பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர், முகாமையாளர், உதவி முகாமையாளர், மேலதிகாரிகளென எத்தனை பேருக்குத்தான் பதில் சொல்வது? திறமையாக வேலை செய்தால், வருடத்திற்கு ஒரு முறைதான் பாராட்டு! தவறுதலாக பிழை செய்தால், பார்க்கும்போதெல்லாம் திட்டு! நானென்ன இதயமுள்ள மனிதனா? இல்லையென்றால் இயந்திர மனிதனா?
குருதி முழுவதும் வியர்வையாய் கசியும்வரை எம் உடலை பிழிந்து வேலை வாங்குவார்கள். மாத முடிவில் கிடைக்கும் சன்மானத்தில் கடன் கட்டியே பாதி முடிந்துவிடும். மீதியை வைத்து வாங்கும் உணவில் எப்படி புது இரத்தம் ஊறும்? இதை எண்ணி அழுதால் கண்ணீர்கூட வராது. அத்தனையும் வியர்வையாய் வெளியேறிவிட்டதே.
வேறு வேலை தேடினால், எட்டாம் வகுப்புக்கு மேல் எட்டாக்கனியான என் படிப்புக்கு எங்கு போனாலும் இதே வேலைதான் இதேயளவுதான் சம்பளம். அரசனை நம்பி புருசனை கைவிட்டதா ஆகிவிடக்கூடாது என்று என் எலும்போடு ஒட்டியிருக்கும் தோலைப்போல் இக்கம்பனியிலேயே பதினைந்து வருடங்களாக ஒட்டியிருக்கிறேன்.
காலையிலிருந்து மாலைவரை ஒவ்வொருவரும் சொல்லும் வேலைகளை ஓடியோடி செய்யவேண்டும். கடை ஊழியன் என்பதால் ஆயிரம் முறை கடைக்கு செல்லவும் வேண்டும். இரண்டு மாடிக்கட்டிடம் என்பதால் கோப்புகளை, பத்திரங்களை மேலும் கீழும் உடுத்துச்செல்ல வேண்டும். ஒரு நாளிலேNயு கால் எலும்புகள் கால்பங்கு தேய்ந்துவிடும் போலிருக்கும். என்ன செய்ய என்னை நம்பி வீட்டில் இரு உயிர்கள் உள்ளனவே.
மனைவியான ஓர் உயிர். இரண்டு மாத குழந்தையாக இன்னோர் உயிர்.
வீட்டுக்காக சேமிப்பதற்குகூட நான் திட்டமிட்டதில்லை. ஆனால் கடன்களை எப்படி முடித்துவிட வேண்டும் என்பதை தினமும் சிந்திப்பேன். முறையாக கடன்களை அடைத்தால்தான் அடுத்தமுறை இல்லையென்று கூறாது தருவார்கள்.
இன்று திங்கட்கிழமை. நாளை அரசாங்க விடுமுறை தினம். பலர் இன்றும் வேலைக்கு வரவில்லை. வந்தவர்களுக்கு குவியல் குவியலாக வேலைகள். வேலைகள் அதிகம் என்ற கோபத்தில் அதிகாரிகளும், இன்றைய வேலைகளை எப்படியாவது முடிக்கவேண்டும் என்கிற பதட்டத்தில் உயரதிகாரிகளும் தங்களது ஆதங்கங்களை என்னை வைத்து தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
என்னைப்போல் இன்னும் இருவர் வேலை செய்கிறார்கள். ஒருத்தனுக்கு இன்று வயிற்றுளைவு. அடுத்தவனின் மாமனார் மண்ணுக்குள் சென்று ஒரு வருட திதி. எனக்கு உடலுளைவோடு அலையவேண்டும் என விதி.
பந்துபோலவும் பம்பரம்போலவும் மாடிப்படிகளில் ஏறியிறங்கி ஒருவாறு அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டேன். களைத்துப்போய் முக்காலியில் அமர்ந்து கண்களை சற்று மூடினேன். ‘என்னங்க நாளைக்கு விடுமுறை நாள் என்பதால கடையெல்லாம் மூடிக்கிடக்கும். காலையில கஞ்சி வைக்க வரும்போதே அரிசி வாங்கிட்டு வந்திடுங்க’ மனைவி நமக்காக சொன்னதும். ‘கொழந்தைய நாளான்னைக்கு காலைல கிளினிக்குக்கு கூட்டிட்டு போகனும். அதுக்கும் காசுவேணும்’ என குழந்தைக்காக சொன்னதும் ஞாபகத்திற்கு வர சட்டென பைக்குள் கையை நுழைத்தேன். மாதக் கடைசி வாரம் என்பதால் வெறும் ஐம்பது ரூபாய் மட்டுமே இருந்தது. ஐந்து முறை தடவிப்பார்த்துவிட்டு ஆறாவது முறை தடவும்போது ஆறாவது அறிவிற்கு ஓர் எண்ணம் தோன்றியது.
இங்கு வேலைசெய்யும் அதிகாரி ஒருவர் வட்டிக்கு கடன்கொடுப்பார். அவரிடம் ஐநூறு ரூபாய் கேட்போம் என விரைந்து சென்று ‘ஐயா….. இதுவரை உங்ககிட்ட கடன் வாங்கியதில்ல. இன்னைக்கு ஐநூறு ரூபா கடனா தாங்க. சம்பளம் கிடைச்சதும் தந்திடுறேன்.’ என கைகளை பிசைந்தவாறே என்றேன். ‘நீ நம்ப லோகநாதன்கிட்ட போன மாதம் எழுநூற்றைம்பது ரூபா கடனா வாங்கினியே… திருப்பி கொடுத்திட்டியா…?’ அவர் பேனாவால் காதை குடைந்தவாறே கேட்டார். ‘இல்லைங்க. அதையும் இந்த மாதம் சம்பளம் எடுத்த உடனே கொடுத்திடுவேன்.’ என்றேன். ‘முதல்ல அத முடி. அப்புறம் நான் தர்றேன்.’ என கிண்டலாக கூறினார். அறை முழுதும் கேலிச்சிரிப்பால் நிறைந்தது. என் மனவறை முழுதும் அவமானத்தால் கணத்தது.
தலைகுனிந்துகொண்டே காரியாலயத்தின் தலைவாசல் வரை வந்தேன். எதிரே இருக்கும் தேநீர் கடை, அங்கு நான் தேநீர் வாங்கி குடித்ததே கிடையாது. ஆனால் கடைக்காரர் பழக்கமென்பதால் அவரிடமும் கேட்டேன். இரு குவளைகளில் தேநீரை ஆற்றிக்கொண்டே கைவிரித்தால் கீழே சிந்திவிடும் என்று வாயின் கீழ் உதடை மட்டும் முன்னோக்கி குவித்தார்.
பணி முடிந்து பணமின்றிய ஏமாற்றத்துடனேயே வீடுவரை கால்கடுக்க நடந்தே வந்தேன். நாளைய செலவுகளுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே வந்ததில் நடந்து வந்த தூரம் விளங்கவே இல்லை. வீட்டுக்குள் நுழைந்ததும் தரையில் கால்களை நீட்டி, கைகளை பின்னால் ஊன்றி அமர்ந்துகொண்டேன். வேலை அழுப்பு, அவமான உளைச்சல், ஏமாற்ற உணர்வு, நடைச்சோர்வு, நாளைய கவலைகள் என்பன ஒன்று சேர்ந்து மனதை சோர்வாக்கிக்கொண்டே இருந்தன.
‘ஹா…ஹீ….ஹு….’ கைகளையும் கால்களையும் ஆட்டிக்கொண்டு தொட்டிலில் படுத்திருந்தான் என் மகன். அருகே சென்று அவன் முகம் பார்த்தேன். ஒரு மெல்லிய புன்னகை. ஆஹா….! அத்தனை வலிகளும் பறந்தே போயின. இந்த உலகமே மறந்தே போயின. உயிரெங்கும் ஒருவித புத்துணர்வு பரந்தது. ‘உன்னைப்போலவே இருந்திருக்கலாம்.’ என உள் மனம் சொல்ல, மனைவி வந்து என் தோளை தடவினாள். அவளை நிமிர்ந்து பார்த்தேன். தனது காதணியை கையில் காட்டி என் மகன் சொன்ன அதே பதிலையே அவளும் எனக்கு சொன்னாள். மெல்லிய புன்னகை!
கற்பனைகள் யாவும்
எனக்கு சொந்தமானவை
சித்திரவேல் அழகேஸ்வரன்