உலா

0
1708
மேற்கத்தியம் முழுவதுமாய் 
உலவும் சாலைகளில்தான் இப்போதெல்லாம் 
அடிக்கடி 
நம் சந்திப்புகள் நிகழ்கின்றன 

மஞ்சள் படர்ந்த 
இலையுதிர் காலப் 
பொழுதுகளில் 
குளிர் கொஞ்சம் 
மறைந்திருந்தாலும் 
கைகள் பிரித்து 
நடக்கும் எண்ணம் 
நமக்குத் தோன்றுவதாயில்லை 

பேசித் தீர்க்க 
நிறையவே இருந்தாலும் 
சுயநலத்தை விடவும் 
சிறந்த ஒன்றைப் பற்றி 
விவாதிக்க 
எனக்குத் தெரியவில்லை 

ஒரு முத்தத்தோடே 
முடிந்து விடக் கூடியதுதான் 
காதல் என்கையில் 
கோர்த்திருக்கும் விரல்களை 
உருவிக் கொள்ளவும் 
சில நேரம் இன்னும் 
இறுக்கிக் கொள்ளவுமே 
மனம் சொல்கிறது 
 
நேசக்காரா,
ஹிப்பிகளின் நிம்மதியை 
எஜமானனின் 
சுதந்திரத்தோடு சேர்ப்பது
வானத்துக்கும் 
வெற்றுக் கால்களுக்கும்
முடிச்சுப் போடுவதாய் 
இருக்கிறது

காதலை விடவும் 
காலைச் சுற்றும் 
நாய்க் குட்டியின் சிநேகம் 
உனக்கும் எனக்கும் பெரிதாகிவிட்டது

பீதோவனிற்கும் 
தாலாட்டிற்குமான
வித்தியாசத்தை
எல்லோராலும்
உணரவும் முடியாது

இந்த இலையுதிர்ந்த 
சாலைகள்
சீக்கிரத்தில் முடிந்து விடும் 
குறைந்த பட்சம் 
வளைவுகளிலேனும்..

ஆதலால் 
மறுமுறை காணும் வசந்தத்தில் தள்ளியிருந்தபடியே 
தண்டவாளத்தில் சந்திப்போம்
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments