சொர்க்க மரம் – Paradise Tree

0
15489

 

 

 

 

தாவரப்பெயர்: சைமரூபா கிளாக்கா (Simarouba Glauca)

குடும்பம்: சைமரூபேசியே

மனிதர்களினால் ஏற்படுகிற சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட வேண்டும் என்பதுதான் சமீப வருடங்களாக உலகளாவிய பேச்சாக இருக்கிறது . மனிதனுடைய ஆதிக்கத்தின் காரணமாக உயிரின பன்மயம் சிதைக்கப்பட்டுவிட்டது. அதன் பலனைத்தான் (Global warming) ‘’உலக வெப்பமயமாதல்’’ என்ற பெயரில் உலகம் அனுபவிக்க ஆரம்பித்துள்ளது. இதிலிருந்து உலகைக்காக்க வேண்டுமானால், ஏற்கெனவே இருக்கும் உயிரின பன்மயத்தை காப்பாற்றுவதோடு புதிதாகவும் உருவாக்கவேண்டும்.

பூமி வெப்பமடைவதை பெருமளவில் குறைத்து சுற்றுச்சூழலைக்காக்கும் சொர்க்க மரம்  என்றழைக்கப்படும்  சைமரூபா தற்போது  தாவரவியலாளர்கள் , தோட்டக்கலைத்துறையினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியவர்களால் மிகுந்த  ஆராய்ச்சிக்குள்ளாகியுள்ள ஒரு அதிசய மரமாகும்

எண்ணை மரம். கசப்பு மரம் என்றும் அழைக்கப்படும் இம்மரம் வேம்புக்கும் துளசிக்கும் நிகரான  ஒரு மூலிகை என்பதோடு இதன் எல்லாப்பாகங்களுமே மிகுந்த பயனளிக்கும்  மரமாகையால் இது சொர்க்க மரம் என்றே அழைக்கப்பட்டு வருகின்றது.

ஃப்ளோரிடாவை தாயகமாகக்கொண்ட இம்மரம் மத்திய அமெரிக்காவிலிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. 1960 ல்  இந்தியாவில்  உணவு எண்ணெய் பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு  இது அறிமுகப்படுத்தப்பட்டது. பல பயன்கள் கொண்ட இம்மரம் வளம் குறைந்த மண்ணில் கூட நன்கு வளரும். விளைநிலம் மற்றும் தரிசு நிலங்களிலும் வளர்ப்பதற்கு ஏற்றதாகும். கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் 1000 மீட்டரில் வளரக்கூடியது.

 இதன் வளர்ச்சிக்கு தேவையான ஆண்டு சராசரி வெப்பநிலை 17-35 டிகிரி செல்சியஸ் மற்றும் ஆண்டு சராசரி மழையளவு 500-2200 மி.மீ ஆகும். நல்ல வடிகால் உள்ள கார அமிலத்தன்மை 5.5 – 8.0 வரை உள்ள அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியது. ஆயினும் 1.0 மீ ஆழமுள்ள மண்வகை இதன் வளர்ச்சிக்கு சிறந்தது. தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகத்தில் சிமரூபா மரங்கள் பரவலாக உள்ளன. இதற்கு சொர்க்க விருட்சம், லக்ஷ்மிதரு என்கிற பெயர்களும் உள்ளன. 

                குட்டையாக  7-15 மீட்டர் உயரம் வரை வளரும்  பசுமை மாறா ( Ever green )  இம் மரம் மூன்று வருடங்களில் பூத்து காய்க்கும் தன்மை வாயந்ததாகும். மஞ்சள் வண்ண   சிறிய மலர்கள் வருடத்தில் ஒரு முறை, டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் பூக்கும். மாற்றுடுக்காக அமைந்த  நீண்ட  கூட்டுஇலைகள் பளபளப்பான இளம் பச்சை நிறத்திலிருக்கும். 4-6 வருடத்தில் காய்க்கத் தொடங்கி மேலும் 4-5 வருடங்களில் நிலையான காய்ப்புத்தன்மை அடைந்துவிடும்.  முதிர்ந்த கரு ஊதா நிற காய்கள்  மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். (இடத்தின் சூழல் மற்றும் தட்பவெப்ப நிலையினை கொண்டு காய்க்கும் பருவகாலம் மற்றும் வளர்ச்சி காலம் வேறுபடும்) காய்காய்த்து பின் வளர்ச்சியடைந்து பழுப்பதற்கு 1-2 மாதங்கள் ஆகும். காயானது நீள்வட்ட வடிவத்தில், 2-2.5 செ.மீ நீளம் கொண்டு, மெல்லிய  மேல்தோலுடன், சாறு  உள்ள  சதைப்பகுதியுடன் இருக்கும். பூத்தபின் 11-13 வாரங்களுக்கு பிறகு  பழங்கள் அதிக எடையுடன், நன்கு வளர்ந்த உட்கரு மற்றும் கடின நார்போன்ற உள்பகுதியுடன் இருக்கும். முதிர்ந்த பழங்கள் மரத்திலிருந்து தானே விழுந்துவிடும்.  பறவைகள் மற்றும் குரங்குகள் இப்பழத்தினை உண்டு போடும் எச்சங்களின் மூலம் தானாகவே இவ்விதைகள் முளைக்கும். சுமார் 70 வருடங்கள் வரை வாழும் இம்மரம் பொதுவில் பூச்சித்தாக்குதல்களுக்கும் ஆளாவதுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கக்து.

சைமரூபா மரம் ஒளி அதிகம் தேவைப்படும் வகையாகும். மேலும் இது வறட்சியினையும் தாங்கி வளரும்.

கோசினாய்ட்ஸ் ஐலந்தினான் கிளாக்கோ ரூபினோன் ஹோலோகேந்தோன் கேந்தின் சைமரூபின் மற்றூம் சைம ரூபிடின் ஆகிய முக்கியவேதிப்பொருட்கள் இம்மரத்தின் பாகங்களில் நிறைந்துள்ளன. கோசினாய்ஸ்  புற்று நோய்க்திராக செயல்படுகின்றது

. சைமரூபா மரத்தின்  விதைகள்,விதை ஓடுகள்,பழங்கள், இலைகள், மட்கிய இலைக்குப்பைகள்,உடைந்த கிளைகள், மரப்பட்டை, தண்டு,வேர் என அனைத்து பாகங்களும் உணவு, எரிபொருள், உரங்கள், மருந்துகள் என பலவற்றை அளிக்கின்றது. தரிசு நிலங்களை  வளப்படுத்தவும், செழித்து வளரும் வேர்த்தொகுப்பு  மண்ணரிப்பைத்தடுக்கவும், மண்வாழ்  நுண்ணுயிரிகளை அதிகரிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் இந்த மரம்  உதவுகின்றது   இம்மரங்கள் அதிக அளவில் கரியமில வாயுவை  (Carbon di oxide )உறிஞ்சிக்கொண்டு  பிராணவாயுவை  (Oxygen ) அதிகம் அளிப்பதால்  பூமியின் மேற்பரப்பு  வெப்பமாவது தடுக்கப்பட்டு  உலக வெப்பமயமாதலை  பெருமளவில் இது குறைக்கின்றது. சொர்க்க மரத்தில் செய்யபடும் மரச்சாமான்களை  பூச்சிகள் மற்றும் கரையான்கள் அரிப்பதில்லை எனவெ நாற்காலிகள் கட்டில்கள் , பொம்மைகள் மற்றும்  மரக்கூழிலிருந்து காகிதங்கள் செய்யவும் இம்மரமே பெரிதும் விரும்பபடுகின்றது.

                இதன் விதைகளில் 50-65 சதவிகிதம் உண்ணக்கூடிய எண்ணெய் இருப்பதனால்  சூரிய காந்தி எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய்க்கு நிகரான சமையல் எண்ணெய் இதிலிருந்து கிடைக்கின்றது. 1950ம் வருடம் முதல் மத்திய அமெரிக்க நாடுகளில் இந்த எண்ணெய் உணவு பயன்பாட்டிற்காக மன்டியா வெஜிடல் “நைவ்” (Manteea Vegetal ‘Nieve’) என்ற பெயரில் தயாரிக்கப்படுகின்றது.. வளர்ந்த மரங்கள் இருக்கும் ஒரு ஹெக்டேரிலிருந்து வருடத்திற்கு 1000-2000 கிலோ வரை சமையல் எண்ணெய் கிடைக்கின்றது.

 தொழிற்சாலைகளில், தரமான சோப்புகள், உணவுப் பொருள்கள்,(Lubricants) சாயம், மெழுகூட்டு, மருந்துப்பொருட்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் இவ்வெண்ணெய் உபயோகப்படுத்தப்படுகின்றது. எண்ணெய் தயாரிப்பில் கிடைக்கும் புண்ணாக்கில் அதிக சதவிகிதம் புரதச்சத்து ,  நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் ஆகியவை இருப்பதால் அவற்றில் உள்ள நச்சுப்பொருட்கள் நீக்கப்பட்டு கால்நடை தீவனமாகவும் இயற்கை உரமாகவும் உபயோகப்படுத்தப்படுகின்றது.

காய்களின் உள்பகுதி அட்டை தயாரிப்பில் பயன்படுகின்றது. பழத்தின் 60 சதவிகிதம் பழக்கூழ் என்பதால் அதனில் 11 சதவிகிதம் சர்க்கரைச் சத்து உள்ளதாலும் பழச்சாறு தயாரிப்பு மற்றும் நொதித்தல் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. இதன் இலைக்குப்பை மண் புழுக்களுக்கு சிறந்த உணவு என்பதால் நல்ல உரமாக பயன்படுகின்றது. இலை மற்றும் மரப்பட்டைகளில் உள்ள ‘குவர்சின்’ என்ற வேதிப்பொருள் அமீபியாசிஸ் மற்றும்  வயிற்றுப்போக்கு போன்றவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

 காட்டாமணக்கு செடிகளில் இருந்து கிடைக்கும் 40 சதவீத எண்ணெய்யிலிருந்து உயிரி எரிபொருள் கிடைக்கிறது ஆனால் சொர்க்க மரத்தின் விதைகளில் ஏறக்குறைய 70 சதவீதம் எண்ணெய் இருப்பதால் உயிரி எரிபொருள் தயாரிப்பில் இம்மரம் பெரும் பங்கு வகிக்கின்றது. பெட்ரோல் எரிபொருள் வளம் குறைந்து வரும் நிலையில், உயிரி எரிபொருள் வளத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் இம்மரம் உண்மையிலேயெ சொர்க்கமரம் (Paradise tree) என்றழைக்கப்படுவது மிகையாகாது.

 சைமரூபா குணப்படுத்தும் நோய்கள்: புற்று நோய், அழற்சி, வைரஸ் தொற்று, சிக்குன் குனியா, சளி,,காய்ச்சல், மலேரியா, மஞ்சள் காமாலை, ரத்தக்கட்டிகள், ரத்த சோகை, முடக்கு வாதம்,மற்றும் கர்ப்பப்பை தொடர்பான நோய்கள்

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments