பற்ற வைத்த நெருப்பொன்று…

0
1237
tumblr_pi4h8k5o0t1xu1ip1o1_1280

சூரியன் இன்னும் சில மணிநேரங்களில் அஸ்தமனம் ஆகிவிடும் போல் தெரிகிறது. எந்தவொரு நடமாட்டமும் அற்ற அந்தப் பெருந்தெரு வழியே வெள்ளைநிற கார் மட்டும் தன்னந்தனியே ஓர் சீரான கதியிலே நகர்கிறது. காரை ஓட்டிச்செல்லும் ஹர்ஷனின் கைத்தொலைபேசி இப்போது சிணுங்குகிறது. அதனை எடுத்து காதில் வைத்து பேசத் தொடங்கின் அவன்.
“ஹலோ…”
மறுபுறம் ஏதோ ஒரு பதில் அவன் காதுகளில்
“ சரி… நான் பாத்துக்கிறேன்” என்று சொல்லிய படியே கட் செய்தான்.
“யாரு…?” அருகே இருந்து வினாவினாள் அவனது மனைவி சயூஷா.
“அது எலெக்ஸன் விஷயமா…” என்று முடித்தான் ஹர்ஷன்.
கார் இன்னும் சில தூரம் நகர வாடிக்கையான பாதையை விடுத்து வேறு பாதைக்கு காரை செலுத்தினான் அவன்.
” ஏன் இந்த பாதை?” கேட்டாள் சயூஷா.

“அங்கே திருத்த வேலை ஆரம்பிச்சிருப்பாங்க. நாலு மணிக்கு பிறகு ரோட் ப்லொக். மத்தியானம் வரும் போது போர்டு பார்கலயா நீ?..”

“நான் பார்க்கலயே! எந்த இடத்தில?”

“உனக்கு கண் இருந்தால் தானே…..” என்று தொடர்ந்த உரையாடல் வாய்த்தகராறில் போய் முடிந்தது. நடந்த வாய்ச்சண்டையில் வீதியில் முன்னே சென்று கொண்டிருந்த இன்னொரு காரின் மீது இவர்களது கார் சென்று மோதியது. திடீர் பிரேக் உடன் இவர்களின் கார் நிறுத்தப்பட்டதோடு முன்னே சென்ற கார் வீதியின் அருகே நின்றிருந்த மரத்தில் மோதி நின்றது.
“ம்……எல்லாம் உன்னால் தான்” என்று அவளைத் திட்டியபடி காரை விட்டு இறங்கினான் ஹர்ஷன். மோதிய அதிர்ச்சியில் உறைந்து போன சயூஷாவும் சில கணங்களில் மீண்டவளாய் பதற்றத்துடன் கீழிறங்கினாள். முதலில் ஓடிச்சென்று டிரைவர் சீற்றை பார்வையிட்ட ஹர்ஷன் “ஓ மை காட்!” என்று தலையில் அடித்துக்கொண்டான். தொடர்ந்து மெல்ல மெல்ல அடியெடுத்து கணவனின் அருகே வந்து பார்த்தவள் நடுநடுங்கிப்போனாள்.

 

 

 

 

உள்ளே ஒரேயொரு யுவதி. காரை ஓட்டிக்கொண்டு வந்தவள் அவள்தான். தலையில் இரத்தக் காயங்களுடன் பேச்சு மூச்சற்றுக் கிடந்தாள். இருவரும் ஒரு நிமிடம் என்ன செய்வதென்ற மதியும் தோன்றாமல் பிரமை தட்டிப்போய் நின்றனர். ஹர்ஷன் தன் நடுங்கும் கைகளை ஜன்னல் வழியே உள்ளே விட்டு அடிபட்டு கிடக்கும் யுவதியின் மூச்சு இருக்கிறதா என்று பார்த்தான். சில கணங்களில் மின்சாரம் தாக்கியது போல் கையை படார் என வெளியே எடுத்து சயூஷாவைப் பார்த்தான். கண்களில் அத்தனை பதற்றம்.
“அவ செத்திட்டா….”என்றான் நலிவான குரலில்.
தங்களுடைய அர்த்தமற்ற சண்டையால் இன்று ஒரு உயிர் போக காரணமாகிவிட்டோம். அதுவும் ஒரு பெண். இது கொலை தான்…. என்று பலவும் இருவர் மனத்திரையிலும் ஓடிக்கொண்டது.

“இப்போ என்ன செய்றது? போலிஸ்க்கு போன் பண்ணுவமா?” என்று கேட்டாள் சயூஷா.

“ஏய்…….. ” என்று சினந்து கொண்டவன் சிறிது நேரம் அமைதியானான்.

“தேர்தல் வேற வருது. நான் மோதி இப்படி ஒண்ணு நடந்ததா மக்களுக்கு தெரிஞ்சா என் மரியாதை கெட்டுப்போய்டும்” என்றான் அவன்.

” அதுக்காக இப்படியே விட்டுட்டு ஓட சொல்றிங்களா? எப்படி பார்த்தாலும் போலிஸ் விசாரணைல மாட்டீடுவமே”

” ஏய்… விட்டுட்டு போக வேண்டாம். தடயத்தை அழிச்சிடலாம்”

 

 

 

 

 

பேசிக்கொண்டே இருக்கையில் தூரத்தில் ஓர் கார் வருவதைக்கண்டு இருவரும் சுதாரித்துக் கொண்டனர். எப்படிப்பார்த்தாலும் இந்த சம்பவத்தில் தனது பெயர் வந்துவிடக்கூடாது என்பதில் ஹர்ஷன் உறுதியாக இருந்தான். காரணம் அடுத்த வாரம் வரப்போகும் தேர்தலில் அவனும் ஒரு வேட்பாளர். தனது கார் மோதி ஒரு உயிர் போனதாக தகவல்கள் கசிந்தால் தன் வெற்றிக்கு தடையாகப் போய்விடும் என்பது அவன் தரப்பு எண்ணம். மக்களிடம் நற்பெயர் வாங்க எவ்வளவோ செலவு செய்து சேமித்த மரியாதையை ஒரே நாளில் புதைத்துவிட அவன் மனம் விரும்புமா என்ன?. செய்தி ஊடகங்கள் வேறு எங்கே இவன் மாட்டுவன், ஒன்றைப் பத்தாக்கி எழுதுவோம் என கழுகு போல் காத்துக் கிடக்கின்றன. இதனால் தன் பிழை வெளிவரக் கூடாது என்பதே ஹர்ஷனின் குறிக்கோள். தூரத்தில் வந்த கார் கிட்ட நெருங்குகையில் வேகம் குறைப்பதை இருவரும் உணர்ந்தனர். திருதிருவென முழித்தனர் இருவரும். அங்கே சயூஷாவில் ஓர் கணநேர மாற்றம் தோன்றியது.

” பாருங்க சார் என்னோட காருக்கு சரியான டமேஜ் பண்ணி இருக்கிங்க. முப்பதாயிரம் ரூபா செலவாகும் போல இருக்கு” என்று சம்பந்தமே இல்லாதவாறு போச ஆரம்பித்தாள் ஹர்ஷனை நோக்கி. என்னடா இது என்ற படி புரியாதவனாய் பார்த்துக்கொண்டிருந்த ஹர்ஷன் அவளின் விழி அசைவில் எதையோ விளங்கிக்கொண்டான். வருகின்ற கார்க்காரனிடம் நடந்ததை மறைத்துத் தப்பித்து விட அவள் தீட்டிய திட்டம் தான் அது.
” நீங்க திடீர்னு ஸ்லோ பண்ணினா அதுக்கு நானா பொறுப்பு?” என்று ஹர்ஷனும் பதிலுக்கு நடித்தான். வந்த கார் அவர்கள் எண்ணியது போலவே அவர்களின் அருகே நின்றது. சயூஷா சாதுர்யமாக அந்த யுவதி அடிபட்டு கிடக்கும் காரின் ஜன்னலை மறைத்த படி தன் உடலை நகர்த்திக்கொண்டாள்.

வந்த காரின் டிரைவர் வீதியில் நிலைகளை நோட்டம் விட்டபடி சயூஷாவைப் பார்த்து, “என்னம்மா? என்ன நடந்தது? என்ன பிரச்சினை?” என்று கேட்டார்.

“இல்ல சார் . பிரச்சினை ஒண்ணும் இல்ல. பின்னாடியே வந்து மோதீட்டார். கார்க்கு தான் கொஞ்சம் சேதம் நாங்க பேசி தீர்த்துக்கிறோம்” என்று சமாளித்து அக்காரை அவ்விடம் விட்டு செல்லும் படி செய்தாள் சயூஷா. மிகவும் புத்திசாலிப் பெண்தான் அவள்.

“சரி நாங்க நிறைய நேரம் இங்க நிக்கிறது நல்லதுக்கில்ல. நீ நம்ம காரை எடுத்திட்டு வீட்டுக்கு போ” என்றான் ஹர்ஷன்.

“அப்போ நீங்க?” கேட்டாள் சயூஷா.

“நான் இந்த காரை வேற இடத்துக்கு கொண்டுபோய் அவளாவே மோதிய மாதிரி செட்பண்ணி விட்டுட்டு வாரேன்”
“ரிஸ்க் இல்லையா? பயமா இருக்கு”

” பயப்படாதம்மா… போ” என்றான்.

 

 

 

 

அரைகுறை சம்மதத்தோடு அத்திட்டத்திற்கு தலையாட்டினாள் சயூஷா. அவள் ரோட்டில் யாராவது வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டிருக்க ஹர்ஷன் அந்த யுவதியின் உடலை பக்கத்து சீட்டில் இடம் மாற்றினான். அவனை முதலில் புறப்பட சொல்ல சரி என்று அவனும் காரை எடுத்துக்கொண்டு வீதியில் அந்த சவாலான பயணத்தினை ஆரம்பித்தான். கார் வீதியில் சயூஷாவின் பார்வை வீச்சின்னின்று மறைந்தது. பெரும் மூச்சொன்றை விட்டு தமது காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். காரை சாவி கொடுத்து இயக்க ஆரம்பித்தாள். இயங்கவில்லை. “கடவுளே! இது என்ன சோதனை?” என்றவாறு மீண்டும் முயற்சி செய்தாள். கார் இயங்க மறுத்தது. கணவனும் சென்றுவிட்டான். இருட்ட வேறு ஆரம்பித்து விட்டது. தன் கதி என்னவாகும் என்று பைத்தியம் பிடித்தவள் போல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாள். பயனில்லை. கணவனுக்கு போன் செய்யலாம் என்றால் கைத்தொலைபேசியும் எடுத்து வரவில்லை. சிறிது நேரத்திலெல்லாம் இருள் சூழ்ந்து கொண்டது. காரைவிட்டு இறங்காமல் உள்ளேயே அமர்ந்து கொண்டாள். அடிக்கடி காரை இயக்கவும் முயற்சித்தாள்; ஆனால் அவள் கஷ்டகாலம் ஒரே நாளில் அன்று தாண்டவம் ஆடியது. விதியுடன் போராடி சோர்ந்து போனாள் அவள்.

சற்று நேரத்தில் தூரத்தில் ஒரு வெளிச்சம். சயூஷா முகத்தில் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. அது ஒரு கார் தான். அதில் வருபவர்களிடம் ஏதாவது உதவி கோரலாம் என தன் காரை விட்டு இறங்கி வருகின்ற அந்தக் காரை கைகாட்டி மறித்தாள். அந்தக் காரும் நின்றது . உள்ளே இருந்து ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் இறங்கினார்.

“என்னாச்சுமா? என்ன பிரச்சனை? கார் பஞ்சரா?” என்று கேள்விகளை அடுக்கினார் அவர்.

“ஐயா, ஒருத்தன் வண்டிய பின்னாடியே கார்ல வந்து இடிச்சிட்டு ஓடீற்றான். கார் ஸ்டார்ட் ஆகுதில்லை”என்று பதிலளித்தாள்.

” நானும் மெக்கானிக் தான்” என்று கூறிக்கொண்டே நகர்ந்து, அவர் சயூஷாவின் காரை திருத்த எதையோ முயற்சித்தார். சிறிது நேரம் கழித்து வந்தவர் “இது இப்போ திருத்த முடியாது, நேரம் பிடிக்கும்” என்று கூறினார்.

” இப்ப நான் என்ன செய்வது?” என்று தலையில் அடித்துக் கொண்டாள் அவள்.

” அம்மா, பதற்றப்பட வேண்டாம். என் கூட வாங்க . எங்க வீட்ல தங்குங்க நான் காலைல காரை திருத்தி தாறேன்” என்றார் அவர்.
சயூஷா ஆரம்பத்தில் தயங்கினாள். யார் எவர் என்று தெரியாத ஒருவரை நம்பி எப்படி செல்வது ஆனால் இருட்டில் கிடைத்த ஒரே ஒரு உதவி அவர் தான். அவரைப் பார்த்தால் நல்லவர் போல் தான் தெரிகிறது. தன் வீடும் இருக்கும் இடத்தில் இருந்து வெகுதூரத்தில் என்பதால் அவருடன் செல்ல சம்மதிக்க அவர் தன் காரில் இருந்து ஒரு கயிற்றை எடுத்து தனது காரோடு அவளின் காரை கட்டி இழுத்தபடி அவளையும் ஏற்றிக்கொண்டு தன் வீடு நோக்கி சென்றார்.

 

 

 

 

கார் வீட்டு வாசலில் வந்து நின்றது. அவளை அவர் வீட்டினுள் வரவேற்றார். உள்ளே கதிரையில் அமர்ந்திருந்தார் அவரது மனைவி. மனைவியிடம் நடந்தவை எல்லாவற்றையும் கூறிமுடித்தார் அவர். ” எதுக்கும் கூச்சப்பட வேண்டாம்மா, இது உன் வீடுமாதிரி” என்று கூறிக்கொண்டே எழுந்து கையை காற்றில் நீட்டி, தடவிய படி சயூஷாவின் கன்னத்தில் கைவைத்துப் புன்னகைத்தார் அந்த அம்மா. அவளுக்கு அப்போது தான் புரிந்தது, பாவம் அந்த அம்மாவுக்கு கண்கள் தெரியாது என்பது. அவர்களுடன் பேசினாள், பழகினாள், இரவுணவு உண்டாள், ஒரே இரவில் அவர்கள் மனதில் இடம் பிடித்து குடும்பத்தில் ஒருத்தி ஆகிவிட்டாள் சயூஷா. அங்கே தான் அந்த அம்மா தனது மகள் மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த பணம் நகைகளை எடுத்துக்கொண்டு காதலனோடு ஓடிவிட்டதாக கூறி அழுதார். அவள் போனால் என்ன தான் ஒரு மகள் இருப்பதாக இருவரையும் சமாதானம் செய்தாள். பின் தன் கணவனுக்கு அங்கிருந்த தொலைபேசியில் அழைத்து தான் காலையில் வருவதாக நிலைப்பாட்டை கூறி, நாளை வந்து பேசுவதாக கட் செய்தாள். இரவு உறங்கும் நேரம் ஆயிற்று. பெரியவர் , தனது மகளின் அறையை சயூஷாவுக்கு காட்டி அங்கே உறங்கிக்கொள்ளுமாறு கூறிவிட்டு அவ்விடம் விட்டகன்றார்.

உள்ளே வந்து அறையை சுற்றும் முற்றும் பார்த்து மின்விசிறியை சுற்றச்செய்து கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டாள். அறையில் ஒரு மூலையில் கட்டில். கட்டிலையொட்டி ஒரு அலுமாரி. இன்னொரு மூலையில் சிறிய மேசை, அதில் சில புத்தகங்கள். அருகே ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி என அழகாக இருந்தது. அணிந்திருந்த ஆடையை மாற்ற ஏதும் மாற்று உடை இருக்குமா? என்று எண்ணியிருப்பாள் போல. எழுந்து அந்த அலுமாரியை திறந்தாள். உள்ளே அலங்காரப் பொருட்கள், ஆடைகள் என அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

ஆடை ஒன்றைத் தேடும் முயற்சியில் இருந்த அவளுக்கு கையில் ஓர் டைரி அகப்பட்டது. ஆம் அது ஓடிப்போன அந்த பெரியவரின் மகளின் டைரி. அடுத்தவர் டைரியை விரிப்பது தகாது என்று அதை மீண்டும் வைக்க முற்பட கைதவறி கீழே விழுந்தது. அதை அவள் எடுக்க அதிலிருந்து சில போட்டோக்கள் கீழே விழுந்தது. அதை எடுத்துக்கொண்டு கட்டிலில் வந்து அமர்ந்து ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தாள் சயூஷா. அந்தப் பெண் மிகவும் அழகாக இருந்தாள். ஆனால் எங்கேயோ பார்த்தவள் போல் உள்ளதான ஒரு மயக்கம் அவளுக்கு. அடுத்த போட்டோவை பார்த்தவள் அவ்விடத்தில் உறைந்து போனாள். கைகள் நடுங்கியது. கண்களில் ஒருவித கலக்கம். உடல் வியர்வையில் நனைந்தது. அந்தப் பெண் ஒரு காரோடு நிற்கும் போட்டோ தான் அது. அவள் வேறு யாரும் அல்ல வரும் வழியில் தங்கள் காரில் மோதி உயிர் விட்டவள் அவள் தான். மோதிய அதே காரோடு நிற்கும் அந்தப் புகைப்படத்தை பார்த்த அவளின் இமைகள் கூட இமைக்க மறுத்தது. ஏராளமான கேள்விகள் மனதில் ஓடியது. நடந்த உண்மையை தாயும் தந்தையும் அறிந்தால் எவ்வளவு வேதனைப்படுவார்கள்?, புதிய வாழ்வைத் தேடிச்சென்றவளை எமது பயனற்ற சண்டையால் கொன்றுவிட்டோமே?, அந்த அம்மாவும் அவளது கணவனும் என் மீது காட்டும் அன்பின் நிமித்தம் இந்த விஷயத்தை நான் மறைப்பது அழகா? என்ற பல கேள்விகள் அவளிடம். விடையற்ற வினாக்களோடு அடுத்த போட்டோவை பார்த்தாள். இங்கு தான் இன்னுமோர் பேரதிர்ச்சி அவளுக்காய் காத்திருந்தது. அதிர்ந்து போனாள். நடப்பவை கனவா நனவா என்ற சந்தேகம் அவளுக்கு. இது எவ்வகை உணர்ச்சி என்பதை அறியாதவளாய் மனவலிமை இழந்தாள். கைகள் இன்னும் நடுங்கின. நடக்கும் நிகழ்வுகளில் உள்ள சதி என்ன என்பதை அறிய தீயென மனம் கொதித்தது அவளுக்கு. தன் கணவனோடு நிற்கும் அந்தப் பெண்ணின் புகைப்படம் தான் அது. தன் கணவன், அவள் இறந்து கிடந்த போதும் அவளை தெரிந்து போல் காட்டிக்கொள்ளவில்லையே?! அது எதிர்பாராத விபத்தா? அல்லது….. இல்லை இருக்காது பின்புறத்தில் மோதியதால் கட்டாயம் இறப்பாள் என்பது சாத்தியமற்றது… அப்போ எதற்காக ஹர்ஷன் நடிக்க வேண்டும்?.சரி எல்லாம் போகட்டும் இவளுக்கும் ஹர்ஷனுக்கும் என்ன தொடர்பு? என்று மீண்டும் பல கேள்விகள் அவள் மனதில் ஊசலாடத் தொடங்கியது. எல்லாவற்றுக்கும் விடை எங்கே பெறுவேன் என்று தவித்த சில கணங்கள் ஓட முகத்தில் ஒரு தெளிவு பெற்றாள். ஆம்… விடை பெற ஒரு மூலம் கிடைத்தாயிற்று. அந்த டைரி. வினாக்களின் விடைகளை விழியில் எடுக்க டைரியின் ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்ட ஆரம்பித்தாள். இறுதியில் அவள் தலையில் விழுந்தது ஒரு பேரிடி மட்டுமே. அந்தப் பெண் காதலித்து ஓடிப்போனாளே அது வேறு யாருடனும் அல்ல ஹர்ஷனுடன் தான். டைரியை தொப் என்று மூடி இருந்த இடத்தில் வைத்து விட்டு மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டாள். சிறிது நேரம் கண்களை மூடி மனதை திடப்படுத்திக்கொண்டவளாய் எழுந்து மின்விளக்கை அணைத்தாள் அந்நாள் உறக்கத்திற்காக.

 

 

 

 

மறுநாள் பொழுது புலர்ந்தது. சயூஷா காலை எழுந்து வெளியே வர வீட்டு ஹாலில் அந்த அம்மாவும் ஐயாவும் அவளுக்காக காத்திருந்தார்கள். ” குட் மோர்னிங் மா , உன்னோட கார் ரெடி ஆயிடுச்சு” என்றார் அந்த ஐயா. சயூஷா அவர்களுக்கு நன்றி கூறி தேநீர் அருந்தி சிறிது நேரம் பேசிவிட்டு விடை பெற்றுக்கொண்டாள். இன்னொரு நாள் வந்து சந்திப்பதாக கூறி காரை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்குப் பயணமானாள். வீட்டை அடைந்து உள்ளே செல்ல ஹாலில் ஹர்ஷன் எங்கோ புறப்பட தயாராகி சோபாவில் அமர்ந்திருந்திருந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தான். சயூஷா வருவதைக் கண்ட அவன் ” ஹேய் வந்திட்டியா? நைட் பேசின நம்பருக்கு கால் பண்ணி பேசினேன். நீ புறப்பட்டாச்சு என்டாங்க. உனக்காக தான் வெயிடிங். எங்க கார் சாவி கொடு. எலக்ஸன் விஷயமா வெளில போகனும்”என்றான். சயூஷா எதையும் காட்டிக்கொள்ளவில்லை. கார் சாவியைக் கொடுத்தாள்.
” அந்தப் பொண்ண என்ன செஞ்சிங்க”
கேட்டாள் அவள். பதில் ஏதும் பேசாமல் மௌனமாய் நின்றான். டிவியில் ஒரு செய்தி, இருவரும் திரும்பிப் பார்த்தார்கள் டிவியை. ” கார் டிரான்ஸ்பார்மரில் மோதி ஏற்பட்ட தீ விபத்தில் கார் ஓட்டிச்சென்ற யுவதி ஒருவர் உயிரிழப்பு”என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியோடு ஹர்ஷனின் முகத்தைப் பார்த்தாள் சயூஷா.
” எனக்கு வேற வழி தெரியல. எனக்கு இந்த எலக்ஸன் முக்கியம் ” என்று மனிதத்தன்மை அற்ற பதில் மட்டும் அவனிடம். அவ்விடம் நீங்கி காரை எடுத்துக்கொண்டு எங்கேயோ புறப்பட்டான். அவன் சென்ற உடனேயே வீட்டுக் கதவை அடைத்து விட்டு அறைக்கு ஓடினாள். ஹர்ஷனின் அலுமாரி முதற்கொண்டு அனைத்தையும் சோதனையிட்டாள் வேறு ஏதாவது ஆதாரங்களைத் தேடி. வாய்ப்பாக எதுவும் கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே அமர்ந்தாள். நடந்தவை எல்லாம் அவள் கண்முன் காட்சியாய் நிழலாட ,வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டது. சலித்துக்கொண்டே வந்து கதவைத் திறந்தாள்.

வெளியே, கையில் ஒரு சூட்கேஸ் உடன் ஹர்ஷனின் நண்பி அட்சயா நின்றிருந்தாள். “வாங்க” என்று உள்ளே அழைத்து அமர வைத்தாள்.
” ஹர்ஷன் இல்லையா?” என்று கேட்டாள் அக்சயா.

“இல்ல, ஏதோ எலக்சன் விஷயமா போய்ட்டார்”

“ஓ…. நேற்று நைட் சொன்னனே வருவன்னு. சரி மறந்திட்டார் போல” என்று முடித்தவள் புறப்படத் தயாரானாள். அவளை டீ குடித்துவிட்டு செல்லும் படி சயூஷா கேட்க சரி என்றாள். சயூஷா சுட சுட ஒரு டீயை போட்டு வந்து அக்சயாவிடம் கொடுத்தாள். அதை மெல்ல மெல்ல குடித்து முடித்த அக்சயா கண்கள் மேலே செருகி அதே இடத்தில் மயக்கம் அடைந்தாள். மீண்டும் ஒரு இடத்தில் கண் விழித்தாள். ஒரு கதிரையில் அமர்த்தப்பட்ட நிலையில் கதிரையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தாள். ஹர்ஷன் வீட்டு ஸ்டோர் ரூம் அது. கதவு அடைத்தபடி ஒரேயொரு லைட் மட்டும் எரிந்து கொண்டிருந்தது அங்கே. கண்களை திறந்தவள் நேரே கண்டது முன்னே அமர்ந்திருந்த சயூஷாவை.
” ஏய்…. என்ன எதுக்காக கட்டிப் போட்டு வச்சிருக்க? அந்த டீயில என்ன கருமத்த கலந்து என்னை மயங்க வச்ச? மரியாதையா என்ன அவிழ்த்து விடு” என்று கோபத்துடன் கத்தினாள் அக்சயா.
சயூஷா எதையும் பேசாமல் எழுந்து அக்சயாவை நோக்கி நடந்து வந்தாள். அருகே வந்தவள் அக்சயாவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டு தன் வாயில் விரல் வைத்துக் காட்டி அமைதியாக இரு என்று சைகையில் ஏவினாள். ஆனால் அடங்காமல் துள்ளிய அக்சயாவிடம் பேச ஆரம்பித்தாள் சயூஷா. ” நேற்று கார் ஆக்ஸிடன் ல செத்துப்போன பொண்ணப்பத்தி உனக்கு நல்லாவே தெரியும். உனக்கு தெரிஞ்ச உண்மை எல்லாத்தையும் இப்ப செல்லு இல்லன்னா…..”

“எந்தப் பொண்ணு? எனக்கு யாரையும் தெரியாது”

“என் பொறுமைய சோதிக்காத. உண்மைய சொல்லு…”

” எனக்கு தெரியாது”
கன்னத்தில் மீண்டும் ஒரு அறை விட்டாள்.
” ஏய் அவள தெரியாம , அவ செயின் எப்பிடி உன் கழுத்துக்கு வந்திச்சு ” என்று முடியைப் பிடித்தவள் உண்மையை சொல் என்று கத்தினாள். ஆம் அக்சயா கழுத்தில் அணிந்திருந்த செயின் தான் அவளுக்கு கிடைத்த இன்னொரு துருப்புச்சீட்டு. அந்த செயின் இறந்த பெண்ணின் போட்டோ அனைத்திலும் அவள் கழுத்தில் கிடந்ததை சயூஷா அவதானித்திருப்பாள் போல. குறிப்பாக அந்த நீலக்கல் பதிக்கப்பட்ட டாலர் இன்னும் வலுச்சேர்த்தது அவளுடையது தான் என்பதை. கண்களில் கோபம் நெருப்பாய் எரிந்தது. அவளிடம் தக்க பதில் இல்லை. வாயை கட்டினாள். ஒரு இடுக்கியை எடுத்துவந்த சயூஷா அக்சயாவின் விரல் நகங்களை புடுங்கி எடுக்க ஆயத்தமானாள். அவளிடம் உண்மையை பெறுதலில் அத்தனை தீவிரம். முதல் நகம் ஒன்றைப் பிடுங்கினாள். இதோ இரண்டாவது. அக்சயா கத்த முடியாமல் உடலை உதறி துடிக்கிறாள் வலியால்.அவள் கண்கள் சிவந்து கண்ணீர் நதி போல் வழிகிறது.

மூன்றாவது நகத்தை பிடுங்கத் தொடங்க உடலை இன்னும் உதறி “உண்மையை சொல்கிறேன்” என்ற பாணியில் தலையாட்டினாள். சயூஷா இடுக்கியை நிலத்தில் போட்டுவிட்டு அவள் வலி அடங்க சிறிது அவகாசம் வழங்கினாள்.
ஓரிரு நிமிடங்கள் கடக்க அக்சயாவின் வாய்க்கட்டை அவிழ்த்துவிட்டாள். இப்போது அட்சயா உண்மையை சொல்ல ஆரம்பித்தாள்.

” ஹர்ஷனுக்கு எலக்ஸன் பிரச்சார விஷயமா காசு தேவைப்பட்டுச்சு. எனக்கும் லைப்ல அடுத்த வழியப் பார்க்கிறதுக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டுச்சு. காசு தேவைக்காக நானும் ஹர்ஷனும் திட்டம் போட்டு குறிவச்ச ஒரு பொண்ணுதான் நேற்று செத்துப்போன பொண்ணு”

“ஓ…….அவ ஹர்ஷனத் தானே லவ் பண்ணி ஓடிவந்தா?. எனக்கு எல்லாம் தெரியும். எதையும் மறைக்காம எல்லா உண்மையும் சொல்லு”

“………” எதுவும் பேசாமல் இருந்தாள் அக்சயா. மீண்டும் இடுக்கியை எடுக்க தயாராக பயந்துபோய் மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

” அவள லவ் பண்றதா சொல்லி ஏமாற்றி ஓடிவர வச்சு அவகிட்ட பணத்தை ஏமாற்றி பறிச்ச பிறகு அவளுக்கும் பைத்தியம் பிடிக்க வைக்குற ஊசிய ஏத்தி பைத்தியமாக்கி அவள பைத்திய ஹாஸ்பிட்டல்ல சேர்க்கிறது தான் எங்களோட ப்ளான். எங்க ப்ளான் படியே அவளும் ஹர்ஷன நம்பி லட்சக்கணக்கான பணம், நகைகளோட ஓடிவந்தா. அவள என் வீட்டில தான் தங்க வச்சோம். நேற்று ஈவ்னிங் நான் எங்க ப்ளான் பற்றியும் அவள மென்டல் ஆக்கிற ஊசி விஷயமாவும் ஒரு டாக்டர் கிட்ட நான் பேசும்போது அதை கேட்டுட்டாள். அங்க இருந்து தப்பிக்க பார்க்க நான் அவள தடுக்க முயற்சி செய்தேன். கடைசில ஒரு கம்பியால அவ தலைல பலமா அடிச்சிட்டேன். அவ அதில இருந்தும் தப்பிச்சு என்னை வீட்டுக்கயே வச்சு பூட்டீற்று காரை எடுத்துட்டு புறப்பட நான் ஜன்னல் வழியா எந்தப் பக்கம் போறானு பார்த்து உடனே ஹர்ஷனுக்கு போன் பண்ணி நடந்ததை சொன்னேன். அவன், தான் பார்த்துக்கிறதா சொல்லி கட் பண்ணினான். “இவ்வாறு கூறவே, அப்போது தான் சயூஷாவுக்கு நேற்று மாலை காரில் செல்லும் போது ஹர்ஷனுக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஞாபகம் வந்தது. தன்னை முட்டாளாக்கிய ஹர்ஷனை எண்ணி சினம் கொண்டவள் மீண்டும் அவளிடம் தொடர்ந்தாள். இதையடுத்து அக்சயா சொன்ன ஒன்று இன்னும் அவளை உறைய வைத்தது. சில நிமிடங்கள் கண்ணீர் சிந்தவும் செய்தாள். ஹர்ஷனின் கொடூர மனநிலையை எண்ணி அருவருத்தாள்.

 

 

 

 

 

எல்லாம் முடிஞ்சு நேற்று ஈவ்னிங் ஹர்ஷன் தனக்கு கால் பண்ணி “அவ செத்துப்போய்ட்டாள். இனி பிரச்சினை இல்லை. எனக்கு சேர வேண்டிய பணத்தை நாளைக்கு எடுத்திட்டு வீட்டுக்கு வா” என்றான். “எப்படி செத்தாள்” என்று கேட்க. “நீ போன் பண்ணி விஷயத்தை சொன்ன உடனேயே அவ போன பாதைக்கு காரை விட்டு சயூஷாகூட ஒரு சண்டைய வர வச்சு அந்த பிரச்சினைல அவ கார மோதுற மாதிரி வேணும்னே மோதினேன். அவ கார் மரத்தில மோதி நின்னுச்சு. தலைல அடிபட்டிருந்ததால மயங்கிப்போய்ட்டாள். கார் அடிச்சு அவ செத்துட்டானு நம்பவச்சு சயூஷாவ தனியே அனுப்பி நான் அவள கொண்டு போய் உயிரோட கார்ல வச்சு எரிச்சிட்டேன்” என்று ஹர்ஷன் கூறியவற்றை அக்சயா சொல்ல சொல்ல சயூஷாவுக்கு இரத்த அழுத்தம் கூடியது.நடந்தவை எல்லாம் அப்போது தான் அவளுக்குப் புரிந்தது. தனது பணத்தாசை , அரசியல் வெறிக்காக ஒரு பெண்ணை உயிரோடு எரித்த அவனை நினைக்க நினைக்க கோபம் உச்சத்தை எட்டியது. நடந்தவை எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக்கி காரியமாற்றிய ஹர்ஷனுக்கு தக்க அடி கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவானாள் சயூஷா.

அக்சயாவின் வாயைக் கட்டினாள். வெளியே வந்து கதவைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டாள். அக்சயா கொண்டுவந்த சூட்கேஸ் ஹாலில் கிடந்தது. அதனை எடுத்து ஒழித்து வைத்துக்கொண்டாள். நடந்தவை எதையும் தெரிந்தவள் போல் அல்லாது இயல்பாகவே ஹர்ஷனின் முன்பு நடிக்க ஆரம்பித்தாள். அக்சயாவை காணவில்லை என்பதால் பணம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அவள் தலைமறைவாகிவிட்டாள் என்பது ஹர்ஷனின் எண்ணம். அவள் தன் வீட்டில் தான் உள்ளாள் என்று அறியாமல் தேடி அலைந்தான். சில நாட்கள் ஓடின. எலக்ஸன் நாளும் வந்தது. ஓட்டுக்களை எண்ணுகின்ற நேரமும் வந்தது. ஹர்ஷன் தனது கட்சி அலுவலகத்தில் கட்சிக்காரருடன் இருந்து தேர்தல் முடிவுகளை பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென ஹர்ஷனின் போன் ஒலித்தது. யாராக இருக்கும் என எண்ணியபடி காதில் வைத்தான். ” ஹலோ…. நீ காரில ஒரு பொண்ண வச்சு எரிச்சு கொலை பண்ணின ஆதாரம் இப்போ என் கிட்ட இருக்கு. இது வெளில போனா உன் நிலமையை யோசிச்சு பார். எந்த கேள்வியும் கேட்காம உன் வீட்டுக்கு கிளம்பி வா” என்று ஒரு ஆணின் குரல் கேட்டதோடு போன் கட் ஆனது. ஹர்ஷனுக்கு குப் என்று வியர்த்தது. படார் என எழுந்து எதுவும் பேசாமல் காரை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான். இன்னும் சில நேரங்களில் தேர்தல் முடிவுகள் வந்து விடும். வெல்வோம் என்ற நம்பிக்கை வேறு அவனுக்கு. இதற்கிடையில் அந்த சம்பவம் தெரிய வந்ததால் என்ன ஆகும் என்ற பரபரப்பு அவனிடம் தொனித்தது.

கார் வீட்டு வாசலை அடைந்தது. காரை நிறுத்தி விட்டு இறங்கி விரைவாக வீட்டினுள் ஓடினான். அங்கே சயூஷா சோபாவில் அமர்ந்திருந்த படி தேர்தல் முடிவுகளை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தாள். எதுவும் பேசாமல் அமைதியாக மெல்ல மெல்ல கால் வைத்து சயூஷாவை நோக்கி நடந்தான். அத்தனை பதற்றம் அவனிடம். வந்தவனை சயூஷா திரும்பி பார்த்தாள். ” வாங்க சார், என்ன பயந்திட்டீங்களா?” என்று கேட்க ஹர்ஷன் எதுவும் புரியாமல் நின்றான். பின்னே இருந்து ஒரு பளார் என அடி ஹர்ஷனின் தலையில். அதே இடத்தில் மயங்கி வீழ்ந்தான் . மீண்டும் கைகள் கதிரையில் கட்டிய நிலையில் கண்விழித்தான் ஹர்ஷன். அவன் விழிக்கவென்று நீர் தெளித்து எழுப்பியவள் சயூஷா.
” ஏய் என்ன நடக்குது? எதற்காக என்னை கட்டிப்போட்டு வச்சிருக்க?” என்று கேட்க அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல் பின்னே நகர்ந்தாள் சயூஷா. பின்னே அவளோடு சிஐடியில் வேலைசெய்யும் நண்பன் அஸ்வின் நின்றுகொண்டிருந்தான். ஆம் போனில் பேசி வரவழைத்தது, கம்பியால் தலையில் அடித்தது எல்லாம் அஸ்வின் தான். இப்போது அஸ்வின் பேச ஆரம்பித்தான். ” இங்கே என்ன நடக்குதா?……. தீபாவுக்கான நீதி இங்க தான் கிடைக்கப்போகுது” என்றான். தீபா என்ற பெயரைக் கேட்டு ஆடிப்போனான் ஹர்ஷன். அதே அதிர்ச்சியுடன் சயூஷாவை பார்த்தான். கையைக் கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டு நின்றவள் ” எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு. பாவம்…. அந்த தீபாவை உன் பணத்தாசைக்காக உயிரோடு எரிச்சிட்டியே…இனி நீ தப்பிக்க முடியாது. சட்டத்தை நீ செல்வாக்கால விலைக்கு வாங்கீடுவ.அதனால நானே சட்டத்தை கையில் எடுத்துக்கிட்டன்” என்ற படியே டிவியின் சத்தத்தை கூட்டினாள். தேர்தல் இறுதி முடிவுகள்……… மூவரிடமும் அமைதி நிலவியது.

திடீரென டிவியை நிறுத்தினாள். முடிவுகளை தெரியாமலே செத்துப்போ என அவன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி வாசல் வரை ஊற்றி சென்றாள். அஸ்வின் சமையலறையில் கேஸ் சிலிண்டரை வாயு வெளியேறும் படி திறந்து விட்டு வாசலில் வந்து மண்ணெண்ணெயில் தீயை தட்டி வைத்து விட்டு இருவரும் வீட்டில் இருந்து பின்புறமாக சற்று தூரம் நகர்ந்தனர். சற்று நேரத்தில் வீடு பெரிய வெடிப்பு முழக்கத்துடன் எரிய ஆரம்பித்தது. உள்ளே இரண்டு குரல்கள் உயிரை காக்க வேண்டி கத்தும் ஓசை கேட்டது. வெளியே நின்று அஸ்வினும் சயூஷாவும் வீடு எரிவதை பார்த்தபடி மௌனமாய் நின்றனர். நேரம் நகர நகர வீட்டு கேற்றில் தீயணைப்பு துறை வந்தாயிற்று. ஆனால் உள்ளே இருவரும் சாம்பலாய் போயிருப்பர்…..
மிக மிக தாமதம், தீயை அணைத்தும் பயனில்லை. கேட்டில் அவர்கள் தீயை அணைக்க தயாராகிக் கொண்டிருக்க, இப்போது அஸ்வின் சயூஷாவை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வருகிறான். மயக்கத்தில் கிடக்கும் அவளது முகத்தில் கரிப்பூச்சுக்கள் ஆடைகளில் ஆங்காங்கே தீயால் எரிந்த படி உள்ளது. அவளை வெளியே நின்ற தனது காரின் முன் சீட்டில் அமர்த்திவிட்டு அஸ்வின் காரை எடுத்தான். சிறிது தூரம் கார் சென்றது. சயூஷா கண்ணை விழித்துக் கொண்டு அஸ்வினை பார்த்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சத்தமாக சிரித்துக்கொண்டனர். சயூஷா சிரித்துக்கொண்டே அஸ்வினின் தோளில் சாய்ந்து கொண்டாள். கார் அந்த வீதியில் நகர்கிறது காரின் பின் சீட்டில் அக்சயா கொண்டுவந்த பணமுள்ள சூட்கேஸ் உடன்.

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments