பாலைதீவு – தீவுகள் தேடி பயணம் 01

2
1087
IMG_5499-630c9896

தம்பி, இங்க எல்லாரும் சும்மா வந்து போக ஏலாது, ஒரு  அழைப்பு இருக்கோணும். மனசில ஒணணு நினைச்சு நேர்ந்து கும்பிட்டு பாருங்க நடக்குதா இல்லையா எண்டு, இவர் லேசுப்பட்ட ஆள் இல்லை.. நீங்க சைவக்கார ஆக்கள் தான்; நான் சொல்லுறன் நடக்குதா இல்லையா எண்டு பாருங்க” – பாலைதீவு  நோக்கிய பயணத்தில் எங்களை ஏத்திச் சென்ற படகு ஓட்டுநர் அண்ணாவின் கதைகளோடு அலைகளை கடந்து மீன்பிடி வள்ளம் பயணிக்கின்றது. 2020.03.14

பாலைதீவு? அது எங்க இருக்கு….

வடக்கு பகுதியில தீவுகள் எண்டா சப்த தீவு எண்டு எங்களுக்கு 7 தீவுகள் தான் ஞாபகம் வரும். (நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, புங்குடுதீவு, மண்டதீவு,வேலணை, காரைநகர்), இங்க மட்டும் தான் ஆக்கள் இருக்கினம். இதைவிட கனக்க சின்னசிசின்ன தீவுகள் இருக்கு, பரப்பளவில் சிறிய தீவுகள். ஆழ்கடலில் மீன்பிடிக்க சொல்வோர் தரித்து செல்ல பயன்படுத்துவர். கச்சதீவு, கக்கடதீவு, குருசடித்தீவு, பாலைதீவு இரணைதீவு இவ்வாறு பல தீவுகள் உண்டு. இந்த தீவுகளின் ஒரு கிறிஸ்தவ ஆலயம் அமைந்திருப்பதுடன் வருடத்தில் ஒரு நாள் மக்கள் அன்று சென்று திருவிழாவினை கொண்டாடி வருவதும் நூறுவருட பாரம்பரியமாக இருந்துவருக்கின்றது.

அப்பிடி ஒரு தீவுதான் பாலைதீவு. கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலகத்தின் நிர்வாக அலகிற்கும், வலைப்பாடு கிறிஸ்தவ தேவாலய பங்கிற்கும் உரித்துடையதாக அந்தோனியார் ஆலயம் அமையப் பெற்றுள்ளது.  ஒரு மணி நேரத்தில் நடந்து சுற்றி பார்க்க கூடிய அளவிலான பரப்பளவினையுடைய இந்த தீவின் முழுமையான கட்டுப்பாடு கடற்படையினரின் கைவசமுள்ளது. இந்த ஆலயம் 2020ஆம் ஆண்டுடன் கட்டப்பட்டு 125இனை எட்டியுள்ளமையுடன் நூற்றாண்டு கால நினைவுகளை சுமந்து நிலைத்திருகின்றது.

சும்மாவே எல்லாருக்கும் புதிய இடங்களை பார்க்கும் ஆர்வம் + கோளாறு இருக்கும். அப்பிடியான ஒரு ஆர்வக் கோளாறினால் மண்டைதீவு மேற்கு முனைக்கு சென்ற போது, ஊர் காரர் ஒருவருடன் கதைக்கும் போதுதான் பாலைதீவு எண்ட பேரும் கச்சதீவு போல இங்கயும் திருவிழா நடப்பதும் தெரிய வந்தது. அப்பவே அங்க போகணும் எண்ட திட்டமும் ஆரம்பமாகியது.  உண்மையா சொல்ல போனால் இப்படி ஒரு தீவு வடக்கில அதுவும் யாழில் இருந்து 2 மணி நேர கடல் பயணத்தில் போகலாம் எண்டதும் இவ்வளவு நாளும் தெரியாமல் இருந்த அவமானகத் தான் எனக்கு இருக்கு. நாங்க நாடு பூராகவும் எவ்வளவு இடங்களுக்கு போய் இருக்கம் எங்கள சுத்தியே தெரியாமல் அவ்வளவு வரலாறு இருக்கு, இன்னும் உலகுக்கு தெரியாத ஆவணப்படுத்த பட வேண்டியது நிறையவே இருக்கு.

பாலைதீவுக்கு சனிக்கிழமை காலை போவதாக முடிவு. வெள்ளி பின்னேரம் குருநகர் மீன்பிடி இறங்குதுறையில் போய் விபரம் விசாரிப்பம் எண்டு போய்..  போறதில இருந்து ஆலயம் பற்றிய முழுக்கதையும் கேட்டு அறிந்துவிட்டம்.

“அண்ணா நாங்க 5 பேர் போவம், போட்டுக்கு எவளவு காசு வரும் –

தம்பி காசா, கோவிலுக்கு போறீங்க விடிய வாங்க, காசெல்லாம் இல்லை!

எண்டு அந்த போட் ஓடும் அண்ணன் சொன்ன சொல்லில் உரிமையும், குருநகர் ஆக்கள் ஒரு முரட்டு குணம் உடையவர்கள் மற்றும் அவர்களுடன் பழகுவது கடினம் என்று இருந்த மனநிலை ஒரு நொடியில் உடைந்தது. யாழில் இருந்தும் நாம் மனதால் தூரமாகவே இருந்து இருக்கின்றோம்.

போறது எல்லாம் சரி.  பாலைதீவு பற்றி இணையத்தில் தேடினால் பெருசா ஒண்ணுமே இல்லை.. அதுகூட அங்க போறதுக்கு ஒரு ஊக்கியாக இருந்த. என்கிட இடங்களை நாங்க பிரபலப்படுத்தாமல் யாரு பிரபலப்படுத்துற. நூலக நிறுவன ஆவணகம் இணையத்தின் சேகரத்தில் பாலைதீவினை இணைக்கப்போறன் எண்ட குட்டி புழுகம் வேற.

வழமையாக எங்கேயும் போற எண்டால் 10 பேரில் திட்டம் போட்டு யாருமே இல்லாமல் திட்டம் கைவிடுற எங்களுக்கு புதுசு இல்லை. ஆனால் இந்த முறை தனியா எண்டாலும் போறதா முடிவு.

14.03.2020 காலை 6.30 குருநகர் மீன்பிடி இறங்குதுறை.

பபித்திரன், கஜேந்திரன்,நாகலோஜினி, சில்வியா என்னோட சேர்த்து 5 பேர் பயணத்துக்கு தயார், பயணம் எண்டதை விட முதலாவதாக இப்புவியில் ஒரு இடத்தில் தடம் பதிக்க போகின்றோம், புது அனுபவம் அனுபவித்திட போகின்றோம். அந்த உணர்வு புதிய பயணங்களை பயணப்படுபவர்களுக்கான போதை, இந்த போதையினால் தான் அல்ககோல் போதைக்கு ஆளாகாமல் இருக்கின்றேனோ என்னமோ.
எங்கட பயணம் மீன்பிடிக்கும் படகில் 14 பேருடன் ஆரம்பம். எனக்கு மனதிலே ஒரு பயம் இருந்த வெளியில் காட்டி கொள்ளவில்லை. என்னை நம்பி 4 ஜீவன் வந்து இருக்கு எல்லா. ஒரு35 வருடத்துக்கு முன்னால் படகு கவிழ்ந்து 45 பேர் இறந்த வரலாறு இருக்குதாம். நான் கோவில் போய் வீட்ட வந்தா பிறகு அம்மா சொன்னாவா; நான் பாலைதீவு போறன் எண்ட அது தான் நினைவுக்கு வந்த எண்டு.

கடலிலிருந்து குருநகர் 5மாடி குடியிருப்பு

குருநகர் தொடர் மாடி குடியிருப்பினை கடந்து பாஷையூர், யாழ் முகத்துவார்த்தினை தாண்டி படகு நகர்கின்றது.

தம்பி அங்க ஒரு கோபுரம் தெரியுது எல்லா அது தான் கல்முனை, எங்கட பொடியள் ட பெரிய தளம் அங்க தான் இருந்த, ஆட்லறி தளம்.  அந்த இடம் பாதை வழியாக எனக்கு நன்றாக பரீட்சயமான இடம்; சிறகுகள் புத்தகம் கொடுக்க வினாசியோடை, யாழ் இந்து சாரணர் ஒன்றுகூடல் செய்த இடம். தெரிந்த ஒரு இடத்தினை கடல் வழியாக பார்க்கும் வாய்ப்பாக அமைந்தது. ஊர்க்கதை கடற் கதையுடன் பயணம் நீள்கின்றது. கூகிள் மைப்பின் உதவியுடன் எங்க நிக்கிறம் எவ்வளவு தூரம் எண்டு ஒரு ஆர்வக்கோளாறில் பார்க்கவும் தவறவில்லை.

தம்பி, மனசில ஒன்றை நினைத்து நேர்ந்து கும்பிட்டு பாருங்க, நடக்குதா இல்லையா எண்டு, இருந்து பாருங்க நீங்க அடுத்த வருடம் தனியாக போட் பிடித்து போக வருவியள். அப்பிடி புதுமையான ஆண்டவர் அவர். இங்க போக எல்லாருக்கும் அமையாது. ஓம் எங்களுக்கு அந்த மண் போக சந்தர்ப்பம் குடித்து வைத்திருக்கு.

எங்களை ஏற்றிச்சென்ற படகோட்டி

தூரத்தில் தீவு தெரிய ஆரம்பம். நான் நினைக்கிறேன் ஒரு 200 படகில் ஆக்கள் வந்துஇருப்பினம். பள்ளிக்குடா, வலைப்பாடு, பூநகரி, குருநகர், கற்பிட்டி, புத்தளம் மண்டைதீவு, நாவந்துறை என சூழவுள்ள இடங்களில் இருந்து வந்து இருந்தனர். கூடுத்தலானோர் முதல் நாளே வந்து கூடாரம் அமைத்து தங்கியிருந்து அடுத்த நாள் திரும்புவார்கள். நகை அடகு வைத்துகூட இங்க வந்தோர் இருக்கின்றனர்.

2 மணி நேர பயணத்தின் பின் பாலைதீவு மண்ணில் கால் பதிக்கின்றோம். நாங்க போன நேரம் 8.33

பூசை நடைபெறுகின்றது… அந்தோனியார் திருச்சொரூப பவனி.. தொடர்ந்து பாதிரியார் தமிழில் மக்களுக்காக வேண்டிக் கொள்கின்றார். சொந்த மொழில் எந்த இறைவனையும் கும்பிடுற தனிசுகம் தான்.

ஆலயம் மற்றும் சுற்றுப்புறம் முழுவதுமே மக்கள் வெள்ளம் சூழ்ந்திருந்தது. நேர்த்திக் கடனுக்காக பிஸ்கெட், தண்ணீர் போத்தல், பணிஸ், குழைசாதம் வழங்கி கொண்டிருந்தனர். எதையும் அடிபட்டு வாங்கி சாப்பிடுவதும் பசி போக்கிவிடும். ஆலயங்களில் வழங்கப்படும் உணவுகளில் மிகுதியான சுவை இணைக்கப்பட்டிருக்கும்.

நாங்க சின்ன பொடியளாக இருக்கும் போது, வத்தையில வருவம், வந்து ஒரு கிழமை இங்க நிண்டு கொண்டாடிவிட்டு போவம். அது எல்லாம் ஒரு காலம். இப்ப ஒரு நாளில வந்து போயிடனும் எண்டு சட்டம் போடுறாங்க! – வலைப்பாடு பகுதியில் இருந்து வந்த 60 வயது ஐயா ஒருவரின் வாக்குமூலம்.

திருப்பலி திருவிழா முடிந்த பின்னர், வருகை தந்த மக்கள் தாம் சமைத்த உணவுகளை கூட்டாக இருந்து அமர்ந்து பகிர்ந்துகொண்டனர். ஒரு குடும்ப சுற்றுலா உணர்வு போல கடந்து சென்றது. மக்களின் வேண்டுதல்களை பாதிரியார் மைக் செட் மூலம் அறிவித்துக்கொண்டிருந்தார்.

திருவிழாவில் பிரதேச செயலகம், பிரதேச சபையின் பிரசன்னம் காணப்பட்டதாக இல்லை. கழிவகற்றல், பொலித்தீன் பாவனை கட்டுப்படுத்தல்கள் பெரும் சிக்கலாக இருந்தது. அரச இயந்திரம் குறித்த பங்கினை மேற்கொள்ள வேண்டும். இயற்கை தீவுக்கு நெகிளியை நாம் பரிசளிக்காமல் இருந்தால் சரி. திருவிழா முடிய திருச்சபை இளைஞர்களால் சுத்தம் செய்யப்படும் என வலைப்பாடு பெரியவர் தெரிவித்தார். வரும் வருடங்களில் பிரதேச சபை கழிவகற்றல் பொறிமுறைமைக்கு வழி செய்தால் சிறப்பு.

திருவிழாவில் பெட்டிக் கடைகளுக்கும் குறையில்லை.. சுமார் 50 மேற்பட்ட மணிக்கடைகள், சாப்பாடு கடைகள் என திருவிழா கோலாகலமாக நடந்தேறியது. போன எங்களுக்கு சாப்பாட்டுக்கு குறைவு இல்லை.. சமைத்த குழைசாதம் எம் பசி போக்கியது. வரிசையில் நின்று திருவுருவ சிலையினை வணங்கிவிட்டு, அம்மா மெழுகுதிரி கொழுத்த சொன்னவா, அவாவின் ஆசையையும் நிறைவேற்றி விட்டு பயணப்பட தயாராகினோம்.

திரும்பி போகத்தான் எங்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. பெரும்பாலும் குருநகரில் இருந்து வந்த எல்லாப் படகும் வெளிக்கிட 4.00 /  5.00 மணி ஆகும் எண்டு போட்டாங்க.. நாங்க வெளிக்கிட 1.30கே தயார்.. ஒவ்வொரு படக்காக சென்று கேட்டு மாறி மாறி நடந்து களைத்து போனது தான் மிச்சம். கிடைசியாக வாடகைக்கு அமர்த்திய படகு ஒன்றில் சகோதர மொழி நண்பர்களுடன் பயணம் செய்ய முடிவாகியது. 32 பேர் ஒரு மீன்பிடி படகில; வள்ளத்தின் சுக்கான் பிடிப்பவர் அருகில் நான், போட் ல ஓவர் லோட் எண்டு தமக்குள்ள கதைத்துக்கொண்டு அந்தோனியாரை கும்பிட்டி பயணத்தை தொடர்ந்தனர். பரவாயில்லை வள்ளத்துக்கு எப்படி சுக்கான் பிடிப்பது எனும் கலையின் முதல் பாகத்தினை நான் கற்று தேறிவிட்டேன்.

பாலை தீவு மண்ணில் கால் பதித்த நினைவுகளுடன் அடுத்தாக எந்த தீவுக்கு போவம் எண்ட சிந்தனையோட 4.00 மணிக்கு குருநகர் மீன்பிடி இறங்கு துறையினை வந்தடைந்தோம்.ஆனால் இரு விஷயம் மட்டும் மனதிலே ஓடிக்கொண்டு இருக்கு… என்மை சுத்தி எத்தனை இடங்கள் என் கால் தடம் படமால் இருக்கும் எண்டு..

 பயணப்படுவோம் …

4.5 2 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shafiya Cader
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

பயணப்படுவது யாருக்குத்தான் பிடிக்காது. ஒவ்வொரு மனிதனும் தான் பயணப்படும் சமயங்களில் குழந்தையாகவே மாறிவிடுகிறான். ஐம்புலன்களாலும் ரசிக்கக் கற்றுக்கொள்கின்றான். இதுவரை பயணிக்காத உண்மையில் நான் கேட்டுமேயிராத பாலைதீவு பற்றிய உங்கள் பயணக்கட்டுரை பயணப்படுவதன் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது. அடுத்த பயணத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Gobikrishna D
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Interesting…