“அதிக காற்று – கடலில்
மீன்பிடிக்குச் செல்ல வேண்டாம்”
கூறியது வானொலி – இது
என்னைக் கூறிட்ட வானிடி
செல்பவனை தடுத்திடலாம் – பலத்த
காற்றாம் போகாதே என்று
சென்றவனை வரவழைக்கும் உத்தி
ஏதும் நான் அறியேன்
ஆழி அன்னை சாட்சியாக
தாலி பெற்ற நாளன்று
வாழி! என்ற கூற்று எல்லாம்
போலியாகிப் போய்விடுமோ?
கடலம்மா உன்னைக் கைகூப்பி
வேண்டுகின்றேன்
கரம்பிடித்தான் உன்னிடத்தே காணா தூரம் வந்து விட்டான்
காற்றின் பிடி சிக்கிடாமல் பக்குவமாய்
கரைசேர்ப்பாய்.
மீன்மகளைஅள்ளி வரும்
வேட்கையோடு சென்ற அவன் – இப்
பாவிமகள் துன்பம் தீர
ஆவியோடு மீள வேண்டும்.
காய வைத்த கருவாடாய் வாடிக்
கரையில் காத்திருக்கேன்
இவள் உப்பாய் கரையும் முன்பு
உவப்பாய் தோன்றிடையா!
கையில் லாம்பு ஏந்தி நிற்கிறேன்
உன் வெளிச்ச வீடாய்
உதயம் காட்டிடுவாய் கடல் மடியில்
புலரிப் பொழுதாய்
வெளிச்சம் தெரிகிறது கடல் வழியே
கண்டு கொண்டேன்
இதோ!
என் வேண்டுதல் யாவும்
கைகூடிச் சேர்ந்திடுமோ?
காணல் நீராய் போய் விடுமோ?…
மீனவப் பெண்களின் அவல நிலையை காட்டியுள்ள அற்புதமான படைப்பு
வாழ்த்துக்கள்