ஆழிமேல் கடலலைகள் அழகாக ஆடும்
ஆதவனின் கதிராடி அழகங்கே சூடும்
தூளியாடும் தொட்டிலெனத் தோணிகள் ஆடும்
துணைகாண மனையாள் துயரங்கு ஒடும்
கருஞ்சேவல் கூவக் காகங்கள் கரையும்
கடலோடும் படகுகள் கரைதேடி விரையும்
அரும்புகள் அழகிதழ்கள் அழகாக விரியும்
ஆதவன் கதிரழகுச் சுடரெங்கும் எறியும்
பணிநாடிப் பாதைவழிப் பலரெங்கும் செல்வார்
பனியோடு போராடிப் பகலவனும் வெல்வார்
குனிந்தபடி குமரங்கே குடமெடுத்துப் போவார்
குதித்தோடும் வாய்க்காலில் குளிரங்கே தாவும்
மேழியோடு மண்ணுழவர் மேட்டினிலே நடப்பார்
மேற்கு வரைதாண்டி மென்மேகம் கடக்கும்
ஊழியத்தைச் செய்வதிலே உலகமது இயங்கும்
ஊரிருக்கும் ஆலயத்தில் ஓதுமறை முழங்கும்
கிளைதாவி மந்தியினம் கனிதேடி உண்ணும்
கிளையிருந்து குயிலினம் கீதங்கள் பண்ணும்
மலையருவி தானோடி மகிழ்ச்சிகள் பொங்கும்
மனதினிலே மலையான கவலைகள் நீங்கும்
தனதான கடமையிலே தரணியது விளங்கும்
தனம்தேடி திசையாவும் தன்தொழில் துலங்கும்
இனிதான காலையிது இல்லமதில் வசந்தம்
இதயத்தின் இருளெல்லாம் இன்காலை மாற்றும்