இரவு

0
716

நெடுநேரம் ஆடியோந்தவந்த அரங்கத்தில்
நுழைந்து கொண்டிருக்கிறாள்- அவள்
வருகையினை முன்னமே அறிந்தவையாய்
வாடலை முகழுழுக்கவப்பிக் கொண்ட
தினப்பூக்களை எள்ளி நகையாடிக்கொண்டனவையாய்
மணத்தாலேயே மதிகலங்க வேண்டி
போதை தருவித்த மல்லியையும் முல்லையையும்
பேதை நானோ சாளரவோரமாய் சல்லாபித்துக் கொண்டே
சலனப்படும் இராப்பொழுதுகளின் வனப்பை
சபதமிட்டுக் கூறிக்கொள்கிறேனிது இந்திரலோகமென்று

தன் தண்மைபூத்த வெள்ளிக்கரங்களை
தன்னலமற்று தரணியின் தரையிற்கூட தவழவிட்ட
மாதரசி மெல்லச் சாளரத்தில் சரிந்து
மனங்கிறங்கிக் கிடந்தவென்னை கண்டுகொண்டு
பெயர் கேட்டுச் சினுங்கிக் கொண்டாள்
பொறுமையறுத்து பொய்க்கோவம் பூண்டவென்னில்
கோடியொளிக் கரத்திலொன்றை எறிந்து
காதில் கிசுகிசுக்கிறாள் தன்பெயரும் நிலவென்று
ஆழவுறங்கிக்கிடந்தவன் அப்பொழுது தான் விழித்ததுவாய்
அல்லோலகல்லோலப்பட்டு ஆர்ப்பரித்த மரங்களின்
நிழல்களை அன்றுதான் முதன்முதலாய்
நிகழ்ந்ததுவாய் அகலக்கண் திறந்தே-நான்
அதிசயமாய் நோக்கையிலே- வஞ்சனைக்காரி
அலுத்துக்கொள்கிறாள் “நிறவேற்றுமையெலாம்
நிழல்களுக்கில்லையென்றும் நின்னையொத்த
நிர்மூடர்களுக்குள்ளே தானென்று”- மெய்யெனவறிந்தும்
பொய்யாய் கோபித்துக் கொள்கிறேன்
பொறுத்திருந்து பார்த்துவிட்டு சொல்லிக்கொள்ளாமலே
போய்விட்டாள் பாவம் என் கண்களில்
பொதிந்த கோவத்தீயில் சூரியனைக் கண்டாள்போலும்

மென்காற்றுக்குத் தான் எத்துணை கடமை- என்
மனப்பாரத்தையெலாம் காவ முடியாமல்
காவிச் செல்கிறது கடுகளவு பாரமுற்றவது
இதயத்தை முட்ட முட்ட நிறைத்து நிற்கும்
இன்ப மோன நிலை இவ்விரவில்
இன்னுமெனை இம்சித்து வதைத்துக்கொல்லும்-இந்த
இயலாமையை தேக்கிக் கொண்டே இளைக்கிறேன்
கனத்திருந்த கண்களுக்கு கண்டதெலாம் நிறப்பிழற்சியென -அழுது
களைத்திருந்த விழிகளை தடவித்தடவிப் பூரிக்கிறேன்
காட்சிகளிடமிருந்து கனவும் கனவுகளிடமிருந்து காட்சியும்
கலப்படமற்றுக் கலந்திருக்க சாந்தையும் உருக்கிரும்பையும்
கடந்து கண்டவழியிலேயேவோடிக்
களைக்கிறேன் கண்களின் கபடமென்றெண்ணி
“கணநேரங்கூடவுனை கண்கலக்க விரும்பவில்லை- என்
கண்மணியே ஏனழுகிறாய்” என்றவக்கண்களையே
கண்டு கரைகிறேன் காலங்கள் கடக்கிறேன்

ஊழித் தாண்டவத்திலிருந்து உயிர்பிழைத்து வந்தவளாய்- எந்திர
உலகிலிருந்து தருவிக்கப்பட்டவள் நான்
உள்ளம் முழுக்கப் புளகாங்கிதங் கொள்கிறேன்
உண்மையறியும் வரை அக்காலங்களிலேயே கரைகிறேன்
சிறையிருப்பதாய் எண்ணிக் கொண்டு
சிறிது நேரத்திற்கெலாம் பதைபதைத்துத் துடிக்கிறேன்
சாளரந்தாண்டி நின்றவன் நிழல்களில் மறைந்தவாறே
சிறிதேதுமறியாதவனாய் சிரித்து நடிக்கிறான்- எனைச்
சிறை மீட்டுச்செல்லாயோவென்றதற்கு- நாளை கூட்டிச்செல்லவரும் வரை
சிலபொழுதும் மறக்கக்கூடாதென தன்பெயரை
சொல்லிச் சொல்லி நிபந்தனை விதித்து
சிரிப்புடனே விடைபெறுகிறான்
சிரமசைத்த பொழுதினிலே சிட்டாய் பறந்தவனுக்கு
செம்மையான பெயர்தானென வியக்கிறேன்
ஆம்
கணுக்கால் மட்டும் கறுத்திருந்தால்
கரிகாலனாய் பெயர்சூட்டலாம்
உடல்முழுதும் இருள்புனைந்தோனுக்கு இரவு
என்பது தக்கபெயர் தானே!!!!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments