மறப்பதில்லை நெஞ்சே..!

0
19913

ஒரு கடிதம் இத்தனை தாக்கத்தை அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து என்னில் ஏற்படுத்தும் என கனவிலும் நான் ஊகித்திருக்கவில்லை. ‘ரப்பிஷ்’ என சுருட்டி ஒரே வீச்சில் என்னால் எறிந்து விட முடியவில்லை. எனக்கு என்னையே ஆசுவாசப்படுத்திக் கொள்ள வெகு நேரம் தேவைப்பட்டது. அறுபத்தைந்து வயதில் இருப்பதற்கும் அதிகமாய் ப்ரஷர் என்னை ஆட்கொண்டது. தொப்பென சரிந்து விழுந்து விடுவேனோ என்ற பயத்தில் இறுக்கமாய் நாற்காலியை பிடித்துக்கொண்டேன். என் நெற்றியில் வியர்வை அரும்பிக்கொண்டிருந்தது. எப்போதும் அனலென தகிக்கும் உடம்பு ஜில்லிட்டுப் போவதை உணர முடிந்தது. இன்னும் சில நேரத்தில் மூச்சு விடுவதும் பாரமாகிவிடும் என்ற பயத்தில் அலறினேன் அதை விட சத்தமிட்டேன் என்றுதான் கூற வேண்டும்.


‘ரகு…ரகு…’

ரகு ஆபிஸ் போவதற்கு ரெடியாகிக் கொண்டிருந்திருக்க வேண்டும். பாதி பூட்டிய ஷேர்ட் பட்டன்களோடு ஓடி வந்தது புரிந்தது.
ஒரு நிமிடம் போல் என்னைப்பார்த்தான். உடனே என்னை அணைத்தபடி கட்டிலில் அமர வைத்தான். ‘என்ன ஆச்சு உங்களுக்கு?’ என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே கேட்டான். ‘முதலில் தண்ணீர் குடிங்க’ என்றபடி நெஞ்சை நீவி விட்டான்.
‘என்னாச்சு உங்களுக்கு? டாக்டரிடம் போவோமா?’ என்றான். நான் வேண்டாமென்று அவன் கைகளைப் பிடித்துக்கொண்டேன். சரியாக என்னால் பேசுவதற்கு ஐந்து நிமிடம் பிடித்தது. என் கைகளிலிருந்து நழுவி எதிரே பறந்து போயிருந்த கடிதத்தை எடுக்க சொன்னேன்.
ரகு இதென்ன என்பது போல் பார்த்தான்.

‘சத்தமாக படி’ என்றேன். என்னால் அந்த கடிதத்திலிருக்கும் வார்த்தைகள் உண்மைதானா அல்லது பிரம்மையா என்று தெரிந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. கண்களை மூடிக்கொண்டேன்.

‘அன்புள்ள பார்த்தி, உன்னை சந்திக்க வேண்டும். இந்தக் கடிதம் உள்ள விலாசத்திற்கு ஒரு முறை வர வேண்டும். என் மீதான கோபத்திலோ வெறுப்பிலோ என்னை சந்திக்காமல் இருந்து விடாதே. இந்தக் கடிதம் கண்டதும் உடனே வரவும். உன் வரவிற்காக ஆவலுடன் காத்திருப்பேன்’
கடிதம் முடிந்து விட்டது. நான் படித்ததும் ரகு வாசித்ததும் ஒன்றுதான். எதுவும் மாறவில்லை. அவள் கையெழுத்து உட்பட. ரகு என் தோளை தொட்டான். மெதுவாய் கண்களை திறந்தேன்.

‘அப்பா இது அவங்களா’ என்றான்.

நான் வெறுமனே ஆம் என்று தலையசைத்தேன். ரகு மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. மெதுவாய் கடிதத்தை திருப்பி விலாசத்தை ஒரு முறை பார்த்தான். பின்னர் ஒரு முறை அவன் மனதுக்குள்ளே மீண்டும் படித்துக் கொண்டான். எதுவும் பேசாமல் என் கைளில் மீண்டும் கடிதத்தை வைத்து விட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப்பார்வை என்ன செய்யணும் என்று கேட்பதாய் இருந்தது.

‘ரகு உன்னால் நாளைக்கு விடுப்பு எடுத்துக் கொள்ள முடியுமோ?’ என்றேன். அவன் எதுவும் கேட்கவில்லை.

‘கண்டிப்பா’ என்றான். மெதுவாய் என் கரத்தை பற்றிக்கொண்டான்.

‘அப்பா, நீங்க போகணும் என்பதில் எனக்கு எதுவித ஆச்சரியமும் இல்லை. உங்கள் குணம் அப்படி. நீங்க எதற்காகவும் மனதை வருத்திக் கொள்ள வேண்டாம். நான் ஆபீஸில் நாளை லீவ் சொல்லி விடுகிறேன். இன்று சிறிது நேரத்தோடே பேர்மிஷன் போட்டு வருகிறேன். உங்களால் அதுவரை சமாளிக்க முடியுமில்லையா?’ என்றான்.

நான் சிரிக்க முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. ‘ரகு நான் என்ன நோயாளியா? நீ பயப்படத் தேவையில்லை’ என்றேன்.
ரகு சிறிது நேரத்திலேயே கிளம்பி விட்டான். அந்தக் கடிதம் இன்னமும் என் கைகளிலேயே இருந்தது. அவள் கையெழுத்து மாறவில்லை கூடவே அவள் குணமும்தான். என்னை தயவுசெய்து வந்து ஒரு முறையாவது பார் என்று வேண்டிக்கொள்ளவில்லை. வந்து பார்க்கணும் என்று கட்டளை போட்டிருந்தாள். நான் புன்னகைத்துக் கொண்டேன். அவள் எப்போதும் யாரையும் ஒரு போதும் வேண்டிக் கொள்ளவோ கெஞ்சிக் கேட்கவோ மாட்டாள். அத்தனை அழுத்தக்காரி. ஆனால் இந்தக் கடிதத்தில் அந்த அழுத்தம் சற்றுக் குறைந்திருந்தது. அந்த வரிகளுக்குப் பின்னால் ‘பார்த்தீ என்னை ஒரு முறையாவது பார்க்க வாயேன்’ என்று கெஞ்சும் குழந்தையின் பிடிவாதமிருந்தது.
………………………………………………………………………………………………………………………………………………….

‘ரகு இன்னும் எவ்வளவு நேரமிருக்கு நாம போய் சேர?’

‘அதிகமில்லை. இன்னும் ரெண்டு மணிநேரம்தான்’

‘உனக்கு டயர்டாக இருக்கும் என்றால் சொல்லு. நான் ட்ரைவ் பண்ணுகிறேன்’

‘சரிதான். எனக்கு ஐந்து மணிநேரம் ட்ரைவ் செய்வதெல்லாம் டயர்டாக்காது டாடீ’ என்றான்.

‘நீ இப்போதெல்லாம் என்னை குழந்தை போல நடத்துகிறாய். இதெல்லாம் நல்லதற்கில்லை. கூட எனக்கு பிடிக்கவுமில்லை’ முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு கம்ப்ளைன்ட் செய்வது போல் சொன்னேன்.

ரகு வெறுமனே சிரித்தான். ‘அப்பா ப்ளீஸ், உங்களுக்கு பிடிக்காத காரியங்களை செய்யும் பிள்ளையாக என்னை மாற வைத்திடாதீங்க. இது என்னோட ஹம்ப்பிள் ரிக்வெஸ்ட். இப்படி செய்தா நீங்க என்னிடமே என்னை பற்றி கம்ப்ளைன்ட் பண்ண வேண்டிய அவசியமுமிராது இல்லையா?’ என்றான்.

‘உன்னிடம் என்னால் பேசி ஜெயிக்க முடியுமா? நீ அப்படியே உன் அம்மா வகையறா’ நான் பழிப்பது போல் சொன்னேன்.

‘அப்பா, நீங்க எப்போதுமே வாதத்திலிருந்து தப்பிக்க வேணுமானால் இந்த ஒரு கடைசி அஸ்திரத்தையே எடுத்து விடுவீர்களே’

எனக்கு சிரிப்பதற்கு பதில் வேறொன்றும் தோன்றவில்லை. மெதுவாய் தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடிக் கொண்டேன். ரகு என் தலைக்குப் பின்னாலிருந்த குஷனை மெதுவாய் அட்ஜெஸ்ட் செய்து எனக்கு சௌகர்யமாக வைப்பது புரிந்தது. ரகு அப்படியே தோற்றத்திலும் பேச்சிலும் அவன் அம்மா ஜாடை. அப்படியே லக்ஷ்மி. ஆனால் குணம் அப்படியே என் சாயல். அவனே சொல்லுவான் ‘டாடீ வீ ஆர் ட்வின்ஸ் வித் டிபரென்ட் பேஸஸ் அன்ட் அட் டிபரென்ட் ஏஜெஸ்’.

எனக்கு இந்த உலகத்தில் பெருமையாய் பூரிப்பாய் சொல்லிக்கொள்ள ஒரு விடயமிருக்குமானால் அது ரகுவைப்பற்றி மட்டுந்தான். ரகுவிற்கு அடுத்த மாதம் வந்தால் இருபத்தெட்டு வயது தொடங்குகிறது. உயரத்தை போலவே வயதிலும் வளர்ந்து விட்டான். இனி திருமணம் பார்க்க வேண்டும். ரகுவைப்போல குணமான அருமையான கணவன் கிடைக்க எந்த ஒரு பெண்ணும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ரகு என் பிள்ளை என்பதற்காக இல்லை. அவனின் அருமையை யாராக இருந்தாலும் பழகிய பின்னர் ஒத்துக் கொள்வார்கள்.

‘ரகு நேரம் என்ன?’

’03 மணி டாடீ. இன்னும் ஒரு மணி நேரம்தான் ஊர் வந்து விடும். ஹோட்டல் புக் செய்திருக்கிறேன். போய் சிறிது நேரம் உறங்கிவிட்டு புறப்பட்டால் அரை மணி நேரந்தான். அவங்க குறிப்பிட்ட விலாசம் வந்து விடும்’

நான் சட்டைப் பாக்கெட்டை தொட்டுப்பார்த்துக் கொண்டேன். கடிதம் பத்திரமாய் இருந்தது. அதே போலவே அவள் நினைவும் பாரமாய் அதே இடத்திலேயே இருந்தது. காலம் எல்லா காயங்களையும் மறக்கடித்து விடும் என்பது எத்தனை அப்பட்டமான ஒரு பொய்! வேணுமானால் அப்படி நாம் நடிக்கலாம். மறந்து விட்டேன்; இந்த நேரத்தில் சந்தோஷமாய் இருக்கிறேன்; எதுவும் என்னை பாதிக்கவில்லை என எதிராளியின் முன்பு எதுவித காயங்களையும் காட்டாமல் நடிக்கலாம். ஆனால் உண்மையிலேயே சில நினைவுகளின் ஆழமான காயங்களை காலத்தால் எப்போதுமே மறக்கடிக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
………………………………………………………………………………………………………………………………………………

ரகு என்னை அடிக்கடி கீழ்ப்பார்வையால் பார்ப்பதை உணர முடிந்தது. எதுவித சலனத்தையும் காட்டாமல் இருக்கவே நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

‘அப்பா, இன்னும் பத்து நிமிஷந்தான். அவங்க வீடு வந்து விடும்’

நான் இயல்பாய், சாதாரணமாய் இருக்க கடும் பிரயத்தனப்படுவது ரகுவிற்கு அவஸ்தையாக இருந்திருக்க வேண்டும். ஆறுதலாய் என் கைக்கு மேலே அவன் கையை வைத்து மெதுவாய் அழுத்தினான். அந்த நேரத்தில் எனக்கு அந்த ஸ்பரிசம் தேவைப்பட்டது.

‘ரகு’ என் குரல் எனக்கே நடுக்கமாய் கேட்டது. ‘என்னால முடியலடா ரகு. வண்டியைத் திருப்பு. நாம வீட்டிற்கே போய் விடலாம்’ என்று சொல்லணும் போலிருந்தது. ஆனால் எதுவும் பேசாமல் இருந்தேன்.


‘டாடீ, இது நீங்க எதிர்பார்க்காத விஷயமில்லையா? நாம எதிர்பார்க்காத விஷயங்கள் நம்ம வாழ்க்கையில எப்போதாவது நடந்தால் அது இறைவனே நமக்கு வழிகாட்டுகிறாற் போலனு நீங்கதானே சொல்லுவீங்க. இல்லையா டாடீ? இதுவும் அப்படினு எடுத்துப்போமே. நீங்க எதுக்காகவும் கலங்கக் கூடாது. புரியுதா?’ ரகு என்னிடம் ரொம்பவுமே நயந்து ஒரு குழந்தைக்கு சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தான். அவனுக்கு இந்த நேரத்தில் நான் திடமாய் இருக்கிறேன் என்றொரு நம்பிக்கை. அவனை ஏமாற்ற எனக்கு விருப்பமில்லை. ரகுவைப் பார்த்தேன். ரகு என் பதிலையே எதிர்பார்ததுக் கொண்டிருந்தான்.

‘கண்டிப்பா’ என்றேன்.

அந்த தெருவில் அதிகமாய் வீடுகள் இல்லை. வீட்டை கண்டுபிடிக்க அதிக சிரத்தையும் தேவைப்படவில்லை. எத்தனையோ கேள்விகள், எதிர்பார்ப்புகள், ஆச்சரியங்கள் என எல்லாவற்றையும் சுமந்து கொண்டு அவள் வீட்டிற்குள் நுழைந்தேன். வீடு ரொம்பவும் சாதாரணமாய் இருந்தது. ஹாலில் நான்கு கதிரைகள் மட்டும். தூரமாய் ஒரு பாய் விரித்துக் கிடந்தது. யாரும் உறங்கியிருந்திருக்க வேண்டும். போர்வையும் தலையணையும் அப்படியே கிடந்தது. ரகு காலிங்பெல்லை தேடிவிட்டு பின்னர் கதவைத் தட்டினான். ஒருவரையும் காணவில்லை.
‘யாரவது வீட்டில இருக்கீங்களா?’ ரகு கொஞ்சம் சத்தமாய் குரல் கொடுத்தான்.

‘யாரு’ ஒரு குரல் மெதுவாய் முன்னேறி வந்தது. முப்பது வயதிருக்கும். எங்களை அளவிடுவது போல் பார்த்தான். ‘யார் இவங்க’ என்று யோசிப்பது போல் புருவத்தை சுருக்கினான்.

ரகு கடிதத்திலிருந்த விலாசத்தை காட்டி பெயரைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டான்.

‘அடடே நீங்க ஆன்ட்டியை பார்க்க வந்தீங்களா? வாங்க வாங்க’ உட்கார வைத்தான்.

அறிமுகத்திற்காய் ஒரு சில வார்த்தைகள் கோர்வையாய் பேசிக் கொண்டிருந்தோம். நான் எதுவுமே பேசாமல் வெறுமனே அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன்.


‘எங்கே ஆன்ட்டி இல்லையா?’ ரகு கேட்டான்.

‘ஆன்ட்டிக்கு இப்போதெல்லாம் உடம்புக்கு முடிகிறதில்லை. அதுவும் அங்கிள் இறந்து போன பிறகு அவங்க ரொம்பவே தளர்ந்து போய் விட்டாங்க. ஒரே பெண்பிள்ளை. திருமணம் முடிந்து அவங்களும் வெளிநாடு போய்ட்டாங்க. அவங்க மகள் தன்னோட இருக்கும்படி வேண்டியும் இவங்க மறுத்திட்டாஙக. ஆன்ட்டிக்கு ரொம்ப பிடிவாதம். அவங்க முடிவுல எப்பவும் மாற மாட்டாங்க. நானும் என்னோட பெமிலியும் ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை வந்து பார்த்திட்டு போவோம். இந்த வீட்டை விட்டு நகர மாட்டேன் என்று அப்படி ஒரு பிடிவாதம்.’

‘ஐ ஸீ..’ இது ரகு.

‘ஆனா ஆன்ட்டி ரொம்ப நல்லவங்க. நான் சின்ன வயசுல பத்து வருஷமா ஆன்ட்டி வீட்டிலதான் இருந்து வளர்ந்தேன். ஷீ இஸ் லைக் மை அனத மதர்’

‘இப்போ எங்கே அவங்க?’ இது நான்.

‘என்ன உங்க க்ளாஸ்மேட்டை சந்திக்க அவசரமா?’ அவனே சொல்லி அவனே சிரித்தான்.
நான் கஷ்டமாய் புன்னகைத்தேன்.

‘ஆன்ட்டி ப்ரேயரில் இருந்தாங்க. இருங்க நான் போய் ப்ரேயர் முடிந்ததா என்று பார்த்து வருகிறேன்’ அவன் சென்று விட்டான்.

உள்ளே அவர்கள் பேசிக் கொள்ளும் சப்தம் கேட்டது. அவர்கள் காலடி மிகவும் அண்மித்துக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. புடைவை மறைத்த கால்கள் என் பார்வை வட்டத்திற்குள் வந்தன. எனக்கு ஒரு நிமிடம் எல்லாமே மறந்து போயிற்று. இந்த உலகம், நான், என் ரகு எல்லாமேதான். ஆவள் மாறித்தான் போயிருந்தாள். முப்பது வருடப்பிரிவின் பின்னேயான நரை. மூக்கின் மேல் பார்வைத் துலங்கலுக்கு ஒரு கண்ணாடி ப்ளஸ் பத்து கிலோ எடை என அவள் ரொம்பவே மாறிப்போயிருந்தாள். ஆனால் என்னை பார்த்ததில் எந்தவித பேரதிர்ச்சியையும் அவள் காட்டவில்லை. எனக்குத்தான் தெரியுமே. அவள் பெரும் அழுத்தக்காரி.
எதிரே வந்து அமர்ந்து கொண்டாள்.

‘எப்போது வந்தீங்க?’ என்றாள். வெகு நாட்களாகவே எங்கள் வரவிற்கு தயாராய் இருந்து வரவேற்கும் தோரணை அவள் குரலில் தெரிந்தது.

‘இப்போதான். பத்து நிமிடம் இருக்கும்.’ ரகுதான் பேசினான். என்னால் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வர அவகாசம் தேவைப்பட்டது.

‘நீ பார்த்தியோட மகனா?’ அவள் குரலில் சந்தோஷம்,அன்பு இன்னதென்று புரியாத ஒரு திருப்தி ஒன்று சேர ஒலித்தது.ரகு மென்மையாய் சொன்னான். ‘ஆமா ஆன்ட்டி’

இருவரும் நெருக்கமானவர்களைப் போல வெகு நேரம் உரையாடினார்கள். அவளுக்கு ரகுவைப் பார்த்ததில் உச்ச திருப்தி தோன்றியிருக்க வேண்டும். அடிக்கடி அவனிடம் நீ அப்படியே பார்த்தியின் நகல் ரகு என்றாள்.

சிறிது நேரத்தில் ரகுவும் அந்தப் பையனும் அடுத்த தெருவில் இருக்கும் கடைக்கு கிளம்பத் தயாராகினர். எங்களை உபசரிக்க ஏதேனும் வாங்கிவரச் சொன்னாள். ரகு அருகில் வந்தான்.

‘டாடீ..பேசிக் கொண்டிருங்க. எனக்கு இந்த ஊரிலிருந்து சில பொருட்கள் வாங்க வேண்டியும் இருக்கு. அரை மணி நேரம் போல் வந்து விடுவோம். சரியா?’ என்றான்.

அவர்கள் போய் விட்டனர்.
……………………………………………………………………………………………………………………………………………….

நான் காரில் ஏறியும் எதுவும் பேசவில்லை. ரகுவிற்கு என் அமைதி சங்கடத்தை கொடுத்திருக்க வேண்டும். ஆனாலும் அவன் அங்கு நடந்த எதைப்பற்றியும் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவனே பேசத் தொடங்கினான்.

‘அப்பா, இந்த இடம் எவ்வளவு அமைதி இல்லையா? டவ்ன் வாசிகளெல்லாம் அதிர்ஷ்டக்காரங்க போல் மேலுக்கு தோன்றுமே தவிர உண்மையிலேயே இப்படியான ஊரில் வாசம் செய்பவர்கள்தான் அதிர்ஷ்டசாலிங்க இல்லையா?’

எனக்கு அவன் பேச்சை மாற்றுவது புரிந்தது. ரகுவின் கையைப்பிடித்தேன்.

‘வண்டியை இப்படி ஓரமாய் நிறுத்து ரகு..’

எனக்கு அந்த நிமிடங்கள் கண்முன்னே மீண்டும் வரத்தொடங்கியது.

‘பார்த்தீ.. என்னோட கடிதத்தை மதிச்சு இவ்வளவு தூரம் சிரமத்தையும் பார்க்காது வந்ததுக்கு ரொம்ப நன்றி’ நான் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவள் எழுந்து வந்து என் கால்களுக்கு சற்றுத்தள்ளி என் எதிரே தரையில் அமர்ந்து கொண்டாள்.

‘பார்த்தீ இந்த உலகத்துல எல்லாவித சந்தோஷத்தையும் அனுபவிச்சுட்டேன். ஆனா என்னால எப்போதுமே நிம்மதியா கண்ண மூட முடிஞ்சதில்ல. ஏன்னா அது நான் செஞ்ச பாவம்.. பாவம்னு சொல்றதா துரோகம்னு சொல்றதானு புரியல. நீ என்னை ஒரு துளியும் ஏமாற்றாம காயப்படுத்தாம இருந்தப்போ நாந்தான் உன்னை விட்டு விலகிப்போனேன். அதுவும் ஒரு துண்டு கடிதம். எதுவும் சொல்லாம.. எதையுமே விளங்கவைக்காம..’ அவள் தேம்பி அழப்போவது தெரிந்தது.

‘இப்போ எதுக்கு அதெல்லாம்? பழசை விடு..’ நான் பேச்சை மாற்ற முயற்சித்தேன்.

‘இல்ல பார்த்தீ.. என் மனச கல்லாக்கிட்டு இந்த முப்பது வருஷம் என்ன பெத்தவங்களுக்கும் என்ன கட்டினவருக்கும் எந்த அவப்பெயரும் வரக்கூடாதுன்னு வாழ்ந்திட்டேன். ஆனா என்னால நிம்மதியா எப்படி இருக்க முடியும் சொல்லு?’ அவள் புடைவைத் தலைப்பில் மூக்கை உறிஞ்சிக்கொண்டாள்.

என்னிடம் அவளிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருக்கத்தான் செய்தன. மனது ஒத்து எல்லாம் நல்லபடியாய் எல்லோரினதும் சம்மதத்துடன் திருமணம் செய்வோம் என்ற நம்பிக்கையில் இருந்தவனுக்கு முப்பது வருடங்களுக்கு முன் ஏமாற்றத்தை மட்டுமே தந்து சென்றவளின் நியாயத்தை இந்த வயதில் கேட்க விளைவதற்கு பெயர்தான் என்ன?

‘என்னால என்ன பெத்தவங்க பேச்சை மறுக்க முடியல. உன்னதான் விரும்புறேனு சொல்ற தைரியமும் எனக்கு அப்போ இருக்கல. என்னால நீ பிடிக்காத ஒரு வாழ்க்கை வாழ்ந்திடுவியோனு பயம். பார்த்தீ.. உன் மேல ஆசை வைக்கிறப்போ இருந்த வைராக்கியம் எல்லாமே எப்படியோ பயத்துல நலிஞ்சு போச்சு. ஆனா என் மனசுல எப்பவுமே ஒரு உறுத்தல். நீ அடிக்கடி சொல்லுவியே வாழ்க்கைல நமக்கு பிடிச்சவங்களா பொருத்தமானவங்களா ஒருத்தர்தான் அமைவாங்க. அவங்கள நாம தவற விட்டா அத யாருமே ரீப்ளேஸ் பண்ண மாட்டாங்க. அதனால சமுகத்துக்கு ஒரு கல்யாணம் மனசுக்கு ஒரு கல்யாணம்னு பண்ண முடியாதுன்னு. அந்த நெருடல்தான் என்னை ரொம்பவே துரத்திச்சு. உன்னோட வாழ்க்கைக்கு பொருத்தமே இல்லாத எனக்காக உன்னோட வாழ்க்கைய பாழ்படுத்துவியோனு… பட் ரகுவ பார்த்ததுந்தான் எனக்கு புரிஞ்சது. நான் எவ்வளவு பெரிய சேடிஸ்ட். உன் அமைதியான வாழ்க்கையில வீணான குழப்பத்தை வர வைத்திட்டேன் இல்லையா?’ அவள் சிரிக்க முயன்றாள்.


நான் அவள் கைகளை ஒரு நிமிடம் போல் இழுத்துப்பிடித்து ஆறுதல் சொல்ல வேணும் போல் தோன்றிய எண்ணத்தை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

‘நீ வீணாக மனசை போட்டு அலட்டுகிறாய்’ என்றேன்.

அவள் என் காலை தொட்டு விடும் தூரத்தில் நெருக்கமாய் வந்தாள்.

‘பார்த்தீ நான் உனக்கு ஒன்று காட்டணும்’ என்றாள்.

நான் என்ன என்பது போல் பார்த்தேன். அவள் கைகளிரண்டையும் முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.

‘இதோ பாரு’ என்று உள்ளங்கைகள் இரண்டையும் விரித்தாள்.

‘பார்த்தாயா? என் கைகள் ரெண்டுமே பாவக்கறையால நெறஞ்சிட்டு பார்த்தீ. இந்தக் கைகளாலே தானே உன் கையை பிடிச்சு சத்தியம் பண்ணேன் உன்னை விட்டு போக மாட்டேனு. இந்த கைகளை தானே உனக்கு காட்டினேன். இந்த ரேகை போல நாம ஒண்ணா இருக்கணும்னு. நான் பாவி பார்த்தீ.. உங்கிட்ட எந்த ஒரு காரணமுமோ நியாயமுமோ சொல்லாம ஓடிப்போன நான் பாவக்காரி பார்த்தீ.. அவள் உள்ளங்கைகளை தரையில் அடித்துக்கொண்டு ஹிஸ்டீரியா வந்தவளைப்போல அழுதாள். பார்த்தீ என்னை மன்னிச்சிடு.. என்னால இந்த ரெண்டு கைகள்ளயும் பாவத்த சுமந்து வாழ முடியலையே..இதோ பாரு ரத்தமா இருக்குது நான் செஞ்ச பாவமெல்லாம்..’ அவள் வெறும் உள்ளங்கைகளை திருப்பிக் காட்டினாள்.

நான் கதிரையிலிருந்து இறங்கி அவளருகில் அமர்ந்தேன். என் யௌவனங்களில் நான் பார்த்து பழகி ரசித்த என் மனம் கவர்ந்த நேசத்துக்குரிய அந்த உயிர் வாடுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

‘என்னை பாரேன். நீ இப்படியே அழுதால் நான் இப்போதே போய் விடுகிறேன். ரகு வரும்வரை உள்ளே வர மாட்டேன்’


அவள் மெதுவாய் நிமிர்ந்து பார்த்தாள். எனக்கு புரிந்தது. என் மீது முப்பது வருடங்களுக்கு முன் அன்பு செலுத்திய அந்த மென்மை மனதுக்காரியின் போராட்டம் புரிந்தது. நான் அவளை சமாதானப்படுத்துவது போல் சொன்னேன்.

‘நம்ம வாழ்க்கை எப்படியோ மாறியிருக்கலாம். ஆனாலும் நாம தனித்தனியான சந்தோஷமா இன்னொருத்தங்களோட வாழ்க்கையில இருக்கிறோம் இல்லையா? எனக்கு உன் மேல இருந்த துளி வருத்தமும் இப்போது எனக்கில்லை. இனி நீ எந்த ஒரு சந்தர்ப்பத்திலயும் எனக்கு துரோகம் பண்ணதா நினைக்க கூடாது. இது என் மேல சத்தியம் சரியா?’

அவள் சரி என்பது போல் தலையாட்டினாள். மேலே எங்களுக்கிடையில் என்ன பேசுவது எனத் தோன்றவில்லை. வெறுமனே ஆளையாள் பார்த்துக்கொண்டிருந்தோம். அவள் விடைபெறும் போது பெரும் பாரம் நீங்கினாற் போல கையசைப்பது புரிந்தது.
…………………………………………………………………………………………………………………………………………….

ரகு என்னை ஆச்சர்யமாய் பார்த்தான்.

‘டாடீ..’ அவன் குரல் அடிவாங்கினாற் போல பாரமாய் ஒலித்தது.

‘நீங்க அப்போ அவங்களிடம் எதையுமே சொல்லிக் கொள்ளவில்லையா?’

நான் மெதுவாய் புன்னகைத்தேன்.

‘ரகு அவள் நான் நேசிச்ச பெண் ரகு. அவளோட குற்ற உணர்ச்சிய உன்னை என்னை பார்த்த கணத்தில போக்கிக்கிட்டாள். அப்படியிருக்கும்போது என்னால் எப்படி அவளை காயப்படுத்த முடியும் சொல்லு? நாங்க பரஸ்பரம் கொடுத்தது அன்பைத்தான். எதிர்பார்த்ததும் அதைத்தான். ஆனா இறைவனோ மனுஷனோ மதம், சாதி, சமூகம்னு ஒவ்வொரு பெயர் வெச்சு பிரிக்கிறப்போ என்ன பண்ண முடியும் சொல்லு? நான் நேசிச்சவளுக்கு என்னால அட்லீஸ்ட் கொஞ்ச நிம்மதியாவது இப்போ கொடுக்க முடிஞ்சதுனு சந்தோஷப்பட்றேன். இதைவிட என்னால எப்படி என்னோட அன்பை சொல்ல முடியும் ரகு?’

நான் காரை நோக்கி நடக்கத்தொடங்கினேன். ரகுவும் சில நிமிடங்கள் கழித்து ஏறிக் கொண்டான். அவன் அழுதிருக்க வேண்டும். மூக்கும் காது மடலும் சிவந்திருந்தது. நான் ஆதரவாய் அவன் தோளில் கை வைத்தேன். உடைந்து போனான். அப்படியே என்னை கட்டிக்
கொண்டான்.

‘டாடீ, நீங்க சொல்லியிருக்கோணும். நான் விபத்தில் இறந்து போன உங்க தங்கை குடும்பத்து மகன் என்று நீங்க சொல்லியிருக்கோணும். இந்த முப்பது வருஷமா யாரையும் கல்யாணம் பண்ணத்தோணல. உன்ன அந்தளவு விரும்பி தொலைத்தேனு சொல்லியிருக்கோணும் டாடீ’ அவன் குழந்தை போல தேம்பத் தொடங்கினான்.

நான் எதுவுமே பேசவில்லை. அவன் அழுகை குறையுமட்டும் வெறுமனே அவன் முதுகை தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தேன்.

எங்கள் இருவரையும் பார்த்து காரின் முன்னேயிருந்த போட்டோ சிரித்துக் கொண்டிருந்தது. அதில் லக்ஷ்மி, அவள் கணவன் நடுவில் அவர்கள் குழந்தை ரகு அத்தனை அழகாய் புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments