தேவன்

0
687

 

 

 

 

 

 

 

நான் ஒரு குளிர் ஜுரத்தால்
பாதிக்கப்பட்ட மனிதனை போல
நடுங்கி கொண்டிருந்தேன்
என்னை
என் தேவன் வந்து
அன்பினால் அணைப்பான் என
நம்பிக்கொண்டிருந்தேன்

நம்பிக்கைதான் எத்தனை தூய்மையானது
நம்பிக்கைதான் எத்தனை உறுதி நிறைந்தது
நம்பிக்கை என்பது ஒரு சுடரை போன்றது
நம்பிக்கை என்பது ஒரு விடியலை போன்றது
ஆம் நம்பிக்கைதான் எளியவர்களின் கடைசி அஸ்த்திரம்
அதுதான் கனவாளர்களின் கேடயம்

அப்படித்தான் நானும் எனது நம்பிக்கைகளை
மெழுகுவர்த்திகள் ஏற்றி பாதுகாப்பது போலவே
காப்பாற்றிக் கொண்டிருந்தேன்
என்னை என் தேவன் வந்து
அன்பினால் அணைப்பான் என நம்பிக்கொண்டிருந்தேன்
எப்போதும் சில பசிய வயல்கள்
எனக்காக அவன் வைத்திருப்பான் என்றும்
என்னை கவலைகளற்ற ஒரு ராஜ்ஜியத்திற்கு
கூட்டிப் போவானென்றும்
கண்ணீரை எல்லாம்
முத்தங்களால் துடைப்பான் என்றும் நம்பிக் கொண்டிருந்தேன்

தேவனுக்கு எப்போதும் என்னை சந்திக்க
வெள்ளைக் குதிரை தேவையாக இருந்தது
அப்போதுதான் தேவனாக நான் உனக்கு தோன்றுவேன் என்றான்
தேவன் எளியவன்தான்
அவன் கைகளில் எந்தவித அற்புதங்களும் இல்லை
முதலில் தேவனுக்கு
என் துயரங்களை தீர்ப்பதில் வேகம் இருந்தது
இப்போதும் அவனிடம்
அந்த வேகம் இருக்கும் என்றுதான் நம்புகிறேன்
நம்பிக்கை தானே எளியவர்களுக்கு
எப்போதுமே ஒரு பிடிப்பு
ஆனால் நேரந்தான் இல்லை என்றான்
சரி என்றேன்

ஆனால் என் துயரங்கள் தீரவில்லை
எப்போதும் போலவே தட்டில்
அதுபாட்டிற்கு நிரம்பிக் கொண்டிருந்தது
ஆனால் நான் சொல்வதை நிறுத்தி விட்டேன்
துயரங்களின் நெடிது யாருக்குத்தான் சலிப்பூட்டாது
அவன் தேவனாகிலும் விலக்கல்லவே

ஆனால் உண்மையில் என் தேவனுக்கு
என்னை விட அதிகமாய் துயரங்கள் இருந்தன
ஓர் நாள் அவன் கைகளை பிடித்துக் கொண்டான்
கழுத்திலும் கன்னங்களிலும் இதழ் பதித்தான்
என்னை கண்டிப்பாக கரம் பற்றி
வெள்ளை பளிங்கு மாளிகை ஒன்றிற்கு
அழைத்துப் போவேன் என்றான்
ஆனால் எனக்கு
பசிய வயல்களே பிடிக்கும் என்பதை அவன் மறந்து போனான்
தன் வெள்ளைக் குதிரை மூப்படைந்து விட்டதால்
புதிய குதிரை தேவை என்றான்
குதிரையோடு சேர்த்து இன்னும் சில..

இப்படியே தேவனுக்கு தேவைகள் கூடிக் கொண்டே போய் விட்டன
அவன் தேவையே என் விருப்பம் என பொருள் கொண்டான்
சரிதானே என்றான்
நானும் புன்னகைத்தபடி ஆம் என்றேன்
தூரமாய் என் தலையணை மட்டும்
இரவுகளில் பகல்களில் தனிமையில் என
நனைந்துகொண்டேயிருந்தது

ஆனால் தேவன் இப்போதும்
நான் சந்தோஷமாக இருப்பதாகவே
நம்பிக் கொண்டிருக்கிறான்
ஆம்,
நம்பிக்கைதான் எத்தனை தூய்மையானது
நம்பிக்கைதான் எத்தனை உறுதி நிறைந்தது
நம்பிக்கைதானே எளியவர்களின் கடைசி அஸ்த்திரம்
அதுதானே சாமானியர்களின் பிடிப்பு

சொல்ல மறந்து விட்டேன்
இப்போது தேவனுக்கு இறக்கைகளில்லை
அதை என்னிடமே தந்து விட்டான்
ஏனெனில் தேவனுக்கு இறக்கைகள் தேவையற்றதாகவே இருக்கின்றன
ஆம் அற்புதங்களற்ற தேவன்களுக்கு
எப்போதுமே இறக்கைகள்
தேவையில்லாத வேண்டப்படாத ஒன்றாகவே இருக்கின்றன

ஆனால் ஒன்று மட்டும் புரிந்து கொண்டேன்
தேவன்கள் எப்போதுமே
சாமானியனாக இருக்கவே விரும்புகிறார்கள்
அதுவும் என் தேவன்
என்னை விட அதிகமாய் கனவு காணக்கூடிய
கனவுகளை நிறைவேற்றத்துடிக்கும்
சாமானியனாக இருக்கவே விரும்புகிறான்
இப்போதெல்லாம் அவனுக்கு
தேவதை துணையிருப்பதாய் நம்புகிறான்
அதுவம் அவன் இறக்கைளை பூட்டிக் கொண்ட
பறக்க முடியா தேவதை துணையிருப்பதாய் நம்புகிறான்

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments