பூஞ்சைகள்- Fungi

0
1500

 

 

 

 

ஒரு செல் உயிரிலிருந்து பல கிலோமீட்டர் நீளம் வரையிலும் வளரும் இயல்புடைய தாவர உலகின் தேலோபைட்டு (Thallophytes) பிரிவினைச்சேர்ந்த, மண்ணில், மரத்தில், கட்டைகளில், சாணங்களில் பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் வளர்பவை பூஞ்சைக்காளான்கள். பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு மைகாலஜி (Mycology) எனப்படுகின்றது.

பூமியில் 15 லட்சம் முதல் 50 லட்சம் வரை பூஞ்சை வகைகள் வாழ்கின்றன.

காளான் ( mushroom ) , பூசணம் ( Mold), ஈஸ்ட் (  Yeast )  ஆகியவை பூஞ்சைகளின் சில வகைகள்;தாவரங்களில். , மண்ணில்,  விலங்குகள்  மற்றும் மனிதர்களின் தோலில், உள்ளுறுப்புக்களில், கடலில், நாம் சாப்பிடும் பண்டங்களில், ஏன் நாம் சுவாசிக்கும் காற்றில் கூட   பூஞ்சைகள் இருக்கின்றன. கடத்தும் திசுக்கள் இல்லாத வேர், தண்டு, இலை என்று பிரித்தறியமுடியாத  இவற்றின் உடலம் தாலஸ் (  Thallus )  எனப்படும்.

  இவ்வுடலம் நன்கு கிளைத்த நூல் வடிவ ஹைபாக்கள் எனப்படும் இழைகளால் ஆனது. ஹைபா இழைகலின் தொகுப்பு ( Mycelium )  பூசணவலை எனப்படும். செல் சுவற்றில் கைட்டின் மற்றும் பூஞ்சைசெல்லுலோஸ் ( Fungal cellulose ) காணப்படும். ஈஸ்ட்டு ஹைபாக்களில்லாத ஒரு செல் உயிரினமாகும்

பூஞ்சைகளிடம் க்ளோரோஃபில் (Chlorophyll) எனப்படும் பச்சையம்/பசுங்கனிகம் கிடையாது.  எனவே ஊட்டத்தை மட்குண்ணிகளாகவோ (Decomposers), ஒட்டுண்ணிகளாகவோ (Parasite) அல்லது கூட்டுயிர்களாகவோ(Symbionts)தான் இவை பெறுகின்றன.ஆல்காக்களுக்கும், பூஞ்சைகளுக்கும் இடையே காணப்படும் கூட்டுயிர்வாழ்க்கை லைக்கன்கள்  (Lichens) ஆகும். பூஞ்சைகளுக்கும், சில உயர் தாவர வேர்களுக்கும் இடையேகாணப்படும் கூட்டுயிர் வாழ்க்கையே மைக்கோரைசாக்கள் (Mycorrhyzae )

மண்ணிற்கு கீழிருக்கும் நுண் இழைகளிலிருந்து முளைத்து நிலத்திற்கு மேலே தெரியும்   பூஞ்சைகளின் குடை, சிப்பி, பந்து அல்லது கோப்பை வடிவ பகுதிகள் முதிர்ச்சியடைந்தவுடன், மிகமிகச் சிறிய வித்துக்கள் (Spores) வெளியிடப்படுகின்றன.  இவ்வித்துக்கள் தகுந்த வாழிடங்களில் விழுந்து முளைத்து புதிய பூஞ்சைகள் வளர்கின்றன. இவற்றில் பாலினப் பெருக்கமும் காணப்படுகிறது.

  பொருளாதார முக்கியத்துவம்;  பூஞ்சைகள் மண்ணின் மட்கில்  (Humus) காணப்படும் புரதங்களை அமினோ அமிலங்களாகச் சிதைக்கின்றன. 

இறந்த உடல்களை சிதைத்து கனிமசுழற்சி தொடர்ந்து நடைபெற உதவுகின்றது

‘பெனிசிலியம் நொட்டேட்டம்’ Penicillum notataum என்ற பூஞ்சையிலிருந்து  கிடைக்கும் பெனிசிலின்  ( Penicillin )  என்னும் உயிர் எதிர்ப்பொருள் (antibiotic ) 1940 லிருந்து பல்வேறு பாக்டீரிய நோய்களுக்கு   எதிராக பயன்பட்டு வருகின்றது. .

ட்ரஃபில்கள், அகாரிகஸ்  மற்றும் மோரல்கள்  (சிப்பி/குடைக்காளான்கள்) போன்ற புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பிய பூஞ்சைகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.

 மதுபானத் தொழிற்சாலையும் ரொட்டித் தொழிற்சாலையும் சர்க்கரைக் கரைசலை ஆல்கஹாலாகவும், கார்பன் – டை – ஆக்ஸைடாகவும் நொதிக்கச் செய்யும் ஈஸ்ட்டுகளை  சார்ந்துள்ளன. பூஞ்சைகள் ரொட்டி, உணவுப்பொருட்கள், பழக்கூழ் மற்றும் தோல் பொருட்கள்மீது வளர்ந்து அவற்றை வீணாக்குகின்றன.

  சில பூஞ்சைகள் நஞ்சுள்ளவை.  ஒரு சில பூஞ்சைகள் மனிதர்களுக்கும், தாவரங்களுக்கும் நோய்களையும், ஒவ்வாமையையும் தரும்.

    உலகின் மிகப்பெரிய உயிரினமான தேன் பூஞ்சை, அமெரிக்காவின் ஓரிகான் பகுதியில் காணப்படுகிறது. 2200 ஏக்கர் பரப்பளவில் படர்ந்துள்ள, 2400 ஆண்டுகள் பழமையான இந்த காளான்  காலனியை ஒற்றை உயிரினமாகக் கணக்கிட்டால் இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினமாகும். இதன் மொத்த எடை 605 டன்கள்.

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments