வேகமாகப் பரவும் ஒரு வகை வைரஸ் நோய்

0
3142

இன்று சிறுவர்கள் மத்தியில் ஒரு வகையான வைரஸ் ஆனது வேகமாக பரவி வருகிறது.

இந்த நோய் மருத்துவத்துறையை பொறுத்த வரையில் Hand-Foot-Mouth Disease என அழைக்கப்படும். சரியாக மொழிபெயர்த்தால் கை – கால் – வாய் நோய் என பொருள்படும்.

இது ஒரு வகையான வைரஸால் (Coxsackie Virus) ஏற்படும் ஒரு மிருதுவான (இலேசான) நோயாகும்.
தற்போதைய அதிக வெப்பமான காலநிலையால் குறிப்பாக மட்டக்களப்பில் இந்த நோய் அதிகமாக பரவி வருகின்றது.

இது குறிப்பாக பத்து வயதிற்கு குறைந்த குழந்தைகளை தாக்கும். அதிலும் குறிப்பாக ஐந்து வயதுக்கு குறைவான முன்பள்ளி சிறுவர்களை அதிகமாக பாதிக்கிறது.

இந்த நோய்க்கான அறிகுறிகள்
• இலேசான காய்ச்சல்
• தொண்டை வலி
• சிறு கொப்பளங்கள் கை கால் (குறிப்பாக முழங்கால்) வாய் மற்றும் பின் பகுதிகளில் (Buttocks) தோன்றுதல்.

இந்த கொப்பளங்கள் சிலவேளைகளில் சிறு வலியையும், கடியையும் ஏற்படுத்தும் ( கீழுள்ள படங்களில் இந்த கொப்பளங்களைப் பார்க்கலாம்)

நாம் பொதுவாக இந்தப் கொப்பளங்களை பார்த்து அம்மை நோய் (அம்மாள் நோய்) வந்துவிட்டதாக கருதினாலும், இது உண்மையில் அம்மை நோய் அல்ல.

இந்த நோய் பரவும் வழிகள்

இது குறிப்பாக பாதிக்கப்பட்ட மற்றைய சிறுவர்களிடமிருந்து பரவுகிறது
• உமிழ் நீரின் மூலம்
• மூக்கில் இருந்து வழியும் நீர்மூலம்
• கொப்பளங்களில் இருந்து வரும் நீர்மூலம்
• இருமும் போது ஏற்படும் துகள்களின் மூலம்

இந்த நோய்க்கான மருந்துகள்

இது ஒரு இலேசான நோய் என்றாலும் சில வேளைகளில் குழந்தைகளுக்கு சிக்கல் நிலைமையை ஏற்படுத்திவிடுகிறது. பொதுவாக வாயில் ஏற்படும் கொப்புளங்கள் காரணமாக அவர்கள் உணவு உண்பதை தவிர்ப்பதால் உடலிலிருந்து நீரிழப்பு (Dehydration) ஏற்படுகின்றது.

அதைவிட மிக மிக அரிதாக மூளைக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம்.

இது வைரஸால் ஏற்படும் நோய் என்பதால் இதற்கென்று குறிப்பிட்ட மருந்துகள் ஏதுமில்லை. பொதுவாக 3 தொடக்கம் 5 நாட்களில் குழந்தை சாதாரண நிலைக்கு திரும்பிவிடும்.

குழந்தை அதிகமாக சாப்பிடாத இடத்தில் வைத்தியரின் உதவியை நாடுதல் நல்லது. மேலும் கடித்தல் தன்மை கூடுதலாக இருந்தால் அதற்கும் மருந்தை எடுக்கலாம்.

இந்த நோயை தடுக்கும் முறைகள்

இதற்கென்று எந்த விதமான தடுப்பு மருந்துகளும் இல்லை. பொதுவான சுகாதார நிலைமைகளைப் பேணுவதன் மூலம் நோயை தவித்துக் கொள்ளலாம்.

• ஒழுங்கான கை சுகாதாரத்தைப் பேணுதல்.

• மலசல கூடத்தை உபயோகித்தபின் அல்லது குழந்தையின் மலசல தேவைகளை நிறைவேற்றிய பின் கைகளை நன்றாக சவர்க்காரம் இட்டுக் கழுவுதல்.

• குழந்தைகளுக்கும் இவ்வாறான நல்ல சுகாதார பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்தல்.

• இயலுமானவரை இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையை மற்ற குழந்தைகளிடமிருந்து தனிமைப்படுத்தி வைத்தல்.

• முன்பள்ளி செல்லும் சிறுவர்களை இந்த நோய் ஏற்பட்ட காலங்களில் வீட்டிலேயே வைத்து பராமரித்தல்.

சாராம்சமாக, இந்த Hand-Foot-Mouth Disease ஆனது வைரஸால் ஏற்படும், ஒரு மிருதுவான, தானாகவே சுகப்படும் ஒரு நோயாகும். மிக மிக அரிதாகவே சிக்கல் நிலைமைகளை ஏற்படுத்தும்.

Dr. விஷ்ணு சிவபாதம்
MBBS, DCH, MD Paediatrics
குழந்தை நல வைத்திய நிபுணர்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments