சந்தித்த வேளை

3
920

 

 

 

 

நேரம் இரவு 10.00 மணியை தாண்டிக்கொண்டிருந்தது. யாழ் பேருந்து நிலையம். அங்காங்கே வீதி விளக்குகள் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தன. சாப்பாட்டுக்கடைகள் மாத்திரம் கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. ஒன்றிரண்டு ஆட்டோக்கள் வேறு மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக தயாராக நின்றன.

அதிலும் ஒரு கடையில் ‘ஒலிக்கவிருக்கிறது எஸ்பிபி பாலசுப்ரமணியம் மற்றும் சித்ராவின் குரலில் சிகரம் திரைப்பட பாடல்.. ‘ என்ற வானலை குரலைத் தொடர்ந்து ‘இதோ இதோ என் பல்லவி..’ என்று பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அதில் ஒரு நீல நிறத்திலான ஆட்டோவிற்குள் அதன் சாரதி பாடலில் மெய்மறந்து ஆட்டோ பின் இருக்கையில் கால்மேல் கால் போட்டபடி படுத்திருந்து ரசித்துக் கொண்டிருந்தான்.

மதுமிதா பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்து கைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். ‘தனியா வரலடா அப்பா தான் பஸ் ஏத்திவிட வந்தவர்.. அங்கால கடையில நிக்கிறார்..’ என்றாள் மதுமிதா

‘………’

‘ரெண்டு நாள் ட்ரெயினிங் தானே.. நடிக்காத நீ.. என்னவோ டெய்லி பாத்து பாத்து கொஞ்சுற மாதிரி கதைக்கிற.. நானே கோல் எடுத்தாலும் ஏன் நாயெண்டும் கேக்கிற இல்ல நீ..’ என்றாள் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு

‘………’

‘சரி காணும்.. நீ உலகமகா நடிகன்டா.. நான் வைக்கிறன்.. அப்பா வந்திடுவார்..’ என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

‘பிள்ள கொழும்புக்கே போறியள்..’ என்று ஒரு குரல் கேட்க மதுமிதா பக்கத்தில் திரும்பி பார்த்தாள். அங்கு ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி பயணப்பையுடன் அமர்ந்திருந்து அவளைப் பார்த்து புன்னகைத்தார்.

‘ஓம்.. என்றாள் அவள் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு.

‘பஸ் வர நேரமாகும் போல கிடக்கு என்ன..? பிள்ள நீங்க இஞ்ச எவடமம்மா..’ என்றார் அவர்.

 

 

 

 

 

‘நான் சுண்டுக்குளி.. ஒரு ட்ரெயினிங்க்கு கொழும்புக்கு போறன்.. அப்பாவோட வந்தன்..’ என்று ஒரு பாதுகாப்புக்காக தந்தையோடு வந்ததை மேலதிக தகவலாக சொன்னாள் மதுமிதா.

‘ஓம்.. போனில சொல்லிக்கொண்டு இருந்தியள்;..’ என்று அப்பெண்மணி கூறவும் அவளுக்கு கூச்சமாக இருந்தது. மெல்ல குனிந்து தலைமுடியை காதோரம் ஒதுக்கிவிட்டு சிறுவெட்கத்துடன் ‘ஓ..’ என்றுவிட்டு

‘நீங்க எவடம் அன்ரி..’ என்று பேச்சைத் தொடர்ந்தாள்.

‘நான் பிள்ள.. இஞ்சால மானிப்பாய்.. நாங்கள் பிறந்து வளந்து வாழ்ந்த எல்லாம் அங்க தான்..’ என்றார் ஒரு பெருமிதத்தோடு.

‘ஓ அப்ப.. கொழும்புக்கு எதும் அலுவலா போறிங்களா..? என்றாள் மது.

அவள் அப்படி கேட்டது தான் அந்த பெண்ணின் முகம் வாடி விட்டது. மதுவிற்கு ஒரு மாதிரி சங்டமாக இருந்தது. ஏதோ அவருடைய மனதை கஸ்டப்படுத்தும் கேள்வியை கேட்டு விட்டேனோ என்று அவளுக்கு கவலையாக இருந்தது.

‘பேரப்பிள்ளைய பாக்க போறனம்மா..’ என்றார் கவலை தோய்ந்த குரலில்.

‘அன்ரி கேக்கிறன் எண்டு ஏதும் நினைக்காதீங்க.. ஏதும் பிரச்சினையா? ஏன் முகம் ஒரு மாதிரி சோர்வா இருக்கு..? என்று தயங்கி தயங்கி கேட்டாள் மது.

‘நினைக்க என்னம்மா இருக்கு.. எங்கட குடுப்பினை இவ்வளவு தான்..’ என்று ஒரு பெருமூச்சு விட்டு தொடர்ந்தும் சொல்ல தொடங்கினார்.

 

 

 

 

 

 

‘ஒரு மகன் தானம்மா எனக்கு. இந்த சண்ட நடந்த நேரத்தில் நானும் அவரும் சேந்து மகன வெளிநாட்டுக்கு அனுப்பிட்டம்.. ஒரே ஒரு பிள்ளய பெத்து இவங்களுக்கு சாக குடுக்கிறதே என்டு.. கடைசில என்ர பிள்ளைட ஒரு நல்லது கெட்டதையும் பாக்க குடுத்து வைக்கல.

இப்ப இஞ்ச ஒரு பிரச்சினையும் இல்ல.. ஒருக்கா வந்திட்டு போடா தம்பி.. பாக்க ஆசையா கிடக்கு.. என்டு கேட்டன்.. அவன்.. எனக்கு அங்க வர நேரமில்ல அம்மா எண்டுறான்…

கலியாணமும் முடிச்சிட்டான்.. அவள் மருமகள் பிள்ளயையும் என்ர பேத்தியையும் ஒரு நாளும் கண்ணால காணல அம்மாடி நான்..  ஏதோ போன்ல அனுப்பிறன் என்டு படத்த மட்டும் அனுப்புவான்.. எனக்கு எங்க இந்த போனெல்லாம் பாக்க தெரியாதே.. உவள் பக்கத்துவீட்டு ராசாத்திட பெட்ட தான் போன்ல விளக்கமா படமெல்லாம் எடுத்து காட்டுவாள்.

உந்த மனுசனும் வருத்தத்தில கிடந்து போய்ச்சேந்திட்டு.. உவன் மாசம் மாசம் காசு மட்டும் அனுப்புவான்.. அவன கண்டு கண காலமடி பிள்ள.. முந்தநாள் இஞ்ச வந்திருக்கிறான்.. கொழும்பில தான் மருமகள் பிள்ளட வீடு.. அங்க தான் நிக்கினம் என்டு நேற்று தான் சொன்னவன்.. நாளைக்கு இரவு பிளைட்டாம்..

போக முதல் ஒருக்கா ஓடிபோய் என்ர பேரப்பிள்ளய பாத்திட்டா காணும்.. என்ர ராசாத்திய தூக்கி வளக்க தான் குடுத்து வைக்கல.. நான் சாக முதல் ஒருக்கா அவள கண்குளிர கண்டுடனும்.. அதான் வெளிக்கிட்டன்’ என்று சொல்லி முடித்தார்.

மதுமிதாவின் கண்ணிலிருந்து ஒரு துளி நீர் கன்னத்தில் விழுந்தது. கண்ணீர் துளியின் ஈரத்தில் சுயநினைவிற்க்கு வந்தாள் மது.

 

 

 

 

 

என்ன சொல்ல அவரை சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை மதுவிற்கு. அந்த வயதான தாயின் தவிப்பும் ஏக்கமும் எவ்வளவு வலிமிக்கதாக இருக்கிறது. கொழும்பில போய் இறங்கினதும் அவருடைய மகனைப் பார்த்து பேச வேண்டும் என்ன நடந்தாலும் சரி என்று.. என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு ‘ச்சேக்.. அவன வெளிநாட்டுக்கு அனுப்பாம.. பேசாம ஆமிக்காரனிட்டயே குடுத்திருக்கலாம்.. பரதேசி..’ என்று திட்டினாள்.

‘கவலப்படாதீங்க அன்ரி.. கட்டாயம் உங்கட பேத்திய நீங்க பாப்பீங்க.. உங்கள அவக்கு பிடிக்கும்.. என்றாள் புன்னகையோடு.

‘ஓமம்மா..’ என்று ஒரு ஆறுதலோடு புன்னகைத்தார். மனதில் உள்ள பாரத்தை வெளியே கொண்டிவிட்ட நிம்மதி அந்த பெண்ணுக்கு.

திடீரென அங்கு  சிறிய சலசலப்பு. ‘வீட்ட போக வேண்டியது தான்.. பஸ் பழுதாம்.. இண்டைக்கு பஸ் கொழும்புக்கு ஓடாதாம்.. விசரனுகள்..’ என்று ஒருவர் கத்திக்கொண்டு நின்றார்.

பஸ் வரவில்லை என்ற விடயம் காதில் விழுந்தது தான் தாமதம் மதுவிதாவின் கண்கள் அந்த வயதான பெண்மணியை தான் தேடியது. அவர் அப்படியே உடைந்து போய் உட்கார்ந்து விட்டார். அவரை பார்க்க பாவமாக இருந்தது அவளுக்கு.

‘மதும்மா.. பஸ் இல்லையாமட.. என்ன செய்வம் நாளைக்கு உனக்கு ரெயினிங் இருக்கல்லோ.. ‘ என்ற தந்தையிடம்

‘அது பரவால்லப்பா..’ என்றாள் குரல்கம்மி போய்.

மகளின் முகம் வாடியிருந்ததை கண்டுவிட்டு அப்போது தான் நினைவு வந்தவராய் ‘பொறு வாறன்..’ என்று சொல்லி கைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி யாருடனோ பேசினார். பேசிவிட்டு வந்து

‘அம்மாடி.. உவன் கனேசன்ட தம்பியர் குடும்பம் போன கிழம கனடால இருந்து வந்தவையள் தானே.. நாளைக்கு பிளைட்டாம். வான்ல வெளிக்கிடினம் இப்ப.. நான் இதால வரச்சொன்னன் நீ அவையளோட வெளிக்கிடு.. என்றார்.

மதுவின் தந்தை அவளிடம் சொல்லி விளங்கப்படுத்திக் கொண்டிருக்கையிலேயே அவர் குறிப்பிட்ட வாகனம் அங்கு வந்து  நின்றது. மதுவின் தந்தை அவளை அதில் ஏறும்படி சொல்லவும்

‘அண்ணா இன்னொராளும் வரலாமா? இடமிருக்கா.. ப்ளீஸ்.. என்று அந்த வேன் சாரதியிடம் கேட்டாள்.

 

 

 

 

 

‘இல்ல தங்கச்சி .. ஏற்கனவே சீட் இல்ல ஒராள் என்டா வரலாம்..’ என்றார் வேன் சாரதி.

அவள் உடனேயே யோசிக்காமல் அவளோடு பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம் சென்று ‘அன்ரி பேக் எங்க.. எடுங்க.. கொழும்புக்கு வேன் ஒன்டு போகுது.. அதில வெளிக்கிடுங்க..’ என்று சொல்லிக்கொண்டே அவருடைய பயணப்பையை எடுத்துக்கொண்டு அவர் கையை பிடித்து கூட்டிகொண்டு வந்தாள்.

தந்தையிடம் விடயத்தை சொல்லி அவருக்கு புரிய வைத்துவிட்டு அந்த பெண்ணிடம் அவரது தொலைபேசி இலக்கத்தையும் அவர் அங்கு போனதும் தெரிவிக்க வேண்டியவரின் தொலைபேசி இலக்கத்தையும் வாங்கி கொண்டு அவரை வாகனத்தில் ஏற்றி அனுப்பினாள் மது. வேன் வெளிக்கிடவும் அந்த பெண் மதுமிதாவின் கையை பற்றி கண்ணீருடன் ‘நானும் ஒரு பொம்பிள பிள்ளய பெத்திருக்கலாம்..’ என்றார். வேன் மெல்ல ஊர்ந்து யாழ் பேருந்து நிலையத்திற்குள் இருந்து வெளியேறியது.

மனம் ஏனோ நிம்மதியாக இல்லை அவளுக்கு. ‘அப்பா வெளிக்கிடுவமா.. ‘ என்று அவள் கேட்டு முடிக்க காதை பிளக்கும் வண்ணம் ஒரு பெருஞ்சத்தம் கேட்டது. அங்கு நின்ற அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினார்கள். பேருந்து நிலையத்திலிருந்து ஒரு ஐநூறு மீற்றர் தூர தொலைவில் கொஞ்ச நேரத்திற்கு முன் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட வேனும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளாகியிருந்தது.

கொஞ்ச நேரத்தில் அம்பிலன்ஸ் பொலிஸ் பொதுமக்கள் என கூட்டம் கூடியது. அந்த வேனில் போன அனைவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். சாரதி அவ்விடத்திலேயே உயிரிழந்திருந்தார். மதுமிதா ஏற்றி அனுப்பிய அந்த வயதான பெண்மணியை தூக்கி அம்பியுலன்ஸில் ஏற்றினார்கள். அவரது தலையிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. சுயநினைவை இழந்து விட்டிருந்தார். மதுமிதாவும் அம்பியுலன்ஸ் வண்டியின் பின்னாலேயே வைத்திசாலைக்கு புறப்பட்டாள்.

இரவு முழுவதும் வீட்டிற்க்கும் போகாமல் அங்கேயே நின்றாள். அந்த பெண்மணிக்கு தான் மகள் என்று சொல்லி அவர் சம்மந்தப்பட்ட விடயங்களில் கையெழுத்திட்டாள் வைத்தியசாலையில். மதுவின் தந்தைக்கு மகளை பார்க்க பாவமாக இருந்தது. தன் மகளுக்கு இளகிய மனம் அவள் நல்ல குணமுடையவள் என்று எப்போதும் பெருமைப்பட்டுக் கொள்ளும் அவருக்கு இன்று அவளுடைய அந்த குணமே அவள் மனதை காயப்படுத்துகிறது என்று கவலையாக இருந்தது.

விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுவின் தந்தை அவளிடமிருந்து அந்த பெண்மணியின் மகனுடைய தொலைபேசி இலக்கத்தை வாங்கி  தகவல் தெரிவித்தார்.

அடுத்த நாள் விடிந்து விட்டது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த பெண்ணின் மகன் குடும்பத்தாருடன் வந்திருந்தான். வைத்தியசாலைக்கு வெளியில் அவர்கள் வந்த வாகனத்தில் அவன் மனைவியும் குழந்தையும் இருந்தார்கள். அவன் மட்டும் உள்ளே வந்திருந்தான்.

மதுமிதா மெல்ல அந்த பெண்ணின் கன்னத்தை தட்டி எழுப்பி ‘அன்ரி உங்கட மகன் வந்திருக்கிறார்..எழும்புங்கோவன்.. ப்ளீஸ்..’ என்றாள் அழுகையை அடக்கியபடி. அவர் மெல்ல கண்ணை திறந்து பார்த்தார். மகனை தொட்டு தழுவி கண்ணீர் விட்டார். மகனிடம் ஏதோ கேட்க முயற்சித்தார். அவனோ ‘அம்மா.. கஸ்டப்படாதேயுங்கோ.. நீங்க சுகமானதும் கதைப்பம்..’ என்று சமாதானப்படுத்தினான்.

அதை பார்த்துக்கொண்டே நின்ற மது ஏதோ தோன்றியவளாய் திடீரென அங்கிருந்து வெளியே ஓடினாள். வெளியே நின்ற காரின் கதவை தட்டினாள் திறக்கும்படி. உள்ளிருந்த பெண் கார் கதவை திறந்ததும் அவள் மடியில் உட்கார்ந்திருந்த குழந்தையை அவள் கையிலிருந்து பிடுங்கி தூக்கிகொண்டு வைத்தியசாலைக்குள் ஓடினாள். குழந்தையின் தாய் கத்திகூச்சலிட்டாள். மதுவோ எதையும் கண்டுகொள்ளாமல் அவசரசிகிச்சை பிரிவிற்குள் குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடினாள்.

குழந்தையை அந்த வயதான பெண்ணிடம் கொண்டுபோய் ‘அன்ரி உங்கட பேத்தி.. பாருங்கோ..’ என்றாள் மூச்சுவாங்க. கட்டுப்போட்டிருந்த கை துடிக்க கண் இரண்டும் கலங்கி துடிக்க ‘என்ர ராசாத்தி..’ என்று சொல்லி குழந்தையை அணைத்து கொஞ்சினாள் அந்த பெண். குழந்தையின் பிஞ்சுக் கன்னம் கைகள் கால்கள் என எல்லாவற்றையும் ஆசை ஆசையாக தொட்டு கொஞ்சினார். குழந்தையை தொட்டுக்கொஞ்சிக்கொண்டிருந்த கைகள் மெல்ல துவண்டு விழுந்தது. அந்த ஜீவன் கடைசி ஆசையை நிறைவேற்றிக்கொண்டு இவ்வுலகைவிட்டு பிரிந்தது.

மதுமிதாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனம் மலையளவு கனத்தது. கத்தி அழவேண்டும் போல் இருந்தது. ஆத்திரம் தீர யாரையாவது அல்லது எதையாவது அடிக்க வேண்டும் போல் கைகள் நடுங்கின. அந்தபெண்ணை சந்தித்து ஒரு நாள்கூட முழுதாய் முடியவில்லை ஆனாலும் அவரின் பிரிவை தாங்க முடியவில்லை. மனிதனுடைய மனம் ஏன் உணர்வுகளுக்கு இவ்வளவு அடிமையாகி போகிறது என்று வெறுப்பாக இருந்தது அவளுக்கு.

வைத்தியசாலை ஊழியர்கள் வந்து அந்தபெண்மணியின் உடலை தூக்கி ஸ்டெச்சரில் வைத்துக் கொண்டு போனார்கள். மதுமிதா அந்த பெண்ணின் மகனிடம் திரும்பி  ‘சேர் ப்ளீஸ் உங்கட லைப் டைம்ல இனியொரு முறை யாழ்ப்பாணத்துக்கு வந்திடாதீங்க..’ என்று சொல்லி விட்டு திரும்பியவள்  நேற்று இரவு முதல் மனதிற்குள் தேக்கி வைத்த ஆத்திரம் தாங்காமல் மீண்டும் திரும்பி  அவனை பார்த்து ‘நீயெல்லாம் எதுக்கு உயிரோட இருக்கிற..’ என்று சொல்லிவிட்டு ஸ்டெச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு போகும் அந்த சடலத்திற்கு  பின்னால் கண்களில் இருந்து ஓயாமல் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்தபடி ஓடினாள் மதுமிதா.

முற்றும்.

 

 

 

 

 

 

 

4.7 3 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
3 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Gobikrishna D
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superb…

அரிஞ்சயன் அரி
அரிஞ்சயன் அரி
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Super story

Sathyamoorthy Mathusan
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

பாட்டிக்கு பேரப்பிள்ளையை பார்க்க வேண்டுமென்ற ஏக்கத்தையும், மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி வெகுதூரம் தொலைத்து விட்டோமோ என்ற தவிப்பையும் அழகாய் தத்ரூபமாய் காட்டியுள்ளீர்கள்.