சுமக்க முடியாத சிலுவைகள்

0
536

 

 

 

 

 

ஒரு மிகப்பெரும் சிலுவையில்
என்னை நீ அறைந்து விடுகிறாய்
என் பாதங்களை பற்றுவதால்
மன்னிப்பினை பரிசளிக்கத் தகுதிபெற்றவன் நான்
என்கிறாய்
வாக்குறுதிகளை மறுத்தல் அத்தனை எளிதல்ல

ஒவ்வொரு முறையும் ஒரு வாக்குறுதி புறக்கணிக்கப்படும்போது
என் முதுகில் புதிய சிலுவைகள் ஏற்றப்படுகின்றன
அறையப்பட்ட ஆணிகள் பிடுங்கப்பட்டு மீளவும்
ஆழமாய் அறையப்படுகின்றன
நான் பயந்திருக்கும் வேளையில்
யாரோ என் காதுக்கு அருகில்
‘ஹோ’ வென கூச்சலிடுவதைப் போலிருக்கின்றது
ஆழமாய் கண்ணயரும் போது
முகம் முழுக்க ஜலத்தை கொட்டி விடுவதாகி விடுகின்றது

வாக்குறுதிகளை புறக்கணித்தல் என்பது
வெறுமனே தட்டிக்கழித்தல் மட்டுமேயல்ல
வாக்குறுதிகளை நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு
நான் இப்படித்தான் என்ற நடத்தையே
புறக்கணிப்பின் முதல் பதிலாக அமைந்து விடுகிறது

முயற்சிக்கிறேன் என்ற
எப்போதோ பரிமாறப்பட்ட வாக்குறுதிகளில்
நம்பிக்கையின் ஸ்தலங்களை விஸ்தரித்துக் கொண்டவர்களுக்கு
வாக்குறுதிகளே ஆதாரமாக இருக்கின்றது

ஒரு கத்தியைப்பற்றி இதயத்தில் ஆழமாக கீறுவதற்கு முன்னரோ
இருட்டறையில் தள்ளி விளக்குகளை அணைத்துக் கொள்வதற்கு முன்ரோ
இதழ்களைப்பற்றி அன்பின் தீவிரத்தை உணர்த்துவதற்கு முன்னரோ
கைளுக்குள் முகம் புதைத்து கண்ணீரை வெளிப்படுத்துவதற்கு முன்னரோ
குறைந்தபட்சம் தோள்களைத்தொட்டு அணைத்துக்கொள்வதற்கு முன்னரோ
வாக்குறுதிகளை நினைத்துக்கொள்வோம்
வளைந்துவிட்ட தோள்களல் இனியும் எத்தனை சிலுவைகளைத்தான் தாங்க முடியும்?

 

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments