எப்போதும் போலவே போதையின் கால்களை பற்றிக்கொண்ட அவனுக்கு தனிமை பெரும் துயரமாக இருக்கவில்லை. காலை விடிந்ததிலிருந்து இரவு உறங்கும் வரை இந்தத்தனிமை அவனுக்கு பழகிப்போய்விட்டது. முன்பெல்லாம் பெரும் சலிப்பாகவும் ஏதோ பெரும் பாரம் போலவும் இருக்கும். ஆனால் இப்போது அந்த உணர்வுகளிலிருந்து தப்பிக்க அவன் பழகியிருந்தான்.
அந்த வீட்டில் அவன் மட்டும் என்பதை அந்த கட்டிடத்தில் காவி ஏறியிருந்த கற்களை முத்தமிட்டு முத்தமிட்டு சுவர்களுக்கு சொல்வது போலவே அவனுக்கே அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.
அந்த வீட்டின் ஜன்னல்களும் கதவுகளும் எப்போதும் திறந்தேயிருக்கும். முன்பெல்லாம் ஜன்னலுக்கு வெளியே மட்டும் தோட்டம் இருந்தது. ஆனால் இப்போது வீட்டிற்குள்ளும் வளர்க்கத் தொடங்கியிருந்தான். அவனது கட்டில் கால்களை இப்போதுதான் ஒரு ரோஜாச்செடி பற்றத் தொடங்கியிருந்தது. ரேடியோ கேட்பது அவனுக்கு எப்போதும் பிடிக்கும். சீரான அலைவரிசையாய் இல்லாவிட்டாலும் ஒரு கரகரப்புடன் காற்றில் மிதந்து வரும் அலைவரிசைக்குரல்களை கேட்பதில் அவனுக்கு அப்படியொரு அலாதி ப்ரியம் இருந்தது. இன்னும் இரண்டு நாட்கள் தொடர்ச்சியான மழை, கடும் குளிர் என ஒலிபரப்பிக் கொண்டிருந்தது.அவன் கம்பளியை தேடினான். அதில் பூனைக்குட்டி சுருண்டபடி படுத்திருந்தது. மெல்லக்குனிந்து காதுக்குள் உப் என ஊதினான். அதற்கு வாய் வெப்பம் இதமாக இருந்திருக்கவேண்டும். இன்னும் சுருண்டபடி உறங்கத்தொடங்கியது.
வெளியே மெல்ல மெல்லமாய் இருந்த காற்று கொஞ்சமாய் மழை பிடித்ததில் ஆட்டம் காணத்தொடங்கியிருந்தது. சூடாக எதுவும் இல்லை. ஆனால் அவன் தயாரித்த வைன் மிச்சத்தை தேடிக்கொண்டிருந்தான். கொட்டிய போது குடுவையிலிருந்து மீதமாய் வந்துவிழுந்தஇரு துளிகளை அண்ணாந்து உள்வாங்கிக் கொண்டான். பசி வயிற்றை கிள்ளியது. ஆனால் வீட்டில் எதுவுமில்லை என்பது அவனுக்குத்தெரியும். தலையணைக்கடியில் வைத்திருந்த தூக்க மாத்திரையை எடுத்துக்கொண்டான். அதுவும் பாதியாக பஞ்சத்தில் குறைந்திருந்தது. மாத்திரையினால் தூக்கம் வருமோ இல்லையோ ஆனால் மாத்திரை எடுத்தால் கட்டாயம் தூக்கம் வரும் என்ற தோஷத்திலேயே விழுங்கிக் கொண்டான். தண்ணீர் உப்புக் கரித்தது. கண்கணை மூடிக் கொண்டான். கண்ணீரும் உப்புக்கரித்தது.
அலைவரிசையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியான குளிரும் பனியும் நிலவக்கூடும் என ரேடியோ அறிக்கையிட்டுக்கொண்டிருந்தது.