ரோக்னைட் மொராய்டஸ் Dendrocnide moroides என்னும் அட்ரிகேசியே (Utricaceae) குடும்பத்தைச்சேர்ந்த மிக அதிக நச்சுத்தன்மை கொண்ட தாவரமொன்று ஆஸ்திரேலிய மழைக்காடுகளில் வெகு சாதாரணமாக காணப்படுகின்றது. இதன் உடல் முழுவதும் படர்ந்து வளர்ந்திருக்கும் மென்முட்கள் மனிதர்களையோ விலங்குகளையோ தீண்டினால் ஏற்படும் தாங்கவேமுடியாத வலியினால் பலர் தற்கொலைகூட செய்துகொண்டிருக்கிறார்களாம்.
கொட்டும் புதர், ஜிம்பி ஜிம்பி, நிலவொளிச்செடி என்றெல்லாம் பலவாறாக அழைக்கப்படும் இத்தாவரம் நரம்புகளை உடனடியாக சென்று தாக்கும் மிக சக்தி வாய்ந்த நியூரோ டாக்ஸின்களை உடலெங்கும் கொண்டுள்ளது. இந்த நஞ்சானது மனிதர்களுக்கு ஏற்படுத்தும் வலியைப்போல உலகில் வேறெந்த வலியும் இல்லையென்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்களும் ஆய்வாளர்களும்
3 மீட்டர் உயரம் வரை வளரும் இச்செடி அகன்ற இதய வடிவிலான, ஓரங்களில் பற்களைப்போன்ற அமைப்புள்ள 22 X 18 செமீ அளவிலான அடர்பச்சை இலைகளை கொண்டிருக்கும். ஒரு சில ஆண்மலர்கள் சுற்றிலும் நிறைய பெண்மலர்களால் சூழப்பட்டிருக்கும். மலர்கள் மிகச்சிறியவை. ஒற்றை விதையுள்ள சதைப்பற்றான இளஞ்சிவப்பு பழங்கள் உருவாகும். விதைகள் நல்ல சூரிய ஒளியிருந்தால் மட்டுமே முளைத்து வளரும்.
18 ஆம் நூற்றாண்டில் ஜிம்பி எனும் நகரிலிருந்து தங்கவேட்டைக்கு ஆஸ்திரேலிய காடுகளுக்குள் சென்றவர்களால் இது ஜிம்பி புதர்ச்செடி என்று பெயரிடப்பட்டது. அடர்ந்து வளர்ந்திருக்கும் மரங்கிளுக்கிடையில் சூரிய ஒளி விழும் இடங்களில் மட்டுமே இவை வளரும். அழகிய இதன் இலைகள் மென்மயிர்ப்பரப்புடன் தொடத்தூண்டும் அழகுகொண்டிருக்கும்.
செடியைதெரியாமல் தொட்டுவிட்டால் செடி முழுதும் செறிந்து வளர்ந்திருக்கும், மிக நுண்ணிய, சிலிகாவும் கால்சியம் கார்பனேட்டும் படிந்துள்ள மிகக்கூரான உறுதியான முட்களின் நுனிகள் தோலைக்கிழித்துக்கொண்டு சதைப்பகுதிக்குள் மிக ஆழமாக இறங்கி நஞ்சினை உள்ளே செலுத்தும். மிக கடுமையான வலியை ஏற்படுத்தும் இந்நஞ்சு பல வருடங்களுக்கு வீரியமுள்ளதாக இருக்கும். காற்றிலும் இவை நச்சுப்பொருட்களை கலப்பதால் செடிகளின் அருகில் சென்றாலே தும்மல், மூக்கிலிருந்து நீர் வடிதல், சுவாசத்திணறல், மூக்கில் ரத்தம் வடிதல் ஆகியவை ஏற்படும்..
முட்கள் குத்தி வீங்கி சிவந்திருக்கும் இடத்தை தொட்டாலோ அவ்விடத்தில் தண்ணீர் பட்டாலோ வலி மிகக்கடுமையாக அதிகரிக்கவும் செய்யும். நச்சுமுட்களால் குத்தப்பட்டவர்களுக்கான உடனடி சிகிச்சையென்பது மெழுகு தடவிய துணிகளை ஒற்றி தோலை கிழித்துக்கொண்டு தசையினுள் சென்றிருக்கும் முட்களை வெளியேற்ற முயற்சிப்பதும், நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் காயங்களை கழுவுவதுமேயாகும்.
முட்கள் குத்தினால் ஏற்படும் வலி கற்பனைக்கெட்டாதது, மேலும் வலி பலவருடங்களுக்கு நீடிக்கும். அமிலவீச்சுபட்ட இடத்தில் மின்னலும் சேர்ந்து தாக்கியது போலிருக்கும் எனவும் சொல்லபடுகின்றது. இத்கைய வலியை தாளமுடியாமல்தான் முட்கள் குத்தியவர்கல் தற்கொலை செய்துகொண்டார்களாம்.
1963 ல் மிக லேசாக முகத்தில் இச்செடியின் இலைகள் உரசியதால் பாதிக்கப்பட்ட எர்னி ரைடர்-(Ernie Rider,). முதலிரண்டு நாட்களில் தாளமுடியாமல் இருந்த வலியும் எரிச்சலும் அப்படியே தொடர்ந்து குளிர்சுரம் வந்து நடுங்கும் உடலுமாக தொடர்ந்து 1965 வரை இரண்டு வருடங்கள் அப்படியே இருந்ததை குறிப்பிடுகிறார். மிக மிக லேசாகவே செடியின் மீது பட்டதால் தான் இன்னும் உயிரோடிருப்பதாகவும் சொல்கிறார்.
இன்னும் சிலரோ ஆயிரக்கணக்கான குளவிகள் ஒரே சமயத்தில் கொட்டும் வலியைப்போல 100 மடங்கு வலியை கற்பனை செய்துகொள்ளுங்கள் என்கின்றனர்.
உலர்த்தி பாதுகாக்கப்பட்டிருக்கும், நூறு ஆண்டுகள் பழமையான இலைகளிலும் பச்சைச்செடியில் உள்ளதைப்போலவே நஞ்சிருக்கும் .
இன்றுவரை முழுமையாக இச்செடியின் நஞ்சினையும், பிற வேதிபொருட்களையும் ஆய்வுசெய்ய முடியவில்லை. ஓரிரு வேதிபொருட்களே அடையாளம் காணபட்டுள்ளன. தொடர்ந்து இதில் ஆய்வுகள் நடந்துவண்ணமே இருக்கின்றது
ஆஸ்திரேலியக்காடுகளில் காணப்படும் சில பறவைகளும் , nocturnal beetles வகையைச்சேர்ந்த Prasyptera mastersi போன்ற ஒரு சில இரவுப்பூச்சிகளும், சிவப்புக்கால்களையுடைய, குட்டிகளை வயிற்றினுள் இருக்கும் பைபோன்ற அமைப்புக்குள் வைத்துக்கொள்ளும் marsupial, red-legged pademelon, எனப்படும் விலங்குகளும் உணவாக உட்கொள்ளுவது இயற்கையின் விந்தைகளில் ஒன்று. சில பழங்குடியினர் இதன் பழங்களை முட்களை கவனமாக நீக்கிவிட்டு உண்கின்றனர்
இச்செடியில் தொடர்ந்து ஆய்வுகளை செய்துவரும் தாவரவியலாளர் மரினா ஹர்லி, செடியின் அருகில் செல்லும்போதெல்லம் வெடிகுண்டுகளை செயழிழக்கச்செய்பவர்களைப்போலவெ மிகப்பாதுகாப்பான உடைகளை அணிந்திருப்பார்
பாதிக்கப்பட்டு பிழைத்தவர்களின் காணொளிகளும் இச்செடிகுறித்த ஆய்வுகளும் யூட்யூபில் காணக்கிடைக்கின்றது. இச்செடியினைதொட்டு அவதியுற்றவர்களைப்பற்றியும் வலி தாங்காமல் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு செத்துபோனவர்களின் கதைகளும் கூட ஏராளம் இருக்கின்றன.