யாரோ யாருக்கு எழுதிய கடிதத்தை படிப்பது போலவே
நீ எனக்காக எழுதிய கவிதையினை
படித்துக் கொண்டிருக்கிறேன்
கடலுக்கு நெருக்கமான படகினைப்போலிருந்த நான்
கடவுச்சீட்டை அந்நிய நாட்டில் தொலைத்துவிட்டவனைப்போல
உன் நேசத்தில் இன்று நான் உணர்கிறேன்
அன்பே,
இறுக்கிக்கட்டிய கயிற்றின் முடிச்சுகளை
எப்போது நீ மட்டும் தனியே அவிழ்த்துக் கொண்டிருந்தாய் சொல்
ஒரு துலாமைப்போல
என் நினைவிலூறிய உன் வாக்குறுதிகள்
இடமும் வலமுமாய் மண்டைக்குள் ஆடிக்கொண்டேயிருக்கின்றனவே!
ஏதோ ஒரு அந்திமத்தில் நாம் பிரிந்து விடுவோம் என நினைக்கவில்லை
ஒரு குழந்தை பலூன் வெடிக்கும் எனத்தெரியாமல்
இயன்ற மட்டும் காற்று நிரப்புவது போல
என் நேசம் முழுமையும் உன்னிலே கொட்டி விட்டேன்
கண்ணாடிப் பூக்கள் மலர்வதில்லை எனத் தெரிந்தும்
ஏன் நான் ஒரு வசந்தத்தை எதிர்பார்த்தேன் அன்பே..!
ஆம் ஓர் அகதியைப்போல
அலையும் இந்த நேசத்திற்கு
சொந்தமில்லாத எந்த நாட்டில் நான்
சுதேசிப்பட்டம் வாங்கிக் கொடுப்பதென நீயே சொல் அன்பே…!