மறக்கடிக்கப்பட்ட மங்கை

0
1334

மஞ்சள் பூசி குளித்திட்ட
அழகான மங்கை போல்
எப்பவும் பளிச்சிடும்
மாசு மருவற்ற மண் அது
பசுமை நிறைந்த நினைவுகள்
முப்பது ஆண்டுகள் பின்னோக்கி…..

வானுயர்ந்த தென்னை மரங்கள்
வளமான வாழைத் தோப்புக்கள்
பனைமரங்கள் பலாமரங்கள்
பசிய வெத்திலை படர்ந்திட்ட
கமுகு மரங்கள்…

வாயூற வைக்கும்
கறுத்தக் கொழும்பான் அம்பலவி
வைரம் பாய்ந்த தேக்கு மரங்கள்
தேன் வதை எடுத்திட்ட சுரவணை
நன்றாய் கனி தரும் நாவல்மரங்கள்
மூலைக்கு மூலை முந்திரி மரங்கள்
கானாந்தி தூதுவளை குறிஞ்சா
முசுட்டை முசுமுசுக்கை முருங்கை
வேப்பமரம் புளியமரம் அரசமரம்
விளையாடி களிகூர
விழுது நீண்ட ஆலமரம்
பச்சைப் பசேலென
பரவசமாய் பாடச் சொல்லும்!!

வரட்சியிலும் வற்றாத
அள்ள அள்ள குறையாத
தெளிவான கிணற்று நீர்
நீரோடும் சிற்றோடைகள் அதில்
நீந்தி விளையாடும் பனையான்கள்
அழகான அமைதியான வாவி
மட்டுறால் கூனிறால் சினைநண்டு
மணலை கெழுத்தி கெண்டைமீன்
நிசப்தமான இரவினிலே மீனவர்
வலை வீசும் சளக் ஓசை
தூக்கத்திலும் காதில் விழும்
தோணியிலே செம்படவர்
துடுப்பினாலே தாளமிட
துள்ளி விளையாடும் மீனினங்கள்
வெள்ளி நிலா காய்கையிலே !!

தச்சு தொழிற்சாலை நெசவு சாலை
கொல்லன் பட்டறை இரும்பு சத்தம்
சங்கீதமாய் காதில் கேட்கும்
பள்ளிக்கூட மாணவர் நர்சரி பாலர்
சிரிப்பொலியும் பாட்டும்
சிந்தையை மகிழப் பண்ணும் !!

வானுயர் கோயில் கோபுரம்
வினை தீர்க்கும் விநாயகர்
கண்ணகையம்மன் ஆலயம்
மனுவுரு எடுத்த இயேசு தேவாலயம்
மறுபக்கம் தொழுதிடும் மசூதி
மதபேதமின்றி மகிழ்ச்சியாக
ஒற்றுமையாக ஒருமித்து வாழ்ந்த
சிற்றூர் என்றாலும் எப்பவும்
சிறப்பில் குன்றாத மஞ்சளூர்
கூத்தும் பாட்டும் கவிதையும்
நாடகமும் குறையாத நம்மூர்
நாகரிகமும் நன்நடத்தையும்
உள்வீதி முதல் மெயின்வீதி வரை
உள்ள நம் மக்களில் தெரியும் !!


சுத்தமான காற்றும் சுவையான
சத்தான உணவும் எப்பவும் இருக்கும்
அழகான விருந்தோம்பல் ஊர் இது
ஆனா இன்று ….
யார் கண் பட்டதுவோ
எளிமையும் இனிமையும் கொண்ட
செழிப்பாய் இருந்த அழகு தேவதை
காஞ்சொறியும் முள்ளும்
காடாய் படர்ந்திருக்க
இடிபாடுகள் மத்தியில்
கறையான் புற்றுகள் எழும்பிட
பொலிவிழந்து போனாளே
திரும்புமா அவள் அழகு
அருவியாய் பெருகிடுதே
கண்களிலே கங்கை !!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments