மனக்கொலைகளும் மன்னிப்புகளும்

0
866

மெல்ல மெல்ல ஒரு கொலை செய்து விடுகிறோம்
எத்தனை கவனமாய் இருந்தும் 
கச்சிதமாய் 
ஒரு கொலை 
நிகழ்த்தப்பட்டு விடுகிறது 

நீங்கள் எப்போதேனும் 
கொலை செய்ததுண்டா 
குறைந்தது கொலையாளிகளையேனும் சந்தித்ததுண்டா 

ஆனால் 
நான் சந்தித்திருக்கிறேன் 

உறவுகள் வழி 
நண்பர்கள் வழி 
எப்போதோ நான் 
பழகிப்பிரிந்தவர்கள் வழி 
நான் மறந்து போய் விட்ட 
என்னைத் தெரிந்தவர்கள் வழி 
என பல கொலையாளிகளை நான் சந்திக்கிறேன் 

ஒரு புன்னகையில்
பேச்சில்
பார்வையில்
செய்கையில் என
அறிந்தோ அறியாமலோ 
கொலை நிகழ்ந்து விடுகிறது

சில நேரங்களில் 
என்னை அறியாமலே 
நானும் ஒரு கொலையாளி
ஆகி விடுகிறேன்

சில கொலைகளுக்கு 
ஆயுதம் தேவையில்லை 
ரத்தம் சிந்தல் இல்லை 
உயிர் பறிபோதல் இல்லை 

ஆனாலும் 

இந்தக் கொலைகள் 
உயிர் அறுப்பது போல் 
வலி கூட்டுகின்றன
கண்ணீர் கேட்கின்றன
கோபத்தில் தள்ளி
ரௌத்திரம் கற்றுத் தருகின்றன
கையாலாகாத கேள்விகள்
கேட்கின்றன

கொலைகளை ஏற்றுக் கொள்கிறேன்

கோபத்தின் 
தோல்வியின் 
ஏமாற்றத்தின் 
துரோகத்தின் 
பிரிவின் 
யாசிப்பின் விளிம்புகளில் 
செயலாகவோ தற்செயலாகவோ 
நிகழ்ந்து விடும் சில கொலைகளை 
மனக் கொலைகளாக ஏற்றுக் கொள்கிறேன்

ஆனால்

அவற்றுக்கு மன்னிப்பும் இல்லை
மறக்கடிப்பும் இல்லை….

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments