வயதுக்கேற்ற கதையனுபவங்களை கடந்து கொண்டிருக்கும் எனக்கு 8 வயதிலிருந்து 12 வயதுக்குள் நான் படித்த மேஜிக் அனுபவங்கள்தான் வாண்டுமாமாவின் கதைகள். அம்புலி, மாயாவி, டின்டின் தொடர் கதைகளை விட வாண்டுமாமாவின் தொடர் சீரீஸ்களில் மூழ்கிப்போன சிறுவயதுப் பால்யங்கள் மிக அழகானவை மற்றும் இனிமையானவை.
அப்போதெல்லாம் புத்தகங்கள் வாங்குவதற்கு வசதி கிடையாது. எங்களுக்கு இலவசக்கல்வி அத்தனை பெரிய வரமாக இருந்த போது பிற நூல்கள் படிப்பதெல்லாம் பெரும் சாதனை. பாடசாலை தவிர்த்து என் பால்யத்தின் அதிக நேரங்களை கடத்திக் கொண்டது எங்கள் ஊர் நூலகம்தான். நூல்கள்தான். அப்போதெல்லாம் ஆச்சர்யப்பட்டிருக்கிறோம்! வாண்டுமாமாவிற்கு மட்டும் எப்படி எங்கள் உலகத்தை சிறிய பிரம்பிற்குள்ளும் மேஜைக்குள்ளும் விரிப்பிற்குள்ளும் ஒழித்து வைக்க முடிந்தது. இப்போதும் வாண்டுமாமாவின் கதைப்புத்தகங்கள் பழைய அட்டையுடன் சிதைந்த சில பக்கங்களுடன் கொண்ட நூல்களை தேடிப்படித்தது நினைவுக்கு வருகிறது. ஏதோ ஒரு சில பக்கங்கள் குறைந்தாலும் மனதுக்கு அத்தனை கவலை தரும். எங்கள் மாயாஜால உலகில் என்ன நடந்திருக்குமோ என்ற கவலை அது. வாண்டுமாமா எத்தனையோ தலைசிறந்த படக்கதைகள், விஞ்ஞானப் புனைவு, வரலாற்றுக் கதைகள், துப்பறியும் கதைகள், பொழுதுபோக்குக் கதைகள் படைத்திருக்கிறார். ஆனால் என்னால் இப்போதும் வாண்டுமாமாவின் மாயாஜால உலகத்தில் கிடைத்த அனுபவங்களிலிருந்து வெளிவர முடியவில்லை. கூட ஹாரி போட்டர் (Harry Potter) அனுபவங்களை எங்கள் பின் பால்யங்கள் கொண்டாடினாலும் என்னில் கடந்து போன அந்த பத்து வயது சிறுமியின் உலகினையும் மேஜிக் என்பது தன் வாழ்க்கையிலும் நிகழும் என அப்போது அவள் நம்பிக் கொண்டிருந்த நிலையினையும் நிமிடத்தில் ஆட்கொள்ள வாண்டுமாமாவே போதுமாக இருந்தார்.
வாண்டுமாமாவின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவர் எழுதிய 160 புத்தகங்களும் குழந்தை இலக்கிய உலகில் பொக்கிஷங்களாகப் போற்றப்பட வேண்டியவை. இன்றைய அதிவேக எந்திர உலகிலிருந்து கொஞ்சம் விடுபட்டு… இளைப்பாற விரும்பும் எவரும் வயது வரம்பின்றி படிக்கலாம். தங்கள் குழந்தைப் பருவத்தை மீட்டெடுக்கலாம்.
நீங்கள் படித்திருந்தாலோ அல்லது இன்னும் அதிகமாக தெரிந்தாலோ உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.
Nice
So good
Good
good