முகப்பருக்களும் தீர்வும்

0
1359

முகத்தைப் பளபளப்பாகப் பேணிக் காக்க வேண்டும் என்கிற எண்ணம் பெண்களுக்கு மட்டுமல்ல… ஆண்களுக்கும் உண்டு.. பொடுகுத்தொல்லை, உடல் சூடு காரணமாக முகப்பரு வரலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் முகத்தைப் ‘பளிச்’சென்று வைத்துக் கொள்ளவேண்டும். ஆனால், பல பெண்களுடைய தோற்றத்துக்கு மைனஸ் பாயிண்ட்டாக இருப்பது பருக்கள்தான். எப்படியாவது பருக்களை குணமாக்கிவிட்டாலும், அதனால் ஏற்பட்ட தழும்புகள், முகத்தில் அப்படியே நிலைத்து நின்று, முக அழகையே கெடுத்துவிடும்.

பரு ஏன் வருகிறது?

பொடுகு காரணம்
பரு முகத்தில் வருவதால், பருவக்கான கிரீமோ, பேக்கோ போட்டால் பரு போய்விடும் என்று பல பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பருவுக்கான காரணம் பலருக்கு தலையில் கூட இருக்கலாம்! ஆம்… தலையில் பொடுகுப் பிரச்னை இருப்பவர்களுக்கு முகத்தில் பரு வருகிறது. ஸ்கால்பில் உள்ள பாக்டீரியாக்கள் முகத்திற்கு இறங்கி வருவதால் அவை படும் இடங்களில் எல்லாம் பரு வருகின்றது. அதனால் பலருக்கு நெற்றியிலும் கன்னங்களிலும் பரு வருகிறது.

ஹார்மோன் இம்பேலன்ஸ் காரணமாக வரலாம்!
நம் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் இம்பேலன்ஸும் பரு வர ஒரு காரணம். பெண்கள் பெரியவளாகிய டீன்-ஏஜ் வயதில் ஹார்மோன்கள் முன் பின்னாக இருப்பதாலும் பரு வரலாம். இந்தக் காரணங்களால்தான் பீரியட்ஸ் ஏற்படும் நாட்களிலும் கூட சிலருக்கு பரு வருகிறது. இதே ஹார்மோன் இம்பேலன்ஸ் காரணமாக 40 வயதுகளின் கடைசியில் மோனோபாஸ் நிலையில் உள்ள பெண்களுக்கும் கூட பரு வரலாம். “சின்ன வயசுல கூட என்கு பரு வந்ததில்லே.. இப்போ போய் வருது’ன்னு பல பெண்கள் சொல்வதுண்டு!

எண்ணெய்ப் பசை சருமத்தால்: எண்ணெய்ப் பசை அதிகமுள்ள சருமம் என்றாலும், அதாவது நம் சருமத்தின் செபேஸியஸ் எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகம் இருந்தாலும் பரு வரலாம்.

குட்டையான தலைமுடியால்: குட்டையான தலைமுடி உள்ள சிலருக்கு அந்த முடி முகத்தின் சருமத்தில் குத்தி குத்தி கூட பாக்டீரியல் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு பருவாக வரலாம்.

  1. சருமத்தில் எண்ணெய் அதிகமாகச் சுரப்பதால்தான் பருக்கள் வருகின்றன.
  2. ஹார்மோன் கோளாறுகள்தான், பருக்கள் வர முக்கியக் காரணம். டீன் ஏஜ் பெண்களுக்கு, வயதுக்கு வந்தவுடன், உடலில் சில ஹார்மோன் மாறுதல்கள் வரும். எனவேதான், இந்த வயதுப் பெண்களுக்குப் பருக்கள் அதிகமாக இருக்கிறது.
  3. வயிற்றில் அல்சர் அல்லது வாய்வுப் பிரச்னை இருந்தாலும் கூட பருக்கள் வரலாம்.
  4. மன அழுத்தம் அதிகமாக இருந்தால், சரும வியாதிகளும், மூச்சு சம்பந்தமான பிரச்னைகளும் அதிகமாக வரும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
  5. உங்களுடைய வேலை அதிகமான அழுத்தம் தருவதாக இருந்தால்கூட, உங்கள் முகத்தில் பருக்கள் வரும்.
  6. வைட்டமின் பி, இரும்புச் சத்து உடலில் குறைந்தாலும் பருக்கள் தோன்றலாம்.

பரு வந்தால் கவனிக்க வேண்டியது என்ன?

முகத்தில் பரு வருபவர்கள் அனைவருக்குமே அவை கறுப்புத் தழும்பாக மாறிவிடுவதில்லை. பருவின் மேல் கை வைத்து அந்தப் பருவின் உள்ளிருக்கும் சீழை எடுக்கிறேன் என்று கிள்ளி கிள்ளி எடுத்தாலோ, அல்லது ஃபேஸ் பேக் போட்டு அழுத்தமாக தேய்த்தாலோதான் அந்த இடம் பாதிக்கப்பட்டு பரு, தழும்பாக மாறி மாதக் கணக்கில் நிறம் மாறாமல் அப்படியே நிநன்று விடுகிறது.
ஒரு கஷ்டம் என்னவென்றால் இன்று 90% இளம் பெண்கள், அவை கறுப்புத் தழும்பாக மாறும் என்று தெரியாமலேயே இப்படி முகத்தின் பருவை கிள்ளியெடுப்பவர்கள்தான். முகத்தில் கை வைக்காமல் பருவுக்கான ட்ரீட்மெண்டை மட்டும் நீங்கள் எடுத்துக் கொண்டால், பருக்கள் போய்விடும்… தழும்புகளும் வராது.

பரு வந்தால் என்ன செய்வது?
* பொடுகுப் பிரச்னையால் பரு வந்திருக்கிறதா என்று பார்த்து முதலில் தலையில் பொடுகை சரிப்படுத்திக் கொண்டால்தான் முகத்தின் பருக்கள் குறையும்!
* பொடுகு இருப்பதாகத் தெரிந்தால் தலை வைத்துப் படுக்கும் தலையணை மூலம் கூட பரு வரலாம். அல்லது வீட்டில் மற்றவருக்கும் வரலாம். எனவே படுக்கும்போது தலையணை மேல் ஒரு டவல் போட்டு தினம் அதை எடுத்து வாஷ் பண்ணி விட்டாலே பருவை வரவிடாமல் தடுக்கலாம்.
* பரு இருந்தால் முகத்துக்கு சோப் போடக்கூடாது. சோப்பில் உள்ள கொழுப்பு மறுபடி சருமத் துளைகளை அடைத்தக் கொண்டு விடும். பரு சீக்கிரம் போகாது…
இதற்கென்றே சில ஃபேஸ் வாஷ் கிடைக்கிறது. ஒயில் ஸ்கின்னுக்கு உரிய ஃபேஸ்வாஷ் அல்லது சென்சிடிவ் ஸ்கின்னுக்கு உரியது அல்லது அக்னே ஃபேஸ்வாஷ் என்று கேட்டு வாங்கி, சோப்புக்கு பதில் முகத்துக்குப் போடலாம். இந்த ஃபேஸ் வாஷில் ஆன்டி பாக்டீரியல் விஷயங்கள் உள்ளதால் பருவால் ஏற்படும் இன்ஃபெக்ஷன் குறையும்!

பருக்களைத் தடுக்க என்ன செய்யவேண்டும்?

  1. உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவுகளை அதிகமாகச் சாப்பிடுங்கள்.
  2. உங்களுக்கென்று தனியாக சோப்பு, சீப்பு, டவல் உபயோகியுங்கள்.
  3. மனதை எப்போதும் லேசாக சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.
  4. வைட்டமின் குறைபாடு (அல்லது) வயிறு சம்பந்தமான பிரச்னைகள் இருந்தால் உடனே உங்கள் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.
  5. முகத்தில் முதலில் ஒன்றிரண்டு பருக்கள் வந்தாலும் அதை உடனே கிள்ளிவிடாதீர்கள். இப்படிச் செய்தால் அந்தப் பருவிலுள்ள இன்ஃபெக்ஷன் முகத்தின் பல இடங்களிலும் பரவி, நிறைய புதுப்புதுபருக்கள் வர ஆரம்பித்துவிடும்.

பருக்களைக் குறைப்பது எப்படி?

ஒன்றிரண்டு நாட்களிலேயே பருவைக் குணமாக்க முடியாது. பொறுமை மிகவும் முக்கியம். நிறைய பெண்கள், முகத்தில் பெரும்பாலான இடங்களில் பருக்கள் வந்தவுடன்தான், சிகிச்சையையே தொடங்குவார்கள். இது மிகத் தவறு. சில பருக்கள் தலைகாட்டத் தொடங்கியவுடனேயே நாம் இந்தப் பிரச்னையைத் தீர்த்துவிடவேண்டும்.

இதற்கு நீங்கள் கடைகடையாக ஏறி இறங்க வேண்டியதில்லை. நம் வீட்டுக்குள்ளேயே பரு பிரச்னைக்குத் தீர்வு இருக்கிறது.
அவற்றில் சில,

  1. புதினா மிகவும் அற்புதமான மருத்துவக் குணம் கொண்டது. முகத்திலுள்ள எண்ணெய்ப் பசையைக் குறைத்து பருக்களை மறையச் செய்யும் ஜாலம் புதினாவுக்கு உண்டு. புதினா இலையை அரைத்து, பருக்கள் உள்ள இடத்தில் மட்டும் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்துப் பின் கழுவிவிட வேண்டும். தினமும் தொடர்ந்து இதே மாதிரி செய்து வந்தால், பருக்களுக்கு ‘குட்பை’ சொல்லிவிடலாம்.
  2. கற்பூர எண்ணெய் உள்ள க்ரீம்களுக்கும் பருக்களைப் போக்கும் சக்தி உண்டு. இந்தக் க்ரீமை காட்டனில் தொட்டு, பருக்கள் மீது தடவி விடுங்கள். அரைமணி நேரம் கழித்து, முகத்தைக் கழுவி விடுங்கள்.
  3. வீட்டில் நல்ல சுத்தமான சந்தனமும் பசு மஞ்சளும் இருந்தால் நீங்கள் எதைத் தேடியும் ஓட வேண்டியதில்லை. சந்தனம், மஞ்சள் இரண்டையும் சமமான அளவு எடுத்து, தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ளுங்கள். பிறகு அதை பருக்களின் மீது மட்டும் தடவி, அரை மணி நேரம் கழித்து, முகத்தைக் கழுவுங்கள்.
  4. எலுமிச்சைச் சாற்றுடன் நீர் சேர்த்து பரு உள்ள இடங்களில் தடவி இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பருக்கள் மறையும். சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கையும் எலுமிச்சைச் சாறு நீக்கும்.

தினமும் இதேபோல் செய்தால் உங்கள் முகத்தில் உண்டான பருக்கள் மட்டுமல்ல அதன் தடங்களும் முழுதாய் மறைந்து விடும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments