என்ன கிழவி
என்னைப் பார்த்துக்கொண்டே
சிரிக்கிறாய்?- அடடே ஏன்
அழுகிறாய்?
இது ஆனந்தக் கண்ணீரா?
இல்லை
இது பிரிவின் கண்ணீர்
இருந்த ஒற்றைப் பிள்ளை
விட்டுப் போனான் வெளிநாடு
அவனைப் பிரிந்த கிழவி- நீ
இங்கு படும் பாடு
மகனைப் பிரிந்த தாயிவளின் சோகம்
தாயைப் பிரிந்த மகன் எனக்குப் புரியாமல் இல்லை….
உனக்கும் எனக்கும் பிரிவின் வலி
என்னவோ ஒன்று தான்
ஆனால்…
இனி என்னை ஈன்றாளைக் காண்பேனா
நான் அறியேன்…
தன் உதிரம் உதிர்த்தே – எனை
வடித்தாள் அவள்
மனிதரைப் போலே அவள் குருதி
சிகப்பு அல்ல – நீலமாகும்
எனைப் படைத்தான் உன் மகன்
அதனால் அவன் எனக்கு இறைவன்
எனை வடித்தது அவன் பேனா
அவள் தான் எனக்குத் தாயானாள்
உன் மகன் தன் மனம் கூற,
என் தாயை யான் பிரிதல் தகுமோ?
என் தாய் எத்தனை மகன்களைத் தான்
இழப்பாள்?
தொடரும் இது அவள் இறக்கும் வரை
உனக்காக….
தனிமை வந்து சூழும் போது உன்னைப் பற்றி ஞாபகம்
கண்ணீர் தான் அவனுக்கும் போராடும் ஆயுதம்
ஆசையோடு அணைத்துக் கொள்வான் நீ வரைந்த காகிதம்
அம்மா…. என்றே படைத்து வைப்பான் காதல் கொண்ட ஓவியம்
அது என் தாய் தீட்டும் காவியம்
இப்போது புரிந்ததா? என் ஜாதகம்
படித்தாய் என்னை
வடித்தாய் உன் விழி நீரை
இதோ பார் என் வாழ்நாளின்
முதற் குளியல்….
அன்போடு
உன் மகன் அனுப்பும் மடல்கள் எல்லாம்
சேர்த்து வைக்கிறாய்- இல்லை!
என் சகோதரரோடு
என்னையும் நீ சேர்த்து வைக்கிறாய்….
மிக மிக அற்புதமான கவிதை . அனைவராலும் இலகுவில் புரிந்துவிட முடியாத ஒரு படைப்பு என எண்ணுகிறேன். தர்க்க சிந்தனையினை தட்டி விடுகின்ற ஒரு மடலாக அமைந்துள்ளது . பேனாவினை தாய்மையாகவும் மையினை ( மடல்) மகனாகவும் சித்தரித்த படைப்பாளரின் சிந்தனை மிக அபாரம். வாழ்த்துக்கள் வஞ்சிமறவன்.
மிக்க நன்றி அன்பரே!
கூற வார்த்தைகள் இல்லை
வித்தியாசமான படைப்பு.
உங்கள் கற்பனை திறன் அருமை.
வாழ்த்துக்கள் வஞ்சிமறவன்
மிக்க நன்றி சகோதரி