காணும் திசையெல்லாம்
கதிரவனின் கரங்கள்
மாதுவின் வழியெல்லாம்
ஆடவனின் துணைகள்
ஆயினுமாயிரம் அச்சங்கள்
அவளை பார்ப்போரின்
பார்வையில் கலந்திடும்
பழிசொற்கள் …
உறவாயுமல்ல உதிர
பிணைப்பாயுமல்ல-நீ
உருவான காலத்தில்-தன்னை
உருவகித்த ஜீவன்…என்றால்
உனை கருவில் இணைத்த
சகோதர உறவுமில்லை ….
சாலையோரம் தனியாக
கண்பிதுங்க நீ சென்றால்
கல்லூரி கதைபேசி
தோளோடு தோளாக-உன்
மூச்சின் வலுவாக
உறுதுணையாய் வரும்
ஒரு ஜீவன்….ஆனால்
காதலனுமல்ல
தோல்வியில் துவண்டு
தொங்கிய முகத்திற்கும்
பரீட்சைப்புள்ளியால்
படபடத்த நெஞ்சுக்கும்
தைரியமாய் நாலுசொல்
திட்டிச்சொன்னாலும்
நம்பிக்கை கொடுக்கும் அவன்
சத்தியமாய் அப்பா இல்லை…..
இன்பத்திலும் துன்பத்திலும்
இன் இசை கேட்டு
இசைந்தாடும் பொழுதினிலும்
என்பக்க சார்பாய்
என் மச்சி என்று
என் நிழலில் கலந்து
நடை போடும் உறவு-அவன்
மச்சினனும் அல்ல
பாலாக பேசி வரும்
காதல் பாழான போது
தன் கண்ணிலும்
துளிநீர் சிந்தி – என்
ஏறுபடி கற்களுக்கும்
ஏணிப்படியாய் அவன்
நிற்பான் – ஆனால்
அண்ணனுமல்ல …
தவறு செய்த நொடி
நான் தடி கொண்டு
தண்டித்தால் – என்
கைகளால் நழுவி
ஓடிடும் குறும்பன் – அவன்
தம்பியும் அல்ல …
சோறுண்ணும் போது – ஒரு
பிடி கவளத்திற்காய்
விழிமூடா தவமிருக்கும்
பாசக்காரன்….என்
பையனுமல்ல…
என் விழிவளி வரும்
துளி துடைத்து – சிறு
உதட்டுப் புன்னகைக்காய்
நகைச்சுவை பல நடித்து
நான் சிரித்திட
ரசிக்கும் ரசிகன் – அவன்
கணவனும் அல்ல …
உறவென்று சொல்லி அவன்
அன்பின் பந்தத்தை
உதிரத்தோடு உரமாக்க
அகராதி தேடிநின்றேன்
அவனை நட்பு எனும்
அன்புக்கரங்களால் அள்ளி அணைத்து
” நண்பன் ” என
செப்பி நின்றேன்.