ஒரு செடியைப் பிடுங்கி
மற்றொரு இடத்தில் நடும் போது
அள்ளும் தாய்மண்ணை
ஒரு பிடிக்குள்
அடக்கி விடுகிறோம்!
தாய் மண்ணின் அளவை
கணக்கிடும் சூத்திரத்தில்
அதன் வேர்கள்
சொந்த நிலத்தில்
பயணிக்கும்
பல நூறு மைல்களை
எப்படி சுலபமாக கழித்து விடுகிறோம்??
புலம்பெயரும் செடிகளெல்லாம்
மரமாக வளர வளர
தாய் நிலத்தின் திசையை நோக்கி படர்த்தும் வேர்களில்
நிச்சயம் ஒருநாள் தாய்மண்ணைத் தொட்டு விடுவோம் என்ற நம்பிக்கை
துளிர்விட்டுக்கொண்டிருக்கிறது
பழைய நினைவுகளின் ஈரத்தில்!