ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 05

0
709

பாக்தாத்தில்

கதிரவன் நன்றாக வெளியே வந்தபின்தான், ராணுவ வாகனங்கள் செல்வதற்கு அணிவகுத்து நின்றன. இங்கிருந்து இரண்டுக்கும் மேற்பட்ட வாகன பாதுகாப்பு தொடரணிகள் சென்றன. வேறுவேறு பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் உரிய பாதுகாப்புத் தொடரணியில் இணைந்து கொண்டன. நாங்கள் பாக்தாத் செல்லும் வாகனத் தொடரணியில் இணைந்துகொண்டோம். கோடையில் இங்கு இளங்காலை இல்லை எனலாம். விடிந்த சிறிது நேரத்திற்குள் கதிரொளி சுள்ளென சுடத்தொடங்கிவிடும் .

முந்தைய நாள் இரவில் சிற்றுந்தின் இருக்கையில் கண்மூடியமர்ந்திருந்தேன். சிறுது நேரம் உணர்வுகளுடன் துயின்றிருப்பேன். எண்ணங்களும், கனவுகளுமாக கழிந்த நீண்ட இரவு அது. தூங்காத இரவுகள் அனைவருக்கும் மிக நீளமானதுதான். இராண்டாம் நாள் பயணத்தில் அனைவருக்கும் பயஉணர்வு குறைந்திருந்தது. முந்தையநாளில் கண்ட புழுதிபடிந்த வெட்டவெளிகள் கொஞ்சம் மறைந்து சிற்றூர்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளுமாக பயணம் தொடர்ந்தது. குவைத்திலும், ஈராக்கிலும் கட்டிடங்களுக்கு வண்ணச்சாயம் பூசியிருக்கவில்லை. மண்ணின் நிறத்திலேயே கட்டிடங்கள் இருந்தன.

தலைநகரை நெருங்கும்போது குண்டுகளுக்கு இரையான கட்டிடங்கள் சின்னாபின்னமாகி, கைவிடப்பட்டநிலையில் நிறையவே தெரிந்தன. சதாமின் பிரமாண்ட சிலை சிதைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம். எங்கள் வண்டியில் ஒரு குரல் இப்படியாக இருந்தது “இந்த நாட்டின் பல ஆண்டுகள் சர்வாதிகாரியாக இருந்தவர் கற்துண்டுகளாக கிடக்கிறார்” என. மாலையில் ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தை அடைந்தோம் .

பாக்தாத்தின் விமான நிலையமும் அமெரிக்கப் படையின் முழுக்கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால், விமான நிலையம் இயங்கவில்லை. எங்கள் வாகனத்தொடரணியை விமான நிலையத்தின் பின்புறமிருந்த வாயிலில் காவலர்கள் சோதனை செய்தபின், உள்ளே அனுமதிக்கப்பட்டோம். எங்களுடன் வந்த மற்ற ராணுவ வாகனங்கள் பிரிந்து சென்றன. எங்களின் சிற்றுந்து மட்டும் தனித்து விடப்பட்டது. விமானநிலைய ஓடுபாதையோ, விமானநிலையத்தின் கட்டிடங்களோ எங்களுக்குத் தென்படவில்லை. இன்றிரவு இங்கு தங்கிவிட்டு காலையில் புறப்புடுவோம். அருகில் தான் பக்குபா என்றனர். மாலையில், எங்களுடன் வந்திருந்த மும்பையின் ஸாம், அமெரிக்கர்களின் ரக்பி பந்து ஒன்றை கண்டெடுத்தார். இருட்டும் வரை மகிழ்ச்சியாக அதில் கால்பந்து விளையாடினோம் .

 

 

 

 

 

நானும் நண்பன் ஒருவனும் இரவில் எங்களுடைய சிற்றுந்தின் மேல் படுத்துக்கொண்டோம். தேய்நிலவு நாளானதால், நட்சத்திரங்கள் பிரகாசமாக மின்னிக்கொண்டிருந்தது. ஊரில் கடற்கரைக்குச் செல்லும் வழியிலுள்ள அந்தோணியார் கோயிலருகிலுள்ள வெட்டவெளி மணலில் கருக்கலில் நண்பர்களுடன் நட்சத்திரங்களை ரசித்ததை சொல்லிகொண்டிருந்தேன். அந்த இனிய நினைவு நீடிக்கவில்லை. பயங்கர சப்தத்துடன் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டது. பயத்தில் எழுந்து அதிர்ச்சியுடன் கீழே இறங்கினோம். பின்பு பேருந்தினுள் சென்று அமரும்படி வேண்டினர். அது தான் நான் கேட்கும் முதல் குண்டு வெடிக்கும் சப்தம். அப்போது தெரிந்திருக்கவில்லை, தினமும் அருகிலேயே பொழியும் குண்டு மழையில் தான் இனி நாட்கள் கழியப் போகிறது என.

நானும் நண்பனும் சிற்றுந்தினுள் ஏறும்போது, ஸாம் சிரித்துக்கொண்டே “பஸ்ஸுக்கு மேல குண்டு விழுந்தா என்ன செய்வது” எனக் கேட்டார். யாரிடமும் அதற்கு பதில் இல்லை. நெடுநேரத்திற்குப் பின் எப்போதோ தூங்கியிருப்பேன். காலையில் எழுந்தபோது, கொஞ்சம் பிரட்டும் பாலும் சாப்பிடக் கிடைத்தது. காலை பத்துமணிக்கு மேல்தான் எங்களுடைய வாகனம் புறப்பட்டது. பாக்தாத் விமானநிலைய வாயிலிலிருந்து சாலைக்கு வந்ததும் பாதுகாப்புக்கு வந்த ராணுவ வாகனங்கள் எல்லாம் பிரிந்து சென்று விட்டது. எங்கள் வண்டிக்கு முன்னால் ஒரு ஜீப் மட்டும் வழிகாட்ட அதைப் பின் தொடர்ந்து சென்றோம்.

இப்போதுதான் பயம்நிறைந்த பயணம் தொடங்கியது. ரோகன் “நாம் மட்டும் தனியாகச் செல்கிறோம் , மிலிட்டரி வண்டி ஒன்னும் நம்ம கூட வரல” என அவன் பங்குக்கு பீதியை கிளப்பிவிட்டான். இரு தினங்கள் அதிநவீன துப்பாக்கி ஏந்திய ராணுவ வாகனங்களுடன் வந்ததால் இப்போது தனித்துச் செல்வது பாதுகாப்பற்றதாக தோன்றிற்று. பாக்தாத் சாலைகள் நல்ல நீள, அகலமாகவே இருந்தது. நீண்ட நாள் பாராமரிக்கப்படாததால் குலுங்கியும், சாய்ந்தும் மெதுவாக சென்றுகொண்டிருந்தது எங்கள் வாகனம். ஒற்றைக் கழுதை வண்டியில் பொதிகளுடன் சென்றவர், எங்களைப் பார்த்துக் கறைபடிந்த பற்கள் தெரிய புன்னைகத்து கையசைத்தார். அவர் கந்தலாடைகளை அணிந்திருந்தார். தொடர் போர்களினால் பாதிக்கப்பட்டதின் விளைவு தலைநகரின் முக்கிய சாலையில் தெரிந்தது. இல்லையெனில், முன்னேறிய நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும் ஈராக். பதினோரு ஆண்டுகள் ஈரானுடன் போர். பின் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொன்னூற்றி ஒன்றாம் ஆண்டில் குவைத் எனது மாநிலம் என சதாம் படைகளை அனுப்பி பிடிக்க அப்போதும் போர். அமெரிக்கா படைகளை அனுப்பி குவைத்தை மீட்டது. இப்போது மீண்டும் போர் .

மதியத்திற்குள் பக்குபாவை அடைந்தோம். வாயிலில் எங்கள் அனைவரின் உடமைகளையும், பயணப்பைகளையும் ஏற்றிவந்த வண்டியிலிருந்து இறக்கி ஒன்று விடாமல் சோதனை செய்தனர். வாகன தொடரணியுடன் பயணித்த இருநாட்களும் நாங்கள் இரவு தங்குவதற்கு முகாம்களுக்குள் நுழையும்போதுபோது ராணுவ வாகனங்களுடன் சென்றதால் அதிக சோதனைகளின்றி தப்பித்தோம்.

 

 

 

 

 

பொதுவாக முகாம்களுக்குள் செல்லும்போது வாயிலில் இருக்கும் காவலர்கள் முதலில் கேட்பது “கைய்ஸ், ஆர் யூ ஸ்பீக் இங்கீலீஷ்?” என. ஆம் என்றால்,அங்கேயே நில் என்பான். வாயிலிலிருந்து பத்தடி தூரத்தில் அசையாமல் நிற்கவேண்டும். வாயிலில் இருக்கும் காவலர் குழுவின் துப்பாக்கிகள் எங்களை நோக்கியிருக்க, ஒரேயொரு வீரன் மட்டும் அருகில் வந்து அடையாள அட்டைகளை பார்த்தபின், இயேசுநாதர் போல் கைகளை விரித்து நிற்கவேண்டும். உடலில் ஏதேனும் ஆயுதங்களை பதுக்கிவைத்துள்ளனரா என கைகளால் உடல் முழுதும் தடவி உறுதி செய்தபின் ஒவ்வொருவராக வாயிலை நோக்கிச் செல்லவேண்டும். அங்கிருக்கும் குழு துப்பாக்கி முனையில் உடமைகளை சோதனை செய்து முடித்தபின்தான் உள்ளே செல்லமுடியும். அதன் பின் தான் எகிறிய இதயத்துடிப்பு மெதுவாக கீழிறங்கும் எங்களுக்கு .

எங்களுடன் வந்த பிரதீக் “உலகம் முழுவதும் எதிரிகளை சம்பாதித்து வைத்துள்ளனர். அதனால் தான், யாரைக் கண்டாலும் இவனுவளுக்கு பயம். நகம் முடி என அனைத்தையும் சோதிக்க காரணம்” என்றான். ஒரு சிலரிடமே செல் போன்கள் இருந்தது. பக்குபா முகாமின் வாயில் காவல் படை வீரர்கள் , அதை வாங்கி வைத்துக் கொண்டனர். என்னிடம், குவைத் முகாமில் அமெரிக்க அதிகாரி எரிக் அன்பளிப்பாகக் தந்த வளைந்த,கைப்பிடியுடன் கூடிய போர்க்கத்தி இருந்தது. அதையும் அவர்கள் அனுமதிக்கவில்லை .

அவர்கள் முகாமிற்குள் அனுமதிக்காத போனுக்கும், கத்திக்கும் சீட்டுகளில் எழுதித்தந்துவிட்டு எங்களனைவரையும், இரண்டு மணிநேர நீண்ட சோதனைக்குப்பின் உள்ளே செல்ல அனுமதித்தனர். பக்குபா ஈராக்கின் விமானப்படை மையமாக இருந்திருக்கிறது. ராணுவ ஹெலிகாப்டர்களும், விமானங்களும் இறங்கும் வசதியுடன்கூடிய மையம் அது. அமெரிக்கப் படைக்கு கிடைத்த வசதியான ஒரு விமானத்தளம் அது. அவைகளை பயன்படுத்திக் கொள்ளவே அமெரிக்கா அங்கே ஒரு முகாமை அமைத்திருந்தது.

பக்குபாவின் மணல் பெரும் தூசு படலம். காலைத் தரையில் வைத்தால் இரு அங்குலத்திற்கு மேல் புதையும். வாகனங்கள் அருகில் சென்றால், தூசு படலம் காற்றில் பறந்து எதிரிலுள்ள எதுவும் தெரியாது. எங்களுக்கு குடியிருப்பு கூடாரம் மட்டுமே இருந்தது. உணவுக்கூடம் இன்னும் தயாராகவில்லை. குளிரூட்டி வசதி செய்யப்பட்ட தங்கும் கூடாரத்தில், நான்கு குளிரூட்டிகள் செங்குத்தாக ஆறு அடி உயரத்தில் நின்றுகொண்டிருந்தது . குளிரூட்டிக்கு அருகில் இருந்த கட்டில்களுக்கிடையில் நிறைய இடைவெளி இருந்ததால் நானும் கார்த்திக்கும் அதனருகில் உள்ள இரு கட்டில்களில் எங்களது பைகளை வைத்து “இது எனக்கு”என இடம் பிடித்துக்கொண்டோம் .

 

 

 

 

 

அன்றிரவு கூடாரத்தின் வெளியில் இடுப்பளவு உயரத்தில் கான்கீரிட்டால் அமைக்கப்பட்ட மேடையில் மின்சார அடுப்பு வைத்து, அதன் மூன்று புறமும் பலகைகளால் மறைக்கப்பட்டிருந்த தற்காலிக மேற்கூரையில்லா திறந்தவெளி அடுமனையில் எங்களுக்கு இரவுணவாக சாதமும், கோழிக்குழம்பும் தயார் செய்தனர். கோழிக்குழம்பின் மணத்தை நுகர்ந்த இரு ராணுவ வீரர்கள், காற்றில் அந்த வாசனை மிதந்துவந்த பாதையைத் தொடர்ந்து நடந்து, எங்களின் அடுமனைக்கருகில் வந்து சேர்ந்தனர். உணவு தாயாராகிக்கொண்டிருப்பதைக் கண்டதும், இருவரும் ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்துவிட்டு காத்திருந்தனர். புத்துணவு கிடைக்கும் மகிழ்ச்சி அவர்கள் விழிகளில் தெரிந்தது. ஓரமாக ஒதுங்கியே நின்றுகொண்டிருந்தனர். எதுவும் பேசிக்கொள்ளவிள்ளவில்லை. உணவு தயாரானதும், முதலில் அவர்களை அழைத்து உணவைக் கொடுத்தோம்.

“நன்றி” என பலமுறை சொன்ன பின் வெள்ளைநிற நெகிழியானால் ஆன தட்டுகளில் ஆவி பறக்கும் உணவை இருகைகளாலும் வாங்கிச் சென்றனர். இந்தியர்கள் சாப்பிடும் அந்த காரம் அவர்களால் சாப்பிடவே இயலாது. தட்டு நிறைய சோறு சாப்பிடும் பழக்கமும் அவர்களுக்கில்லை. நீண்ட நாட்கள் பையில் அடைத்த காய்ந்த உணவை சாப்பிட்டு நாக்கு செத்து போனவர்களுக்கு, சூடாக புத்தம் புதிதாக கிடைக்கும் உணவு அமிர்தம் தானே. பசி ருசியறிவதில்லை. பசியுடன் இருப்பவர்களுக்கு முதல் தேவை உணவுதானே. அன்று அவர்கள் நிறைவாக சாப்பிட்டிருக்கலாம். மறுநாள் முதல், தினமும் இரவில் மூன்று அல்லது நான்கு பேர் வந்தனர் .

அன்றிரவு, நாங்களும் இருநாட்களுக்குப் பிறகு சாப்பிட்ட நிறைவை உணர்ந்தோம் .

தொடரும்….

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments