ஆச்சரியம் தான்…
எத்தனை எத்தனையோ கவிகள்
கிறுக்கினேன் இருந்தும்
ஏன் – என் வலிகளைத்தாண்டி
எதுவுமே எழுதிட முடியவில்லை
நிஜம்தான்…..
காயங்கள் மறைந்திடக் கூடும்
தழும்புகளை மறைத்திட முடியாதே
எல்லாம் மாறிவிடும் என்பர்
பறந்திடு எனக் கூட்டை விரித்தாலும்
எரிந்துவிட்ட சிறகுகளால் என்ன செய்திட
முடியும்???
பாரங்கள் மொத்தமும் பாரங்கல்லாகி
நெஞ்சம் கணத்துப் போகிறது
என்ன செய்வேன் – கண்ணீராய்
வழிந்தோடி கரையவுமில்லையே
அரை நொடி சூடு தாங்கா நாவுதான்
அனல் வார்த்தைகளை அள்ளி வீசுகிறது
அதை வாங்கிக் கொள்ளும் உள்ளமதின்
உறுத்தல்களை உணர்ந்திடவில்லையா ???
துரோகங்களாகிப் போகும் ஆறுதல்கள்
ஏமாற்றங்களாகிப் போகும் எதிர்பார்ப்புகள்
கானலாகிப் போகும் கனவுகள்
போலிகளாகிப் போகும் புன்னகைகள்
அத்தனையும்-
தலையணைக்கண்ணீரில் அடங்கி
விடவா போகிறது
தனிமைச்சிந்தனைகள் எத்தனை கேள்விகள்
கேட்டாலும் “யதார்த்தம்” என்ற
ஒற்றை வார்த்தையை பதிலாய்க் கொடுக்கிறது
என் இயலாமை
காயங்கள் ஆறும்
தழும்புகள் மாறாது