மனோகரி

1
831
3ff42bbbb27442fa57b22fe08cc7dc87-d848fe36

சூரியன் மறைந்து இருளத் தொடங்கிவிட்டது. மனோகரி வாசலை எட்டிப் பார்த்தாள். ஏமாற்றத்ததுடன் திரும்பி மிச்சமிருந்த பாத்திரங்களை கழுவத் தொடங்கினாள். மனம் படபடப்பாக இருந்தது. தொண்டையெல்லாம் வறண்டு இருமல் வந்தது. வாளியிலிருந்த தண்ணீரை ஒரு டம்ளரில் அள்ளி குடித்துவிட்டு, மீண்டும் வாசலுக்கு வந்தாள்.

ஏதோ இனம்புரியாத பயம் மனதை அழுத்தியது. மனோகரியின் இந்த பதட்டத்திற்கு காரணம் மாலை வெளியே விளையாடப்போன அவளுடைய மகள் இரவு ஏழு மணியாகியும் இன்னும் வீட்டுக்கு வரவில்லை. ஒருநாளும் இப்படி தாமதமானதில்லை. மனோகரியின் மகளுக்கு ஏழு வயதாகிறது. பள்ளி முடிந்து வந்து பக்கத்து வீட்டு தன்வயதொத்த பிள்ளைகளுடன் விளையாடச் சென்று விடுவாள். மாலை ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு, எட்டு மணிக்கெல்லாம் தூங்கிவிடுவாள் மனோகரியின் ஒரே மகள் துஸ்யந்தி.

இன்று ஏழு மணியாகியும் பிள்ளை வீட்டுக்கு வராமல் இருக்க மனோகரிக்கு பயத்தில் நெஞ்சு படபடக்க தொடங்கியது. பக்கத்து வீட்டு வேலிக்கப்பால் எட்டிப் பார்த்து ‘ராகினிக்கா உன்ர மகன் வீட்ட வந்திட்டானா.. என்ர பெட்ட இன்னும் வீட்ட வரலேயேக்கா..’ என்றாள்.

‘அவன் அப்போதே வந்திடானேடி மனோ.. வடிவாப் பாரு இஞ்சால எங்கயும் நிப்பாள்..’ என்றாள் பக்கத்து வீட்டுப்பெண். தாய்க்கு பின்னால் நின்ற சிறுவனிடம் ‘தம்பி எங்கயடா விளையாட போனியள்.. அவள் உன்னோட வரேலயே..’ என்றாள் கம்மிப்போன குரலில். அதற்கு அந்த சிறுவன் ‘எப்பயும் போல குளத்துக்குகிட்ட தான் விளையாடினம் அன்ரி .. துஸி கால் கழுவிட்டு வாறன் எண்டு போனவ.. நாங்க வந்திட்டம்..’ என்றான்.

அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே ‘மனோக்கா இஞ்ச ஓடி வாவான்.. உன்ர மகள் குளத்திக்க விழுந்திட்டாளாம்..’ என்று கத்திக்கொண்டு ஒரு சிறுபெண் ஓடி வந்தாள். மனோகரிக்கு உயிரே போய்விடும் போல் இருந்தது. ‘ஐயோ என்ர பிள்ள..’ என்று கத்திக்கொண்டு குளக்கரையை நோக்கி ஓடினாள் மனோகரி.

அங்கு ஒரு கூட்டமே கூடி நின்றது. கிராமத்திற்கு பொறுப்பான அதிகாரி கேசவனும் ஒரு பொலிஸ் அதிகாரியும் நின்று அங்கிருந்த சில ஆண்களிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தனர். ஒரு வயதான பெண் கீழே கிடத்தி இருந்த மனோகரியின் மகளின் கன்னத்தை தட்டி எழுப்பிக்கொண்டிருந்தாள். மனோகரி ஓடி வந்து பிள்ளையை வாரி அணைத்து தூக்கி ‘துஸிம்மா எழும்படி.. என்ர செல்லமே அம்மாவ பாரடி..’ என்று கத்திக் கத்தி மகளை எழுப்பினாள்.

ஊஊஊ… என்ற சத்தத்துடன் அம்பியூலன்ஸ் வண்டி வந்து நின்றது. அங்கு நின்ற ஒருவர் வேகமாக வந்து மனோகரியின் கையிலிருந்து பிள்ளையை தூக்கி வண்டியில் ஏற்றினார். மனோகரியும் இன்னும் இரண்டு ஊர்காரர்களும் ஏறிக்கொள்ள அம்பியூலன்ஸ் வண்டி அதே ஊஊஊ.. என்ற பெருஞ்சத்தத்துடன் வீதியில் சீறிப் பாய்ந்தது.

பிள்ளையை தொட்டுப்பார்த்து பரிசோதித்துவிட்டு ‘பிள்ளை செத்து கணநேரமாகிட்டு.. ஒரு போர்ட்டிபை மினிட்ஸ்க்கு முதலே உயிர் போய்ட்டு..’ என்றார் டொக்டர். மனோகரி பொத்தென கீழே விழுந்தாள். ஊர்காரர்கள் இருவர் மனோகரியை கைத்தாங்கலாக தூக்கிச் சென்று வைத்தியசாலைக்கு வெளியில் போடப்பட்டிருந்த மரக்கதிரையில் இருத்தி மயக்கம் தெளிய தண்ணீரை தெளித்தனர்.

சில்லென்று முகத்தில் அடித்த தண்ணீரின் வேகத்தில் கண்விழித்த மனோகரி ‘என்ர பிள்ள எங்கயண்ண.. ஐயோ அவள் என்ன விட்டிட்டு போய்ட்டாளே..’ என்று கத்தவும்’ குளத்திக்க விழுந்த பிள்ள மூச்செடுக்க ஏலாம மூச்சுதிணறி செத்து போயிருக்கிறாள்.. விசரி.. பிள்ளய குளக்கரையில விளையாட விட்டுட்டு என்ன வெட்டி முறிக்க போனியாடி..’ என்று ஒரு வயதான கிழவி தலையிலடித்துக் கொண்டு கத்தினாள். மனோகரி மண்ணைவாரி வீசி கடவுளை சபித்து மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு கதறினாள்.

ஊரே கூடி நின்று அழுதது. நடுவில் தேவதை போல் பூக்களாலும் பூமாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு உறங்கிக்கொண்டிருந்தாள் மனோகரியின் மகள் துஸ்யந்தி. மனோகரி அழவும் தெம்பற்றவளாய் பிள்ளையின் தலைமாட்டில் தலைவிரிகோலமாக பித்துபிடித்தவளாய் உட்கார்ந்திருந்தாள். அவளது வாழ்க்கையின் அர்த்தம் அவளுக்கென்று இருந்த ஒரே சொத்து அவளுடைய மகள் தான். வாழ்க்கையில் எந்த நல்லதையும் அனுபவிக்காமல் மாடு மேய்த்து தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த மனோகரிக்கு வாழ்வில் இருந்த ஒரே ஒரு பிடிப்பு அவள் மகள் தான்.

நாடு அபிவிருத்தியில் பல மைல்களைக் கடந்துவிட்ட போதும் சில கிராமப்புறங்களில் மக்களின் வாழ்க்கை மிகவும் பின்தங்கியதாகவே காணப்பட்டது. அந்த கிராமமும் அப்படிப்பட்டதுதான். அங்கு தோட்டங்கள் செய்வதும் கால்நடைகள் வளர்ப்பதும்தான் மக்களின் பிரதான வாழ்வாதார வழியாக இருந்தது. ஒரு சிலர் ஏக்கர் கணக்கில் தோட்டங்களில் பயிர்களை விளைவித்தும் பெரிய பண்ணைகளை வைத்தும் வருமானத்தை ஈட்டினர். மிகுதி மக்கள் அத்தகைய தோட்டங்களில் கூலி வேலை பார்ப்பதும் பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை பராமரிப்பதையும் தொழிலாக கொண்டிருந்தனர்.

மனோகரியின் தாயும் தந்தையும் கூலித் தொழிலாளர்கள். அவர்களுக்கு மூத்தவள் மனோகரி இளையவன் செல்வக்குமார் என இரண்டு பிள்ளைகள். அந்த கிராமத்தில் உள்ள பாடசாலையில் ஒன்பதாம் தரம் வரை தான் இருந்தது. அதற்கு மேல் படிப்பதென்றால் பக்கத்து ஊருக்கு தான் போகவேண்டும். கூலி வேலை செய்து குடும்பத்தை ஓட்டும் மனோகரியின் பெற்றோருக்கு பிள்ளைகளைப் படிக்க வைப்பது ஒரு பெரிய போராட்டமாகவே இருந்தது. அப்படியிருக்கையில்தான் ஒரு தொண்டு நிறுவனம் மிகவும் வறுமையில் இருக்கும் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை வீட்டுக்கு ஒரு பிள்ளையை உயர்தரம் வரை படிப்பிக்கும் ஒரு செயற்திட்டத்தை முன்னெடுத்தார்கள். அதில் மனோகரியின் பெற்றோரிடம் ஒரு பிள்ளையை தாங்கள் படிப்பிப்பதாக கேட்டபோது அவர்கள் மனோகரி பெண் பிள்ளை ஆகவே, அவளை விட ஆண்பிள்ளையான அவளது தம்பிக்குத்தான் படிப்பு மிக அவசியம் என முடிவெடுத்து மனோகரியின் தம்பியை படிக்க அனுப்பினார்கள்.

பெண் பிள்ளையை பெற்றவர்களுக்கு இருக்கும் ஒரே யோசனை பிள்ளைக்கு திருமணம் செய்து வைப்பதுதான். மனோகரிக்கும் 20 வயதில் அவளது மச்சான் முறையான சுதாகரனை திருமணம் செய்து வைத்தனர். திருமணமாகி ஒரு வருடத்தில் அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது. சுதாகரனுக்கு வேலை இல்லை. ‘கூலி வேல செஞ்சு பெட்டச்சிய வளக்க ஏலுமே மனோ.. இஞ்ச பாரு படகில ஒஸ்ரேலியா போறாங்கள்.. நானும் போனனென்டா பிறகென்ன நல்ல உழைப்பு.. நாங்களும் நல்லா இருக்கலாம்.. ஆரிட்டயும் கதைச்சு ஒரு ஐஞ்சு லச்சம் வாங்கி தாவன்..’ என்று மனோகரியை நச்சரித்தான் அவள் கணவன்.

ஒரு கட்டத்தில் அவன் நச்சரிப்பு தாங்க முடியாமல் அந்த ஊரில் பெரிய பண்ணை வைத்திருந்தவரிடம் கடனாக ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை வாங்கினாள் மனோகரி. கணவன் அவுஸ்திரேலியா போய் பணம் அனுப்ப தொடங்கியதும் மொத்தமாக திருப்பி தருவதாகவும் அதுவரை அவருடைய பண்ணையில் ஆடு மாடுகளை மேய்க்கும் வேலையை தான் செய்வதாகவும் அந்த கூலிப்பணத்தில் மாதாமாதம் பாதியை கடனுக்கு கழித்துவிட்டு மீதியை தருமாறும் சம்மதித்து கடனைப் பெற்றாள். மனோகரியிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு போனவன் போனதுதான், எந்தத் தகவலும் இல்லை சுதாகரனிடமிருந்து. காத்து காத்து இருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மகளுக்கும் மூன்று வயதாகிவிட்டது. போன கணவனும் திரும்பி வரவில்லை அவனைப்பற்றி ஒரு தகவலும் இல்லை.

மனோகரி ஊரில் கால்நடைகளை வளர்க்கும் எல்லோரிடமும் ஆடு மாடுகளை மேய்க்கும் வேலை செய்யத் தொடங்கினாள். மனோகரி என்பது போய் ‘மாடு மேய்க்கும் மனோகரியாகி’ அது காலப்போக்கில் ‘மாட்டுக்காரி மனோகரி’ ஆயிற்று. மாட்டுக்கார மனோ என்றால் ஊரில் எல்லோருக்கும் தெரியும். அடுத்த இரண்டு வருடங்களில் தாயும் தந்தையும் இறந்து போக தம்பியும் படித்து முடித்து தனக்கென்று ஒரு குடும்பம் வேலை என்று ஒதுங்கிக் கொண்டான்.

மனோகரிக்கு என்று மிஞ்சியது அவள் மகள் மட்டும்தான். மகள் மீது அளவில்லாத பாசம் வைத்திருந்தாள். தன் வாழ்வில் நடந்த எதுவும் தன் பிள்ளைக்கு நடந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் மனோகரி. ஆனால் இருபத்தியெட்டு வயதே நிரம்பிய மனோகரியின் தனிமையும் அவளது வனப்பான அழகும் அந்த ஊரில் பல ஆண்களின் கண்களை உறுத்திக் கொண்டுதான் இருந்தது. நீண்ட கூந்தலை அள்ளி முடிந்து பாவடையை தூக்கி இடுப்பில் சொருகிக் கொண்டு மாடுகளை மேய்க்கும் மனோகரியின் அழகு பல ஆண்களின் மனதை தடுமாற வைத்தாலும் அவள் இடுப்பில் செருகி வைத்திருக்கும் களை அறுக்கும் சிறிய கத்தியும் ஆவேசமாக ஓடும் மாட்டின் மூக்கணாங்கயிற்றை கைகளில் பிடித்து சுற்றி வளைத்து இழுத்து நிறுத்தும் அவளது முறுக்கேறிய ஆணுக்கு சமனான பலமும் ஆவேசமும் அவளிடம் நெருங்க யோசிக்க வைத்தன. அந்த கிராமத்துக்குப் பொறுப்பான அதிகாரி கேசவனுக்கும் மனோகரியின் மீது ஒரு ஆசை இருக்கத்தான் செய்தது. அவளுக்கு உதவிகள் செய்கிறேன் என்ற பெயரில் அடிக்கடி அவள் வீட்டு வாசலில் போய் நிற்பதும் அவளின் அலட்சியத்தால் மூக்குடைந்து வருவதும் அவருக்கு வழக்கமாக இருந்தது.

இது எல்லாவற்றையும் தாண்டி தனியொரு பெண்ணாக நின்று ஏழு வருடங்களாக மகளே தன் உலகம் என்று அவளை பாராட்டி சீராட்டி வளர்த்தாள். அப்படி அவளது உலகமாக இருந்த மகளை இன்று தொலைத்து விட்டு பித்துப் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள் மனோகரி. ‘நேரம் போய்ட்டு பொடியை எடுப்பம்..’ என்றார் கூட்டத்தில் நின்ற ஒருவர். மனோகரி வீறிட்டு கத்திக்கொண்டு எழுந்தாள். ‘என்ர பிள்ளைய விடுங்கோ.. அவள கொண்டு போகாதீங்க..’ என்று தலையில் அடித்துக்கொண்டு கதறினாள். இரண்டு பெண்கள் வந்து மனோகரியை பிடித்துக் கொண்டனர். சவப்பெட்டியை மூடி தூக்கினார்கள். ஊர்பெண்கள் எல்லோரும் ஒப்பாரி வைத்து கதறினார்கள். எல்லாம் முடிந்து விட்டது. மனோகரியின் வாழ்வின் அர்த்தம் முற்றுப்பெற்றுவிட்டது.

மூன்று மாதங்கள் கடந்து விட்டிருந்தது மனோகரியின் மகள் இறந்து. மனோகரி வேலைக்கும் போவதில்லை வீட்டை விட்டு வெளியிலும் போவதில்லை. அயல் வீடுகளில் இருக்கும் பெண்கள் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து அவளை சாப்பிட வைத்து சமாதானப்படுத்தினார்கள். அவளின் தம்பி குடும்பத்துடன் வந்து அவளை பார்த்துவிட்டு போனான். ‘இப்பிடியே சாப்பிடாம இருந்து சாகப்போறியேடி..’ என்று எதிர்வீட்டு கிழவி அவளை அக்கறையுடன் திட்டிவிட்டு தினமும் மனோகரி வீட்டில் வந்து அவளுக்கு துணையாக படுத்துக் கொண்டாள்.

அன்று மனோகரியின் மகளின் பிறந்தநாள். அவள் உயிரோடு இருக்கையில் ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள் வருவதற்க்கு ஒரு வாரத்திற்கு முன்னிருந்தே தாயிடம் பிறந்தநாளுக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று அடம்பிடிக்க தொடங்கிவிடுவாள். ‘அம்மா எனக்கு பாபி டோல் படம் போட்ட ஸ்கூல் பேக் வேணும். பிறந்தநாளைக்கு வாங்கி தாங்கோவன்..’ என்று மனோகரியின் சட்டையை பிடித்து தொங்கிக்கொண்டு கெஞ்சுவாள். அந்த முகத்தை நினைத்து பார்க்கையில் மனோகரிக்கு நெஞ்சு வெடித்து விடும் போல் இருந்தது. சுவரோடு சாய்ந்து விழுந்து கத்தி அழுதாள். சத்தம் கேட்டு ஓடி வந்த பக்கத்துவீட்டு பெண் ‘மனோ.. என்னடி.. ஏன்டி அழுற..’ என்று மனோகரியின் தோளை உலுப்பினாள். விம்மி விம்மி அழுதபடியே ‘ஒண்டுமில்லக்கா.. நீங்க போங்கோ..’ என்றாள் மனோகரி. மகளின் நினைப்பில் அழுகிறாள் என்று புரிந்து கொண்ட பக்கத்துவீட்டு பெண் ராகினி ‘அதையே நினைச்சுகொண்டு இருக்காத.. வெளில காலாற போய்ட்டு வா..’ என்று சமாதானப்படுத்தி விட்டு ஒரு பெரும்மூச்சோடு மனோகரியை கவலையாக பார்த்து கண்கலங்கி விட்டுப் போனாள்.

நீண்டநேரம் அழுதுகொண்டு இருந்தவள் அப்படியே சுவரில் சாய்ந்தபடியே தூங்கிப் போயிருந்தாள். திடிரென முழித்து பார்த்தாள். பின்னேரமாகி விட்டிருந்தது. கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு எழுந்தாள். போன வருடம் தீபாவளிக்கு தனக்கும் மகளுக்கும் ஒரே மாதிரி உடுப்பு வாங்கியிருந்தாள். இரண்டு மாதமாக சிறுகச்சிறுக சேர்த்த வைத்த இரண்டாயிரம் ரூபாவில் மகளுக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு பட்டுப்பாவாடையும் தனக்கு என்ணூறு ரூபாய்க்கு சேலையும் வாங்கியிருந்தாள் அதுவும் மகளுக்கு பிடித்த சிவப்பு நிறத்தில். குளித்துவிட்டு வந்து அந்தச் சேலையை எடுத்துக் கட்டிக்கொண்டு வீட்டைப்பூட்டிவிட்டு கிளம்பினாள். பொடி நடையாக கோவிலுக்கு வந்து சேர மாலை ஆறு மணியாகிவிட்டது. அப்பொழுது தான் கோவிலில் பூசை முடிந்து எல்லோரும் வெளியே போய்க்கொண்டிருந்தனர். மனோகரியை கண்ட கோவில் பூசகர் ‘வா மனோகரி.. பூசை இப்பதானடியம்மா முடிஞ்சது..’ என்றார். ‘ஐயா மகள்ட பேருக்கு ஒரு அர்ச்சனை செய்யோனும்..’ என்றாள் கம்மிய குரலில் மனோகரி.

பூசகர் பதிலுக்கு ஒன்றும் சொல்லாமல் உள்ளே போய் அர்ச்சனை செய்து விபூதியை கொண்டு வந்து கொடுத்தார். ‘மனசில இருக்கிற பாரத்தையெல்லாம் இந்த ஈஸ்வரி பாதத்தில இறக்கி வையடியம்மா.. அவள் எல்லாத்தையும் பாப்பாள்..’ என்று மனோகரியிடம் சொல்லிவிட்டு மேல்சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு பையையும் எடுத்துக்கொண்டு அவர் கிளம்பினார்.

உள்ளே வீற்றிருந்த அந்த ஆதிபராசக்தியை கைகூப்பி வேண்டிவிட்டு, அங்கிருந்த கோவில் தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்தாள் மனோகரி. மனதில் பல எண்ணங்கள் வந்து வதைத்தது. மகளின் செல்லக் குரலும் பிஞ்சு முகமும் நினைவில் வந்து வந்து மனோகரியை கொன்றது. தான் தன் பிள்ளையை சரியாக கவனிக்கவில்லையோ அது தான் அவள் தன்னைவிட்டு போய்விட்டாளோ என்று தோன்றிது மனோகரிக்கு. ‘அம்மா வாங்கோவன்.. எனக்கு மூச்சுவிட ஏலாம இருக்கு..’ என்று அவள் பிள்ளை கத்தி கூப்பிடும் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்தாள் மனோகரி. அந்த குரல் கனவு என்று உணர்ந்தபோது மனோகரிக்கு தொண்டை அடைத்துக் கொண்டு அழுகை வந்தது. சுற்றிலும் பார்த்தாள். நன்றாக இருண்டு விட்டிருந்தது. அப்போது தான் புரிந்தது நீண்ட நேரமாக தான் கோவிலிலேயே உட்கார்ந்திருப்பது. எழுந்து நடந்தாள் வீடு நோக்கி.

வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்த மனோகரியின் கால்கள் மெல்ல வேகம் குறைந்தது. வீட்டுக்கு போகும் பாதையை விட்டு பக்கத்தில் தெரிந்த வளைந்த சிறு பாதைக்குள் நடந்தாள். இங்கு தான் அவள் மகள் விழுந்து இறந்த குளம் இருந்தது. குளத்தை நெருங்க நெருங்க யாரோ சிலர் கதைக்கும் சத்தம் கேட்டது. நேரம் எப்படியும் இரவு எட்டு மணியை தாண்டியிருக்கும். இந்த நேரத்தில் குளத்தடியில் யாருக்கு என்ன வேலை என்று யோசித்துக் கொண்டு குளத்தை நெருங்கியவள் திடீரென அங்கு நின்ற பெரிய மரத்தின் பின்னால் ஒளிந்தாள்.

மெல்ல தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள். அங்கு ஒரு டிரக்டர் நிப்பாட்டியிருந்தது. மூன்று பேர் ஆற்றிலிருந்து மணலை அள்ளி டிரக்டரில் நிரப்பிக் கொண்டிருந்தனர். அதற்கு பக்கத்தில் கேசவனும் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவரும் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். மனோகரி குடும்ப வறுமை காரணமாக ஒன்பதாம் வகுப்போடு படிப்பை இடைநிறுத்தி விட்டாள் ஆனாலும் அவளுக்கு உலக அறிவு அதிகமாகவே இருந்தது. அங்கு சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டாள். கேசவனை சும்மாவே மனோகரிக்கு பிடிக்காது. அவனை பார்த்து ‘ச்சேக்.. இவனெல்லாம் ஒரு மனுசனெண்டு.. காசு என்டால் என்னவும் செய்வான்.. நாசமாபோனவன்..’ என்று மனதுக்குள் திட்டினாள்.

அவர்கள் பேசுவது மனோகரிக்கு இப்பொழுது தெளிவாக கேட்டது. ‘அண்ண கொஞ்ச நாளைக்கு இத நிப்பாட்டுவம்.. அண்டு நான் நல்லா மாட்டியிருப்பன் ஏதோ சமாளிச்சு தப்பிச்சிட்டன்.. உங்களுக்கு தெரியுமண்ண.. இப்ப நாட்டு நிலமையள் கொஞ்சம் இறுக்கம்.. பிடிபட்டிட்டால் சிக்கலா போயிடும்..’ என்றான் கேசவன். அதற்கு அந்த வயதானவர் ‘சரி எங்கள மாட்டிவிட்டுடாதேயும்.. தர வேண்டியத நேரத்துக்கு நேரம் தாறன் தானே..’ என்றார் ஒரு வித அதிகாரமும் சலிப்பும் கலந்த குரலில். ‘அது இல்லயண்ண.. மூண்டு மாசத்துக்கு முதல் தெரியும் தானே.. இஞ்ச ஊருக்குள்ள மாடு மேய்க்கிறவள்ட பெட்ட இந்த கிடங்கிக்க விழுந்து தான் செத்திட்டாள்.. ஆனா அவள் குளத்திக்க தான் விழுந்து செத்தவள் எண்டு கேஸ மாத்தி எழுத என்ன பாடு தெரியுமே.. விசயம் வெளிய வந்தா இந்த மணல் அள்ளுற விசயம் அதுக்கு நான் உடந்தை என்டதெல்லாம் வெளிச்சமாயிடும்… அரசாங்க வேலையுமில்ல.. உழைப்புமில்ல.. ஜெயில்ல தான் மிச்ச வாழ்க்க.. அதான் அண்ண கொஞ்ச நாளைக்கு நிப்பாட்டி வைப்பம்..’ என்றான் கேசவன். அவர்கள் பேசிக்கொண்டு வேலையை முடித்து டிரக்டரை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டு கிளம்பினார்கள்.

‘மாடுமேய்க்கிறவள்ட பெட்ட இந்த கிடங்கிக்க விழுந்து தான் செத்தவள்..’ இந்த வாக்கியம் மனோகரியின் காதுகளில் இடியென இறங்கியது. கை காலெல்லாம் விறைத்தது அவளுக்கு. தன் பிள்ளையை இழந்தது விதியே என்று நினைத்துக் கொண்டிருத்தவள் அது பொய் என்று தெரிந்தபோது அவளால் தாங்க முடியவில்லை. ‘இந்த நாயின்ட காசு ஆசைக்கு என்ட பிள்ள பலியாகிட்டாளே..’ என்று மனம் கொதித்தது. அன்று செத்தவீட்டில் சிலர் ‘இந்த குளம் முன்னுக்கு அவ்வளவு ஆழம் இல்லையே.. பிள்ள என்னெண்டு அதுக்குள்ள மூச்சு திணறினவள்..’ என்று பேசிக்கொண்டது மனோகரிக்கு நினைவு வந்தது. உண்மைதான் அந்த குளம் நடுவில் தான் ஆழம் அதிகம். கரையில் நின்று யாரும் தவறிவிழுந்தால் எழுந்துவந்துவிடலாம். ஆனால் மணல்அகழ்வதால் குளத்தின் ஒரு பகுதியில் ஆழமான குழி உருவாகியிருந்தது. சாதாரணமாக அங்கு ஆற்றுக்குள் பெரிய பள்ளம் உருவாகியிருப்பது தெரியாது. யாரேனும் கால் வைத்துப் பார்த்தால் தான் ஆழம் தெரியும். அதில் தான் அன்று மனோகரியின் மகள் தவறி விழுந்துவிட்டாள். மனோகரிக்கு எல்லாம் புரிந்தது. கணப்பொழுதில் மனதை திடப்படுத்தினாள். மரத்தின் பின்னாலிருந்து ஆவேசமான கண்களுடன் வெளியே வந்தாள் மனோகரி.

‘கொஞ்ச நாளைக்கு இதெல்லாம் நிப்பாட்டிட்டு சிவனேண்டு வீட்ட இருக்கோணும்..’ என்று மனதிற்க்குள் நினைத்துக்கொண்டு யாரும் அவ்விடத்தில் இல்லையே என்பதை சுற்றும் முற்றும் பார்த்து உறுதி செய்துகொண்டு திரும்பிவன் திடுக்கிட்டு பேறைந்தவன் போல நின்றான். எதிரில் மனோகரி நின்றாள். சட்டென தன்னை சமாளித்துக்கொண்டு குரலை உயர்த்தி ‘என்ன மனோகரி இந்த நேரத்தில இஞ்சால பக்கம் வந்திருக்கிற..’ என்றான் கேசவன். ‘ஏன்டா என்ர பிள்ளைய கொன்ட..’ என்று ஆவசமாக கத்திக்கொண்டு பாய்ந்து அவன் சட்டையை பிடித்து உலுப்பினாள் மனோகரி. அவளை தள்ளி விட்டு சட்டையை சரி செய்துகொண்டு ‘ஏய் மாட்டுக்காரி உனக்கென்ன விசரா..? என்ன அலம்புற..’ என்றான் அவன். ‘ஓமடா நான் விசரி தான்.. என்ட பிள்ளைய சாககுடுத்திட்டு நிக்கிற நான் விசரி தான்..’ என்று கத்தினாள் அவள்.

அவளுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்பது கேசவனுக்கு புரிந்தது. பெண்களை எப்போதும் அடாவடியாக இல்லாமல் அன்பாக அணுகினால் எளிதில் அடக்கி விடலாம் என்ற எண்ணம் கொண்டவன் கேசவன். அந்த எண்ணத்தில் ‘இஞ்ச பாரு மனோ.. நீ எவ்வளவு வடிவான பெட்ட தெரியுமா.. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.. நீ தான் என்ன கண்டுகிறதே இல்ல.. நான் நல்லா உழைக்கிறன்.. நான் சொல்லுறபடி நீ கேட்டா.. நல்லா இருக்கலாம்..’ என்றான் கனிவான குரலில். சொல்லிவிட்டு மனோகரியின் முகத்தை கூர்ந்து பார்த்தான். ‘இடுப்பில் சொருகி வைத்திருந்த சிறிய பையை எடுத்து திறந்து அதற்குள் இருந்த சில ரூபாய் நோட்டுக்களை எடுத்து சேகவனின் முகத்தில் வீசினாள். ‘இந்தா காசு.. நான் ஆடு மாடு மேச்சு சேத்த காசு.. என்ட பிள்ளைக்கு பட்டுப்பாவடை வாங்க வச்சிருந்தன்.. சரஸ்வதி பூசைக்கு பட்டுப்பாவடை வாங்கி தாங்க அம்மா என்டு கேட்டவள்.. இதயும் எடுத்து உன்ர பொக்கற்ல வையடா விசரா..’ என்று கத்தினாள்.

எவ்வளவு கத்தியும் அவனை திட்டியும் அந்த தாய் மனம் ஆறவில்லை. இனி பேசவோ இல்லை வாழவோ தனக்கு எந்த அவசிமுமில்லை என்று தோன்றியது மனோகரிக்கு. சேலையை தூக்கி இடையில் செருகிக் கொண்டு சேகவன் மீது பாய்ந்து அவளை குளத்தில் தள்ளினாள் மனோகரி. அவள் கத்திக் கூச்சலிட்டு விட்டு ஓய்ந்துவிடுவாள் என்று நினைத்துக் கொண்டு நின்ற கேசவன் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தடுமாறி குளத்தில் விழுந்தான். விழுந்தவனை ஆவேசமாய் நீரில் அமிழ்த்தினாள் மனோகரி. கட்டுக்கடங்காமல் ஓடும் ஆடு மாடுகளை கயிற்றைபோட்டு கட்டி இழுத்து கட்டுப்படுத்தி மரத்துப்போன மனோகரியின் வலிய கரங்களை கேசவனால் சமாளிக்க முடியவில்லை. பேச முடியாமல் மூச்சு திணறினான். மனோகரியின் கண்கள் நெருப்பென சிவந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. சில கனங்கள் தான் தண்ணீரில் இருந்து குபுகுபுவென நீர்க்குமிழிகள் வந்தன. கேசவனை தண்ணீரில் இருந்து வெளியே இழுந்து குளத்தின் நடுப்பக்கமாக போட்டாள்.

தன் சேலையை கழற்றி குளக்கரையில் கிடந்த ஒரு பெரிய கல்லை சுற்றி கட்டனாள். அந்த கல்லை மண் அகழ்வினால் ஏற்பட்ட பெரிய குழிக்குள் தள்ளினாள். மனம் ஏதோ நிம்மதியடைந்த பேர் உணர்ந்தாள் மனோகரி. மகளின் பிஞ்சுக்குரல் அவள் காதுகளில் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒரு விரக்திச் சிரிப்போடு பெருமூச்சு விட்டபடி குளத்தில் இறங்கி நடக்கத் தொடங்கினாள் மனோகரி.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பாடசாலை விடுமுறை. குளத்துக்கு பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் ‘அங்க பாருங்க குளத்துக்க ஏதோ மிதக்குது..’ என்று கூச்சலிட்டான். ஊருக்குள் ஓடி போய் சொல்லவும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு கொஞ்ச நேரத்தில் குளக்கரையில் பெரிய கூட்டம் கூடிவிட்டது. பொலிஸ் அதிகாரி இருவரை குளத்தில் இறங்கி மிதப்பது என்னவென்று பார்க்க அனுப்பினார். சென்று பார்த்தவர்கள் ‘சேர் ரெண்டு பொடி கிடக்கிது..’ என்று சத்தமிட்டனர். சடலங்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டன. ‘சேர் இவர் எங்கட ஏரியா ஜீ.எஸ்.. இவள் மாட்டுக்காரி மனோ..’ என்றான் ஒருவன். ‘இது என்னடா புதினமா கிடக்கிது.. இதுகள் எப்பிடி இஞ்ச செத்துக் கிடக்கிதுகள்..’ என்றாள் ஒரு வயதான பெண். சடலங்கள் அம்பியூலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

கூட்டம் மெதுவாக கலைந்தது. அந்த இடத்தை ஆராய்ந்து கொண்டு நின்ற பொலிஸ் அதிகாரியின் கண்களில் சிவப்பு நிறத்தில் ஏதோ மிதப்பது போல தென்பட ஒருவரை உள்ளே இறங்கி பார்க்கும்டி அனுப்பினார். குளத்தில் இறங்க போனவன் சட்டென உள்ளே விழுந்தான். விழுந்தவன் மூச்சுவாங்க தண்ணீருக்குள் இருந்து எழும்பி ‘சேர் இவடம் பெரிய கிடங்கா கிடக்கு.. ஆழமா இருக்கு சேர்..’ என்றவன் சிவப்பு நிறத்தில் தெரிந்த துணியை பிடித்து இழுத்தான். ‘சேர் பொம்பிளட சாறி சேர் இது..’ என்று சொல்லி அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். பொலிஸ் அதிகாரிக்கு அந்த இடத்தில் ஏதோ தவறு நடப்பது புரிந்தது.

அந்த குளம் இருந்த பகுதியை பாதுகாப்பற்ற பகுதியாக அறிவித்து பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு மக்கள் நடமாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. விசாரணையில் அங்கு மணல் அகழ்வில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்டனர். அந்த சட்டவிரோத செயலுக்கு அனுமதி வழங்கிய அதிகாரி உயிரோடு இல்லை என்பதால் சம்மந்தப்பட்ட ஏனையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஊருக்குள் பலர் பல விதமாக பேசினார்கள். ‘உவள் மனோக்கு அவனோட தொடர்பு இருந்திருக்கு..’. ‘அதில தான் பிள்ளைய கவனிக்காம திரிஞ்சிருக்கிறாள்..’ என்றெல்லாம் நரம்பில்லா நாக்குகள் பேசின. சேகவனின் மனைவி ‘என்ட புருசன்ட மனச கெடுத்து என்ட வாழ்க்கைய நாசமாக்கிட்டாள்.. நீ நரகத்துக்கு தான் போவயடி மாட்டுக்காரி.. சரியான விசரி..’ என்று மனோகரியை ஆத்திரம் தீர திட்டித் தீர்த்தாள்.

மனோகரியின் உடலை பொறுப்பேற்க யாரும் வராததால் அந்த ஊரில் பல செயற்திட்டங்களை செய்துகொண்டிருந்த ஒரு பெண்கள் அமைப்பு அவள் சடலத்தை பொறுப்பெடுத்து அடக்கம் பண்ணினார்கள். சரியோ தவறோ இங்கு நடப்பது இவர்கள் பேசுவது எதுவுமே மனோகரியின் காதில் விழவில்லை. அவள் ஆத்மா அவளின் செல்ல மகளைத் தேடிப் போய்க்கொண்டிருந்தது.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shafiya Cader
Shafiya Cader
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மிகவும் ஆழமான உணர்வுகள் கொண்ட கதை. ஒருவர் செய்யும் குற்றம் எப்படி இன்னொரு குடும்பத்தை சிதைக்கின்றது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மனோகரி