29.2 C
Batticaloa
Friday, February 13, 2026

மருதாணி (Henna)

0
2327

 

 

 

 

 

மருதாணி/மருதோன்றி/மயிலாஞ்சி என்றழைக்கப்படும் செடியின் தாவரவியல் பெயர் Lawsonia inermis. இது லித்ரேசியே (Lythraceae) குடும்பத்தைச்சேர்ந்தது. வளைகுடா நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தெற்காசியநாடுகளின் கலாச்சாரத்தில் முக்கிய இடம்பெற்றிருக்கும் இத்தாவரம் பலுசிஸ்தானிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அங்கிருந்தே இது உலகெங்கிலும் பரவியிருக்கவேண்டும்.

பல நாடுகளில் இது வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது. Lawsonia inermis என்னும் இத்தாவரத்தின் அறிவியல் பெயரின் வேரைத் தேடினால் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. தாவரவகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படும் லின்னேயஸின் (Linnaeus ) நண்பரும் லின்னேயஸின் நூல்களை பிரசுரம் செய்வதில் மிக உதவியாக இருந்தவருமாகிய லாசோன் (lawson) என்பவரை கெளரவிக்கும் விதமாகவே இதன் பேரினத்துக்கு இப்பெயரை லின்னேயஸ் இட்டிருகிறார். inermis என்னும் சிற்றினப்பெயருக்கு முட்களற்ற என்று பொருள். தமிழில் இச்செடி அலவணம் ஐவணம் எனவும் அழைக்கப்படுகின்றது.
பண்டைய இந்தியாவின் உடற்கலையின் ஒரு முக்கிய வடிவமாக மருதாணி இலைச்சாற்றின் சித்திரங்கள் இருந்துவருகின்றன. அக்காலப்பெண்கள் தங்கள் மார்பில் மருதாணிச்சித்திரங்களை வரைந்துகொள்ளுவது ’தொய்யல்’ எனப்பட்டது ’மெஹந்திக’ என்னும் சமஸ்கிருத சொல்லிலிருந்தே மெஹந்தி என்னும் சொல் வந்தது. மருதாணி அலங்காரத்தில் பல வேறுபாடுகள் உள்ளன. பிரதானமாக அராபிய, வடிவம் இந்தியவடிவம் மற்றும் பாகிஸ்தானிய வடிவங்கள் ஆகியவை உள்ளன.
மருதாணிச்செடி கிளைகள் நிறைந்து ஒரு குறுமரமாகவோ அடர்ந்த புதராகவோ வளரும் இயல்புடையது. ஒருசில வகைகளில் மட்டுமே முற்றிய தண்டுகளில் முட்கள் காணப்படும். உறுதியான தண்டுகளும் எதிரடுக்கில் மிகக்குறுகிய இலைக்காம்புகளுடன் சிறிய நீள்முட்டை வடிவ இலைகள் இருக்கும். வெள்ளை அல்லது சிவப்பு நிறங்களில் கொத்துகொத்தாக நறுமணமுள்ள மலர்கள் காணப்படும்.

சிறிய உருண்டைவடிவ நான்கு பகுதிகளாக இருக்கக்கூடிய ஏராளமான உலர்விதைகளுடன் கனிகள் இருக்கும். விதை உறை மிக கடினமானது.

லாசொனியா எனும் பேரினத்தில் இருக்கும் ஒற்றைச்சிற்றினம் இனர்மிஸ் மட்டுமே ஆகும். எனவே இது monotypic genus எனப்படுகின்றது. இச்செடி நல்ல வெப்பமான காலநிலையில் மட்டுமே செழித்து வளரும். 11 டிகிரி செல்சியஸுக்கு குறைவான வெப்பநிலையில் இச்செடி வளர்ச்சி குறைந்து இறந்துவிடும்.

மருதாணி சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகமக்களின் பயன்பாட்டில் இருந்துவருகின்றது. எகிப்தியர்களின் பாடம் செய்யபட்ட மம்மிகளின் கை மற்றும் கால் விரல் நகங்களில் மருதாணிச்சாயம் இருக்கிறது. இறைத்தூதர் நபி அவர்கள் இஸ்லாமிய ஆண்கள் தங்கள் தாடிகளை மருதாணியால் சாயமேற்றிக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார். இஸ்லாமிய பெண்களும் அவரது வழிகாட்டுதலின் பேரிலேயே கைவிரல்களையும் உள்ளங்கைகளையும் மருதாணி சித்திரங்களாலும் வடிவங்களாலும் சாயமேற்றி அழகுபடுத்திக்கொள்ளுகிறார்கள்.

இந்தியாவிற்கு மருதாணி முகலாயர்களால் 12 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் கைகளையும் கால்களையும் அழகுபடுத்திக்கொள்ளவும் மணப்பெண்ணின் உடல்முழுக்கவே மருதாணிச்சித்திரங்கள் வரைந்துவிடுவதும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. மொராக்கோவில் கர்ப்பிணிகள் மருதாணி இட்டுக்கொள்ளுவதால் தங்களை தீய சக்திகள் நெருங்காது என்று நம்புகிறார்கள் இன்னும் பல சமுதாயங்களில் மருதாணி இட்டுக்கொள்ளுவது மங்கலம் என்றும் நம்பப்படுகின்றது.

இந்தியாவில் நடைபெறும் பாரம்பரிய இந்து மற்றும் சீக்கிய திருமணங்களில் மருதாணி மிக முக்கிய இடம் பெற்றிருக்கிறது. அஸ்ஸாமில் ரொங்கலி பிகு என்னும் நிகழ்வில் மருதாணி மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.
பாகிஸ்தானி மருதாணி விருந்தென்பது மணமகள் குடும்பத்தினரால் கொண்டாடப்படும் முன்திருமண நிகழ்வில் மிக முக்கியமான ஒன்றாகும் பங்களாதேஷில் சம்பிரதாயபூர்வமாக மருதாணி இட்டுக்கொள்ளுவது இருநிகழ்வுகளாக மணமகன் மற்றும் மணமகள் இருவரின் தரப்பிலும் மிகவிரிவானதாக நடத்தப்படும். இங்கிலாந்தில் பர்மங்ஹாம் எனும் இடத்திலேயே மருதாணி நிகழ்வுகள் வழக்கமாக நடைபெறும்.

மருதாணி இலைகளில் 2-hydroxy1.4 napthoquinone (Lawson) எனப்படும் வேதிப்பொருள் உள்ளது இதுவே இலைச்சாற்றின் அடர்செம்மண் நிறத்துக்கு காரணமாகும். நல்ல வெப்பமான இடங்களில் வளரும் மருதாணிச்செடிகளின் இலைகளின் அதிகமாக காணப்படும் இந்த வேதிப்பொருள் சருமத்தை இளம் ஆரஞ்சு நிறத்திலிருந்து கருஞ்சிவப்பு நிறம் வரை சாயமேற்றும். பித்த உடல் கொண்டவர்களின் சருமம் கருஞ்சிவப்பிலும் பிறருக்கு செம்மண் நிறத்திலும் மருதாணி சாயமுண்டாக்கும்.

இவ்வேதிப்பொருள் இலைநரம்பிலும் தளிரிலைகளிலும் அதிகம் காணப்படும்.
இலைகளை அரைக்கையில் இந்த வேதிப்பொருள் கசிந்து வெளியேறி பின்னர் சருமத்திலும் நகங்களிலும் உள்ள புரதங்களுடன் இணைந்து சிவப்பு சாயமூட்டுகின்றது. உடலின் பிறபாகங்களை விட உள்ளங்கால் மற்றும் உள்ளங்கைகளின் தடித்த சருமத்தில் மருதாணிச்சாறு மிக நன்றாக சாயமூட்டி பலநாட்கள் மருதாணிச்சிவப்பை அவ்விடங்களில் தக்கவைக்கின்றது.

மருதாணிச்சாற்றில் எலுமிச்சை சாறு, கிராம்புச்சாறு, புளி, சர்க்கரைக் கரைசைல், காப்பி, டீ ஆகியவற்றை சிறிதளவு சேர்க்கையில் சாயத்தை இன்னும் அடர்த்தியாக்கலாம். மருதாணிஇலைகளை அரைத்த விழுதை சருமத்தில் பூசியபின்னர் நீராவியில் காட்டுவதாலும் சாயம் அடர்த்தியாகும். 4லிருந்து 6 மணிநேரம் சருமத்தில் வைத்திருந்த பின்னர் நீரில் கழுவுகையில் OXIDATION ஏற்பட்டு சாயத்தின் அடர்த்தி குறையுமென்பதால் உலர்ந்த மருதாணியை தாவர எண்ணெயைக்கொண்டு அகற்றலாம்.

மருதாணியை அரைத்துப்பூசுகையில் சாயம் சருமத்தின் ஒவ்வொரு அடுக்காக ஊடுருவிச்சென்று சாயமேற்றுகின்றது. சருமத்தின் மேலடுக்கு அடர்ந்த நிறத்திலும் கீழே செல்லச்செல்ல நிறம் குறைந்து கொண்டும் வரும். ஒருமாதம் வரைக்கும் இருக்கும் இந்த சாயம் பின்னர் மெல்ல மெல்ல புதிய சரும அடுக்குகள் உருவாகுகையில் மங்கிக்கொண்டே வரும்.

மருதாணி தலைமுடியையும் நிறமூட்டுகின்றது. தலைக்கு மருதாணி சாயமேற்றிக்கொள்கையில் அது முடிவளர்ச்சிக்கும் உதவி தலையில் பேன் மற்றும் பொடுகுகளையும் அழித்துவிடுகின்றது. தலைமுடிக்கு உபயோகப்படுத்தும் போது அரைத்த மருதாணி விழுதை 8 மணிநேரம் கழித்து உபயோகப்படுத்த வேண்டும் விழுது தலைமுடியில் 20 நிமிடங்கள் இருந்தால் போதும்.

பண்டிகைக்காலங்களிலும் திருமண விழாக்களிலும் அழகுபடுத்திகொள்ளுவதற்காக மருதாணிச்சாறு அதிகம் பெண்களாலும் குறைந்த சதவீதத்தில் ஆண்களாலும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு சில நாடுகளில் வளர்ப்பு மிருகங்களுக்கும் மருதாணியிட்டு அழகு பார்க்கிறார்கள்.

 

 

 

 

 

 

கோடையில் வாரம் ஒருமுறை மருதாணியை அரைத்து தலையில் பூசிக்குளிக்கையில் உடல்வெப்பம் பெருமளவில் குறையும்.

கைகால்களில் மருதாணி இட்டுக்கொள்வதும் உடலைக்குளிர்விக்கும். மருதாணி மலர்களை ஒரு துணியில் கட்டி தலையணைக்குள் வைத்துக்கொண்டால் நல்ல ஆழ்ந்த உறக்கம் வரும்.

மருதாணி இட்டுக்கொள்ளுவதால் மனஅழுத்தம் தலைவலி காய்ச்சல் சருமவியாதிகள் ஆகியவை நீங்கும்.

மருதாணி உடலைகுளிர்விப்பதால் பெண்கள் இதை வைத்துக்கொள்ளுகையில் அவர்களின் மாதவிலக்கை ஒத்திப்போடலாம். இதன்பொருட்டே பல சமூகங்களில் முக்கிய மங்கல விழாக்களின் போது குடும்பத்தின் அனைத்துப்பெண்களும் மருதாணி வைத்து தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் வழக்கம் வந்தது. மருதாணியிண் மணம் பாலுணர்வை தூண்டும் என்றும் அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அஜந்தா குகை ஓவியங்களில் மருதாணிச்சாற்றின் வண்ணங்களை இன்றும் காணலாம்.

மருதாணிச் சாற்றில் வலம்புரி ஸ்வஸ்திகம் வரைந்துகொள்ளுவது வட இந்திய வியாபாரிகளிடம் பலகாலமாக இருந்து வரும் வழக்கமாகும். மலர்களிலிருந்து நல்ல மணமும் மருத்துவ குணங்களும் நிறைந்த மருதாணி எண்ணெய் எடுக்கப்படுகின்றது. இலைச்சாறு தசையினை இறுக்கும் தன்மை கொண்டது. கிருமிகளையும் அழிக்கும். துணிச்சாயமாகவும் கூட இவை அதிகம் இப்போது பயன்பாட்டில் உள்ளன.

இந்தியாவில் மருதாணி குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அதிகமாக சாகுபடி செய்யபடுகின்றது. ராஜஸ்தானின் பாலி கிராமத்தில் 150 வருடங்களாகவே மருதாணி சாகுபடி செய்யாப்படுகின்றது. 3 மாதங்கள் வளர்ந்த மருதாணிச்செடிகளிலிருந்து தொடர்ந்து இலைகளை எடுத்துக்கொண்டெ இருக்கலாம் மருதாணி எல்லா விதமான மண் வகைகளிலும் நன்கு வளரும். விதைகளிலிருந்தும் போத்துகள் எனப்படும் வெட்டிய தண்டுகளிலிருந்தும் மருதாணியை சாகுபடி செய்யலாம் விதைகள் கடினமான விதையுறையுடன் இருப்பதால் சிலநாட்கள் நீரில் ஊறவைத்த பின்னரே முளைக்க வைக்கவேண்டும்.

மருதாணியைப்போலவே சாயமேற்றப்பயன்படுத்தப்படும் மற்றொரு தாவரம் லிப்ஸ்டிக் மரம் என அழைக்கப்படும் Bixa orellana. அமெரிக்க பழங்குடியினரால் இதன் விதைச்சாற்றிலிருந்து சாயமெடுக்கப்பட்டு உடலில் பலவகையான சித்திரங்களை தீட்டப்பயன்படுகிறது. இச்சாயம் Annatto எனப்படுகின்றது. பிரேசில் பழங்குடியினரும் இதே விதைச்சாற்றை உடலில் வண்ணங்கள் தீட்டிக்கொள்ளப் பயன்படுத்துகிறாரகள்.

கருநீல வண்ணத்துக்காக Genipa Americana என்னும் தாவரத்திலிருந்து சாறு எடுக்கப்பட்டு வட மற்றும் தென் அமெரிக்க பழங்குடியினரால் உபயோகப்படுத்தப்படுகின்றது. தற்போது பரவலாக புழக்கத்திலிருக்கும் வெள்ளை மருதாணி இயற்கையான மருதாணியே அல்ல அது ஒட்டிக்கொள்ளும் பிளாஸ்டிக். அதைப்போலவே நடனமாடுபவர்களும் திரைநடிகர்களும் கைவிரல்களிலும் பாதங்களிலும் பூசிக்கொள்ளும் அல்டா எனப்படும் செம்பஞ்சுக்குழம்பும் மருதாணிஅல்ல முன்பு வெற்றிலைச்சாற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட அல்டா தற்போது அரக்கு மற்றும் செயற்கை வேதிப்பொருட்களை கலந்து தயாரிக்கப்படுகின்றது. இச்சாயம் மருதாணியைப்போல அதிகநாட்கள் நீடிக்காது.

சந்தையில் கிடைக்கும் மருதாணியில் வேறு இலைகளின் பொடிகளும் வேதிப்பொருட்களும் அதிகம் கலப்படம் செய்யப்படுகின்றன. அழகியல் மற்றும் மருததுவக்குணங்கள் நிறைந்திருக்கும் உலர்ந்த மருதாணி இலைகளின் விலை கிலோ 50 ரூபாய்கள். பல விவசாய நிலங்களில் உயிர்வேலியாகவும் தனிப்பயிராகவும் ஊடுபயிராகவும் மருதாணி பயிரிடப்படுகின்றது. பூச்சியோ நோயோ தாக்குவதில்லை என்பதால் எந்த செலவுமின்றி ஒரு ஏக்கரில் ஒரு டன் அளவுக்கு மகசூல் கிடைத்து அழகுசாதனப்பொருட்கள், கேசத்தைலம், இயற்கைச் சாயம் மருந்துப்பொருட்கள் என பலதொழில்களில் மருதாணி மூலப்பொருளாக பயன்படுவதால், 80 ஆயிரம் ரூபாய் வரை லாபமும் கிடைக்கின்றது.

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks