தாழ்ந்திடும் வாழ்க்கை நன்நிலை அடையுமா?

0
1069

மண்வெட்டி எடுத்து புறப்படும் தருணமதில்
மனதோடு எண்ணலைகள் அலைபாய
தள்ளாடும் வயதினிலே அவன் வாழ்வு
தடம்புரண்டு போவது தான் தகுமா?

சோற்றை நாம் உண்ண
சேற்றிலே கால் பதித்த – விவசாயி
படாத பாடுகள் தான் பட்டும்
பசியோடு பட்டினியால் வாடுவதும் ஏனடா?


அயராது உழைத்து
அரும்பாடு படுகையிலே
அடைமழை, அதிகரித்த வெயில் வந்து
பாதியை அழித்துவிட
அவனிட்ட முதலீடும் கிடைக்குமா?
என்ற கேள்வியோடு
அவன் வாழ்வே அலைக்கழிந்து போகலாமோ?

அவலத்தின் ஓடையிலே
வாழ்வு தனை சுமந்து கொண்டு
அதிகாலை வேளையிலே
சில்லென்ற குளிரோடு
மென்றெடுத்த வெற்றிலை வாயோடு
கொழுந்து தான் பறிக்க
மேடு பள்ளம் ஏறிடுவோர்
வாழ்விலே மேன்மை ஒன்று கிடைத்திடுமா?

அவசர அவசரமாய்
பசியடங்கா ஒரு கோப்பை தேநீரோடு
அன்றாடம் கையேந்தும்
சிறு கூலி அன்றோடு முடிந்துவிட
நிரந்தரமாய் ஒரு தொழிலும்
நீடித்த வாழ்விற்கு அதிகரித்த சம்பளமும்
நீதியோடு தீர்வாக
போராடும் வாழ்விற்கு
விடுதலை தான் கிடைக்குமோ?

வியர்வை சிந்தியும் வீழ்ந்தோமே
என எண்ணி
விரக்தியால் மூச்சையே
விட்டோர் தான் அதிகம்
நித்தமும் கடனோடு
கனவாக வாழும் வாழ்வு
நிம்மதியாய் நனவாக
எப்போது தான் மாறுமோ?

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments