காதலே நிம்மதி

2
989
91ad1866345191d74077504c52773749-4792e833

 

 

 

 

 

அன்று விடுமுறை நாள். ரேணுகா நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். கைபேசி சிணுங்கியது போர்வையை விலக்கி எடுத்துப் பார்த்தாள். அவளுடைய தோழி ரெபேக்கா அழைப்பில் இருந்தாள். அழைப்பை எடுத்து காதில் வைத்து  

ஹலோ ஹப்பி ஈஸ்டர்டி..‘ என்றாள் ரேணு. 

தாங்ஸ்டி.. நீ எங்க நிக்க..?’ என்றாள் ரெபேக்கா 

வீட்டதான்.. இன்னும் எழும்பலடி.. ஆமா நீ சேர்ச்க்கு போகலயா..?’ என ரேணு கேட்க,  

வெளிக்கிட்டன்டி.. அம்மா ஆக்கள் போய்ட்டாங்க.. நேத்து தைக்க குடுத்த சாறிபிளவுஸ் சரியில்லடி.. அந்த லூசு மனிசி ஒழுங்கா தைக்கல.. அத அஜஸ்ட் பண்ணி வெளிக்கிட நேரம்போய்ட்டு.. இப்ப பைக் ஸ்டார்ட் வருதில்ல..‘ என்றாள் ரெபேக்கா. 

நேரம் என்னடி.. எட்டு மணி ஆகுதேடி.. ம்ம்ம.. பொறு முகத்த கழுவி உடுப்பு மாத்திட்டு வாறன்..என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டு வேகமாக எழும்பி தயாராகி நண்பியை சேர்ச்சுக்கு கொண்டு போய் இறக்கி விட்டு வருவதாக தாயிடம் சொல்லிவிட்டு தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டு கிளம்பினாள் ரேணுகா. 

ரேணுகாவின் குடும்பம் ஒரு சாதாரண நடுத்தரவர்க்கம். அம்மா அப்பா அண்ணா அவள் என்று சிறிய குடும்பம். அப்பா கூலித் தொழிலாளி. தாங்கள் படிக்காவிட்டாலும் ஏதோ தங்களால் இயன்றதை செய்து பிள்ளைகள் இருவரையும் படிக்க வைத்துவிட்ட திருப்தி ரேணுகாவின் தகப்பனுக்கு இருந்தது. ரேணுகாவின் தமையன் பிரதேச செயலகத்தில் வேலை செய்கிறான். ரேணுகா ஒரு தனியார் வங்கியில் வேலை செய்கிறாள். ஆடம்பரம் இல்லாவிடினும் அளவான நிம்மதியான வாழ்க்கை. வீட்டு ஆட்களை தவிர்த்து ரேணுகாவின் இன்பம் துன்பம் என்று எல்லாவற்றிலும் கூடவே இருக்கும் ஒரு உறவு என்றால் அது தோழி ரெபேக்கா தான்.  

ரெபேக்காவின் வீட்டை அடைந்தவள் அவளை ஏற்றிக்கொண்டு பைக்கை முறுக்கினாள்.  

ஏய் பிளவுஸ் கொஞ்சம் நல்லா இல்ல தான்.. ஆனா சாறி சூப்பரா இருக்குடி.. நீ கொஞ்சம் உடம்பு தானே அதான் நல்லா இருக்கு..என்றாள் ரேணு 

 

 

 

 

 

 

நான் குண்டா இருக்கன்ற என்ன.. துரோகி.. நீ மெல்லிசா இருக்கன்டு கதைக்கிறா.. ம்ம்ம்.. சரி..சரி..‘ என்று தோழியை வம்பிழுத்தாள் ரெபேக்கா. 

போடி குண்டம்மா.. நான் என்ன சொல்லுறன்.. நீ என்ன சொல்லுற..என்றாள் ரேணு 

அது சரி.. நேத்து பிரதீபன் வீட்ட வந்தவன்டி.. அண்ணாட்ட ஏதோ கதைக்க வந்தான் போல..‘ என்று ரெபேக்கா கூறவும் ரேணுவின் கைகள் தானாகவே ஸ்கூட்டியின் வேகத்தை குறைத்தது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு,  

அதுக்கு நான் என்ன செய்ய..?’என்றாள் ரேணு 

ஓஹோ.. நீ வேணுமெண்டா பாரன் ஒரு நாளைக்கு உங்கட வீட்ட வந்து நிப்பான்.. நான் ரேணுவ விரும்புறன்.. அவள எனக்கு கலியாணம் முடிச்சு தாங்க.. என்டு கேப்பான் பாரு..என்று சொல்லி சிரித்து விட்டு, ரேணுவை பதில் பேச விடாமல் தானே பேசினாள் ரெபேக்கா. 

ஆனா அவன் நல்ல பொடியன்டி.. நம்மட பொடியள பாரு அரசாங்க வேல வேணும் எண்டு ரோட்டுல நிண்டு கத்திட்டு கிடக்கானுவள்.. ஆனா அவன பாரு அவனும் யூனிவர்சிட்டி முடிச்சிட்டு தானே வந்தவன்.. படிச்சத வைச்சு சொப்ட்வெயார் டெவலப்பிங் கம்பனி எண்டு ஸ்டார்ட் பண்ணினான். நம்மட பட்ச்ல மற்ற பொடியனுவள் கூட மட்டக்களப்புல இந்த பிஸ்னஸ் சரிவரா மச்சான் என்டானுவள்… இப்ப அவன்ட ஒப்பிஸ பாத்தியா.. அந்த பில்டிங்ல பாதி அவன்ட ஒப்பிஸ் தான்.. ஆறு பேர் வேல செய்றாங்க அவன்ட்ட.. அண்டு போனனே நான்…என்று அவள் சொல் முடிப்பதற்குள் அவளை இடைமறித்து,  

நீ எதுங்கு அங்க போன..‘ என்றாள் ரேனுகா.  

ஆஆஆ.. அவன மாப்பிள பாக்க.. லூசு.. எங்கட ஒப்பிஸ்ல சிஸ்டம் ப்ராப்ளம்.. அதான் அத பத்தி கதைக்க போனன்.. ஆனா உண்மையாடி இவ்வளவு காலத்தில நான் அவனிட்ட கண்டது ஒன்டுதான்.. நான் ஜீஸஸ் மேல சத்தியமா சொல்லுறன்.. பிரதீபன் உன்ன லவ் பண்ணுறான்.. அத  நான் நிறைய தடவ அவன்ட அக்டிவிட்டீஸ்ல கண்டிருக்கன்..‘ என்று ரெபேக்கா சொல்லவும் சரேலென பிரேக் போட்டு பைக்கை நிப்பாட்டினாள் ரேணுகா. 

ஏய் என்னடி..‘ என்று ரெபேக்கா புரியாமல் கேட்கவும்,  

ஆ…ஆஆ.. பைக்ல பெட்ரோல் இல்ல.. கத மூட்ட.. சேர்ச் வந்திட்டு லூசு.. இறங்கு..‘ என்றாள் ரேணுகா. 

ஆமா என்ன.. தாங்ஸ்டி.. ப்ரேயர் முடிய வீட்ட போய் கேக் எடுத்திட்டு வாறன்.. ‘ என்று சொல்லி ரெபேக்கா புன்னகைக்கவும் 

ஆமா இப்ப தான் ஆறு மணிடி.. இனி தான் உனக்கு ப்ரேயர் தொடங்க போகுது.. போய்ச்சேரு அங்க எல்லாம் இன்னேரம் முடிஞ்சிருக்கும்.. என்று சொல்லி சிரித்தாள் ரேணுகா. 

 

 

 

 

 

 

மட்டக்களப்பு நகர் பகுதிக்குள் அமைந்திருந்தது அந்த தேவாலயம். தேவாயல வளாகத்தை சுற்றியும் வீதியின் இருமருங்கிலும் மோட்டார் பைக்குகளும் கார்களும் நிறுத்தப்பட்டிருந்தன. உயிர்த்த ஞாயிறுதின ஆராதனைக்கு வந்திருந்த மக்களால் தேவாலயம் வண்ணமயமாக நிரம்பி வழிந்தது. சிறுவர்கள் பல வண்ண பட்டாம் பூச்சிகள் போல தேவாலய வளாகத்தினுள் ஓடி திரிந்தனர்.  

அதையெல்லாம் பார்த்து ரசித்தபடி தோழியை தேவாலய வாசலில் இறக்கிவிட்டு பைக்கை திருப்பிக்கொண்டு விரைந்தாள் ரேணுகா. கொஞ்சதூரம் வந்திருப்பாள் திடீரென ஒரு பெருஞ்சத்தம் கேட்டது. சட்டென பைக்கை பிரேக் போட்டு நிறுத்தினாள். அவள் மட்டுமல்ல அந்த வீதியில் நின்ற அனைவருமே சத்தம் வந்த இடத்திற்கு ஓடினார்கள்.  

அங்கு கண்ட காட்சி அனைவரின் ரத்தத்தையும் உறையச்செய்தது. அவ்விடத்தில் ஒரே மரண ஓலமாக இருந்தது. தேவாலயத்தின் சுவர்கள் நொறுங்கி விழுந்திருந்தன. மனித உடல்கள் சிதறிப்போய் கிடந்தன. சிலர் குற்றுயிராய் துடித்துக்கொண்டு கிடந்தார்கள். பூவும் பிஞ்சும் என பராபட்சம் எதுவும் இல்லாமல் பல உயிர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தன. காயங்களோடு உயிர்பிழைத்தவர்கள் தட்டுத்தடுமாறி தம் உறவுகளை தேடிக்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் சிதறிக்கிடந்த உடல்களை வாரி எடுத்து தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு கதறினார்கள்.  

சற்று நேரத்தில் அம்பியூலன்ஸ் வண்டிகளும் போலிஸ் வண்டிகளும் அவ்விடத்தில் வந்தடைந்தன. வேகமாக செயற்பட்டு காயமடைந்தவர்களை அம்பியூலன்ஸ் வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். போலிஸார் அங்கிருந்த சிலரிடம் விசாரரித்துக் கொண்டிருந்தார்கள். சேர்.. நான் ஹயர் கொண்டு வந்தன் சேர்.. அவடத்தில ஆட்டோவ விட்டுத்து நிக்கன் திடீரென்டு குண்டு வெடிச்சபோல சத்தம் சேர்.. ஓடி வந்து பாத்தா.. இப்பி… இப்பிடி சிதறிக்கிடக்கு…‘ என்று ஒருவர் போலிஸ் அதிகாரியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.  

நாங்கள் இப்போது மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.. இன்றைய தினம் உயிர்த்தஞாயிறு விசேட திருப்பலி இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை இவ்விடத்தில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது…‘ என கையில் மைக்கை பிடித்தபடி கமராவுக்கு முன் நின்று சிலர் ஊடகங்கள் வழியாக செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். 

 

 

 

 

 

அவ்விடத்துக்கு வந்த ரேணுகாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சிதறிக்கிடந்த மனித உடல்களையும் சுவர்களிலும் தளபாடங்களிலும் தெறித்துகிடந்த இரத்தத்தையும் பார்க்கையில் தலைசுற்றியது அவளுக்கு அடிவயிற்றிலிருந்து குமட்டிக்கொண்டு வந்தது. ஐயோ.. ரெபேக்கா..‘ என்று மனம் கதறியது. தோழியை தேடி ஆட்களை விலக்கிக்கொண்டு ஓடினாள். ரெபேக்காவை கண்டுபிடிக்க முடியவில்லை அவளால். அழுதுகொண்டு மீண்டும் வெளியில் வர அவள் காலை யாரோ பற்றிப்பிடித்தார்கள். திடுக்கிட்டு பயந்தவள் திரும்பிப்பார்த்தாள் சரிந்துவிழுந்து கிடந்த மேஜைக்கு கீழ் ஒரு ஆண் குப்புற விழுந்து கிடந்தான். அவன் முதுகில் முழுவதும் இரத்தம் பேச முடியாமல் கையால் சைகை காட்டி ஏதோ காட்டினான் ரேணுகாவிடம். ரேணுகா அந்த மேஜையை புரட்டி மறுபக்கம் தள்ளி விட்டு, அவனை கையைப் பிடித்து நிமிர்த்தினாள். 

அங்கு அவன் நெஞ்சோடு அணைத்தப்படி  ஒரு குழந்தை அடிபட்டு காயங்களோடு கிடந்தது. அநேகமாக இரண்டு வயது இருக்கும் அந்த குழந்தைக்கு. அந்த ஆண் ரேணுகாவை ஏக்கத்தோடு பார்த்தபடி கிடந்தான். ரேணு அந்தக் குழந்தையை தூக்கிகொண்டு அவனை தட்டி எழுப்பினாள். அவனிடம் ஒரு அசைவும் இல்லை. ரேணு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடி போனாள் எதிரில் வந்தவரிடம் அண்ணா அங்க ஒருத்தர் காயத்தோட இருக்கார்.. ஒருக்கா பாருங்களேன்..‘ என்றுவிட்டு குழந்தையை அம்பியூலன்ஸ் வண்டிக்குள் நின்ற வைத்தியசாலை ஊழியரிடம் கொடுத்தாள். கொஞ்ச நேரத்தில் அந்த இடத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. எல்லாம் ஓய்ந்துவிட்டது.  

ரெபேக்காவின் தகப்பன் ஒரு ஆஸ்த்துமா நோயாளி. அன்று உயிர்த்த ஞாயிறு தின ஆராதனை முடிவதற்கு கொஞ்ச நேரம் இருக்கையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே ரெபேக்காவின் வீட்டு ஆட்கள் தேவாலயத்தில் இருந்து வீட்டிற்கு கிளம்பிவிட்டிருந்தனர். அவள் மட்டும் அன்றைய குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்து விட்டாள். ரேணுவுக்கு அந்த கவலையிலிருந்து வெளிவரவே முடியவில்லை. தானே தன் தோழியை மரணவாயிலில் கொண்டு போய் விட்டுவிட்டதாக தன் மீதே அவளுக்கு வெறுப்பாக இருந்தது.  

அந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. அன்றைய சம்பவம் பற்றிய செய்திகள் மட்டும் வெளியாகியவண்ணம் இருந்தன. ரேணுகாவுக்கு இந்த இரண்டு வாரங்களில் அதிகம் நினைவில் நின்றது அந்த குழந்தைதான். அன்று இரத்த காயங்களோடு அம்பியூலன்ஸ் வண்டியில் அவள் தூக்கி ஏற்றிவிட்ட அந்த குழந்தையை பற்றிய நினைவு அவளை பெரிதும் வாட்டியது. இப்பொழுது அந்த குழந்தை எப்படி இருக்கிறதோ என்று ஒரே யோசனையாக இருந்தது அவளுக்கு.  

 

 

 

 

 

அன்று வேலை முடிந்ததும் நேராக வைத்தியசாலைக்கு போய் அந்த குழந்தை பற்றி விசாரித்தாள். அந்த குழந்தையின் பெற்றோர் அன்றைய குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிழந்துவிட்டதாகவும் குழந்தை இன்னும் குணமாகவில்லை, சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. குழந்தையை பொறுப்பேற்க யாரும் வரவில்லை அதனால் குழந்தை குணமாகியவுடன் வைத்தியசாலை நிர்வாகம் குழந்தைகள் பராமரிக்கும் இல்லத்தில் அக்குழந்தையை ஒப்படைப்பார்கள் என அவளிடம் தெரிவிக்கவும், ரேணுகாவால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு குழந்தையை போய் பார்த்தாள். அந்த பிஞ்சுக்குழந்தை சுயநினைவில்லாமல் கட்டிலில் கிடந்தது. அன்று குழந்தையை தூக்கி வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்கு போன பின் எவ்வளவு நேரம் குளித்தும் கையிலும் உடையிலும் படிந்திருந்த இரத்தக்கறை போகவில்லை அவளுக்கு. அங்கு நிற்க பிடிக்காமல் வேகமாக வெளியேறி ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டாள்.  

அதிலிருந்து குழந்தையை பற்றிய யோசனை பூதகரமாக அவள் மனதை ஆக்கிரமித்தது. எப்படியும் குணமடைந்தவுடன் குழந்தையை இல்லத்திற்கு அனுப்பிவிடுவார்கள் என்பதை நினைக்கையில் மனம் கனத்தது. அன்று அந்த குழந்தையை கையில் தூக்கிய ஸ்பரிசத்தை இன்றும் உணர்ந்தாள். ஒரு வேளை அன்று குழந்தையை தன்னிடம் காட்டிய அந்த ஆண் தான் அதன் தகப்பனாக இருக்குமோ என்று நினைக்கையில் அன்று அவனின் கண்களில் கண்ட ஏக்கமும் இயலாமையும் அவளுக்கு யோசிக்க யோசிக்க பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. என் பிள்ளையை இந்த பெண் காப்பாற்றிவிடுவாள் என்ற நம்பிக்கையில் அந்த உயிர் பிரிந்திருக்குமோ என்று நினைக்கையில் அவளுக்கு அழுகை வந்தது.  

நான்கைந்து நாட்களாக யோசித்து யோசித்து இரவில் சரியான தூக்கம் இல்லை அவளுக்கு. நாட்கள் போக போக குழந்தை குணமடைந்து கொண்டு வந்தது. வைத்தியசாலையில் விசாரித்ததில் முழுமையாக குணமடைந்ததும் அநேகமாக இன்னும் ஒரு வாரத்தில் குழந்தையை பராமரிக்கும் இல்லத்திற்கு அனுப்பி விடுவதாக தெரிவித்தார்கள். ரேணுகாவுக்கு ஏன் நான் அந்த குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள கூடாது என்று தோன்றியது. பின் தீர்க்கமாக முடிவெடுத்தாள் குழந்தையை தத்தெடுத்துக் கொள்வதென்று. தன்னுடைய முடிவை வீட்டில் பெற்றோரிடமும் அண்ணனிடமும் சொல்லவும் மூவரும் ஒரே நேரத்தில் அவளது விருப்பத்தை மறுத்து விட்டார்கள்.  

பைத்தியமா உனக்கு அந்த பிள்ளைய ஹொஸ்பிட்டல் பொறுப்பெடுத்திட்டாங்க.. அவங்க பாப்பாங்க.. உனக்கெதுக்கு தேவையில்லாத வேல..‘ என்று ரேணுவின் தமையன் அவளுக்கு அறிவுரை வழங்கினான். 

 

 

 

 

 

 

என்ன மனே இதெல்லாம்.. நாங்க இருக்க நிலைல ஒரு பிள்ளைய எடுத்து வளர்க்க ஏலுமா.. நாளைக்கு நீ கலியாணம் முடிச்சு போன பிறகு யார் அந்த பிள்ளைய பாப்ப.. அப்பாவும் நானும் எவ்வளோ நாளைக்கி இருப்பம்..‘ என்று ரேணுவின் தாய் கவலைப்பட்டார். 

வீட்டில் எல்லோரும் மறுத்துவிடவே ஒரு வேளை தான் ஆண் பிள்ளையாக பிறந்திருந்தால் சுயமாக யோசித்து தன் ஆசைப்படி அந்த குழந்தையை தானே வளத்திருக்கலாமோ என்று தோன்றியது அவளுக்கு. என்ன பிரயோசனம்நாளைக்கு அந்த பிஞ்சுகுழந்தை தன் பார்வையிலும் இருந்து போய்விடும் என்று தன் இயலாமையை நினைத்து மனதிற்குள் குமுறினாள்.  

அடுத்தநாள் வேலைக்கு போக முதல் குழந்தையை பார்க்கவேண்டும் போல் மனது தவித்தது. நோயாளர்களை பார்வையிடும் நேரத்தில் சென்று பார்த்துவிட வேண்டுமென்று நேரத்திற்கு எழுந்து தயாராகி வைத்தியசாலைக்கு புறப்பட்டாள். வைத்தியசாலைக்குள் சென்று ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு ஏதோ யோசித்தபடியே உள்ளே போனவள் எதிரில் வந்தவருடன் மோதிக் கொண்டாள். மோதிய வேகத்தில் நிமிர்ந்து பார்த்து மன்னிப்பு கேட்க வாயெடுத்தவள் அப்படியே நின்றுவிட்டாள் இமைக்காமல்.  

எதிரில் நெற்றியை தேய்த்துக்கொண்டு சின்ன புன்னகையுடன் நின்றான் பிரதீபன். அவளுக்கு பிரதீபனை பாடசாலை நாட்களில் இருந்தே தெரியும் கூடவே அவனை அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆனாலும் அவனுடைய குடும்பம் மட்டக்களப்பில் கொஞ்சம் பெயர் சொல்லும் வசதியான பிண்ணனியை சேர்ந்தவர்கள் அதனாலேயே அவள் அவனோடு பேசுவதையும் முடிந்தளவு தவிர்த்து வந்தாள். நமக்கு ஏன் தேவையில்லாத ஆசைகள் தேவையில்லாத பிரச்சினைகள் என்று ஒதுங்கிக் கொள்வாள். ரெபேக்கா மட்டுமல்ல வேறு சில நண்பர்களும் பிரதீபன் அவளை காதலிப்பதாக சொன்னாலும் கூட அவனாக தன்னிடம் எதுவும் பேசியதில்லை அதனால் அது தேவையற்ற கதை என்று அதை அவள் கணக்கெடுப்பதில்லை.  

ஆனால் இப்பொழுது நீண்ட நாட்களுக்கு பிறகு மிக அருகில் அவனை கண்டது ஒரு மாதிரியாக இருந்தது அவளுக்கு. அவனோடு என்ன பேசுவதுமுதலில் பேசுவதா வேண்டாமாஎன்று குழப்பமாக இருந்தது ஆனால் குழந்தை பற்றிய கவலை அவள் மனதை அதிகமாக ஆட்கொண்டிருக்க அவனிடம் எதுவும் பேசாமல் விலகி வேகமாக சென்று விட்டாள். உள்ளே சென்று குழந்தையை பார்த்தாள். குழந்தை உறங்கிக்கொண்டிருந்தது. கிட்ட போய் அதன் பிஞ்சுக்கைகளை தொட்டு முத்தமிட்டாள். அவளை மீறி கண்ணீர் கன்னத்தில் விழுந்தது. அந்த கையின் ஸ்பரிசத்தில் அவள் உடல் சிலிர்த்தது. 

நாளைக்கு இங்கயிருந்து போயிடுவியா குட்டி.. அங்க உன்ன நல்லா பாப்பாங்களா..‘ என்று குனிந்து குழந்தையிடம் பேசினாள். குழந்தையோ நன்றாக உறங்கிக்கொண்டிருந்தது. தன் இயலாமையை நினைத்து கனத்த மனதோடு ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு நிமிர்ந்தவள் அந்த குழந்தையை கவனித்துக்கொள்ளும் வைத்தியசாலை ஊழியரிடம்  

நாளைக்கு சில்ரன்ஸ் ஹோமுக்கு அனுப்பிடுவிங்களோ..‘ என்றாள் ரேணு.  

 

 

 

 

 

ஓம்.. தங்கச்சி.. இண்டைக்கு பின்னேரமே வெளிக்கிடுவாங்க.. என்றார் அந்த வைத்தியசாலை ஊழியர்.  

ரேணுகாவுக்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. ரேணுகாவோடு வங்கியில் வேலை பார்க்கும் ஒருவரின் சகோதரன் அங்கு தான் வைத்தியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் நன்கு பரிச்சயமானவர் அவளுக்கு. அவரிடம் தான் ஏற்கனவே குழந்தையை பற்றி பேசியிருந்தாள். இப்பொழுது அவரை தேடி போனாள்.  

சேர்.. ப்ளீஸ்.. இன்னும் ஒரு வன் வீக் டைம் தரஏலாதா..நான் எப்படியாவது அம்மா அப்பாவ சம்மதிக்க வைக்கிறன்.. ப்ளீஸ்.. என்று கெஞ்சினாள். 

ரேணுகா எனக்கு உங்கட மனநிலம விளங்குது.. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இதெல்லாம் அவ்வளவு ஈஸி இல்ல..  

அண்ட்.. இப்பிடி இன்ஸிடன்ஸ்ல யாரும் இல்லாம வாற பிள்ளைகள ஹொஸ்பிட்டல் பொறுப்பெடுத்து இப்பிடி அனுப்புறது தான் நோர்மல் புரொஸிஜர்..  

ஒரு வேள நீங்க மரீட் என்டா பிள்ளைய தத்தெடுக்கிறது ஈஸி.. நீங்க யங் கேர்ள்.. ஒரு நலன்விரும்பியா என்ர அட்வைஸ் ப்ளீஸ் லீவ் இட்.. கொஞ்ச நாளைக்கு கஸ்டமா இருக்கும்.. பிறகு மறந்திடுவீங்க..‘ என்று அவளை சமாதானப்படுத்த முயன்றார் அவர்.  

அவருக்கும் ரேணுகாவை பார்க்க பாவமாக இருந்தது. இந்த மூன்று வாரங்களாக அவள் வைத்தியசாலைக்கு வந்து குழந்தையை பார்ப்பதும் அதன் மேல் அக்கறை அன்பும் காட்டுவதும் அவர் கவனத்தில் வரத்தவறவில்லை. 

ஆனால் அவளுக்கோ குழந்தையை விட மனமில்லை. இயலாமையில் அழுகைவர கண்ணீரோடு ப்ளீஸ்.. டொக்டர்..‘ என்றாள்.  

அந்நேரம் அறைக்கதவை யாரோ தட்டினார்கள். அந்த அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் பிரதீபன். 

ஆஹ்… பிரதீப்.. வாங்க.. அப்பா மோர்னிங் கோல் எடுத்து சொன்னவர்.. நீங்க ஏதோ கதைக்கனும் என்டு.. என்று அந்த வைத்தியர் பிரதீபனை வரவேற்கவும் 

அவனை அங்கு சற்றும் எதிர்பாராத ரேணுகா இனியும் அங்கு நிற்பதில் பிரயோசனமில்லை என்று கண்களை துடைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். வெளியேற கதவைத்திறக்க போனவளின் கையை பற்றி நிறுத்தினான் பிரதீபன். அவள் அதிர்ச்சியோடு அவனைப் பார்க்கையில் மெல்ல அவள் காதருகே  

ரேணு ப்ளீஸ்.. எனக்காக கொஞ்சம் வெயிட் பண்ணு.. டொக்டர்ட கதைச்சிட்டு வாறன்..‘ என்று சொல்லி அவள் கைகளை விடுவித்தான்.  

 

 

 

 

 

ரேணுகா வெளியில் வந்து அங்கு போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்தாள். சற்று நேரத்தில் பிரதீபன் வெளியே வந்தான். வந்து ரேணுகாவுக்கு பக்கத்தில் அமர்ந்து  

ஏன் ரேணு.. உன்ர லைப்ல ஒரு செக்கன் கூட நீ என்ன நினைச்சதில்லயா..என்ன நீ விரும்பினதில்லயா..‘ என்றான் கரகரத்த குரலில். 

அந்த கேள்வியை அவனிடம் இருந்து சற்றும் எதிர்பாராதவள் விடுக்கென நிமிர்ந்து அவனை பார்த்தாள் ஒன்றும் புரியாமல். 

ரேணு.. நம்மட சேர்க்கிள்ள இருக்கிற எல்லாருக்கும் தெரியும்.. பிரதீபன் ரேணுகாவ லவ் பண்ணுறான் என்டு.. ஏன் உனக்கு மட்டும் தெரியல.. தெரியலயா.. இல்ல..?’ என்ற கேள்வியோடு அவள் கண்களை கூர்ந்து பார்த்தான் பிரதீபன். 

அவள் எதுவும் பேசவில்லை. மனதிற்குள் என்ன நினைத்தாளோ கண்களில் இருந்து வழியும் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை அவளுக்கு. பிரதீபன் ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்து உட்கார்ந்தான். 

கொஞ்சம் நகர்ந்து அவளுக்கு நெருக்கமாக அமர்ந்து அவள் கன்னங்களை இரண்டையும் தன் கைகளால் பற்றி கண்ணீரை துடைத்து  

அழாதடி.. லூசு.. உன்ர இந்த லூசுத்தனமான மனசு யாருக்கு வரும்.. சொல்லு.. அது தானே என்ன உனக்கு பின்னாலயே திரிய வைக்கிது..  

நானும் டெய்லி உன்ன பாத்திட்டு தான் இருக்கன்.. அழகா சிரிக்கிற.. நடக்கிற.. கோவப்படுற.. இந்தா.. இப்ப கொஞ்ச காலமா ஒரே முகமெல்லாம் வாடிப்போய் அழுற.. ஆனா என்ன மட்டும் நினைக்கிற இல்லையேடி.. ஆஹ்..?’ என்று கேட்டு புருவங்களை உயர்த்தி அவளை கேள்வியோடு பார்த்தான். 

அவன் பேச பேச அவளுக்கு மேலும் மேலும் அழுகை தான் வந்தது. ப்ளீஸ்.. பிரதீப்..‘ என்று அழுகையோடு அவன் கைகளை விடுவிக்க முயன்றாள்.  

ப்ப்..ப்பாஆ.. இங்க பார் நீ என்ர பேர சொன்னதும் எனக்கு புல்லரிக்குது.. உனக்கு தெரியுமா.. நான் உன்ன எவ்வளவு லவ் பண்ணுறன் என்டு.. இப்ப கொஞ்ச நாளா நீ மட்டும் தான் அந்த பேபிக்காக அழுது கவலப்படுறியா.. நானும் தான் நைட்ல தூக்கம் கூட இல்லாம யோசிச்சு கவலப்பட்டுட்டு இருக்கன்.. உனக்காக..‘ என்றான் அவன் 

அவள் யோசனையோடு அவனை பார்க்கவும் 

ம்ம்..ம்.. விளங்குது.. உனக்கு விளங்கலன்டு..‘ என்று சொல்லி சிரித்துக்கொண்டு 

 

 

 

 

 

 

உனக்கு எது பிடிக்குமோ.. உனக்கு எது சந்தோசமோ.. அதயெல்லாம் செய்ய தானே நான் இருக்கன்.. பிரதீப் இப்பிடி ஒரு பிரச்சினை.. என்டு நீ என்னட்ட தானே சொல்லி இருக்கணும்.. ம்ம்..?’  

சரி விடு.. நான் டொக்டர்ட எல்லாம் கதைச்சிட்டன்.. நீ என்ன செய்யோனுமென்டா.. இந்த மூவிஸ்ல எல்லாம் காட்டுற போல.. நீ… அந்த குட்டி பேபிய மடில வச்சிட்டு.. அழகா வெக்கப்பட்டுட்டு உட்காந்து இரு.. நான் உனக்கு தாலி கட்டுறன்.. சரியா..‘ என்று சொல்லி குனிந்து தலையை சரித்து அவள் முகத்தை ஆராய்ந்தான் பிரதீபன். 

ரேணுகாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அழுவதாஇல்லை அவனை ஆசை தீர கட்டிக்கொள்வதாஇல்லை அவனுக்கு நன்றி சொல்வதாதன் மனம் இந்த நொடி அனுபவிக்கும் நிம்மதியை என்ன செய்து அதை தந்தவனிடம்  வெளிப்படுத்துவது என்று அவளுக்கு தெரியவில்லை.  

ரேணு.. என்னம்மா..?’ என்றான் அவன். 

ம்ம்..ம்.. ஒன்டுமில்லையே..‘ என்றாள் அவள் 

அது சரி.. எதும் இருக்கெண்டு நீ சொன்னா தான் அதிசயம்.. ஈவினிங் உங்கட வீட்ட வந்து உன்ர அப்பாட்ட கதைக்கிறன்.. யோசிக்காத என்ன நம்பு.. நீ விரும்புற மாதிரி எல்லாத்தையும் செய்வன்..‘ 

எனக்கு நேரம் போகுது.. பேபிய அடப் பண்ணுற டொக்கியூமென்ஸ் கொஞ்சம் ரெடி பண்ணனும்.. அதோட ஒப்பிஸ்ல வேலையும் இருக்கு.. இன்டைக்கு உனக்கு வேர்க் தானே.. நீ வெளிக்கிடு..‘ என்று சொல்லி அவள் கண்களை துடைத்து நெற்றியில் விழுந்திருந்த முடியை கோதி சரிசெய்து விட்டான் பிரதீபன்.  

காற்றே வராமல் இருட்டறையில் மூச்சுமுட்ட கிடந்தவளுக்கு அவன் வந்து கதவு ஜன்னல்களை திறந்து சுவாசிக்க வைத்தது போல் இருந்தது ரேணுகாவுக்கு.  

முற்றும்

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shafiya Cader
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Very nice story. சிறப்பாக எழுதியுள்ளீர்கள். நமக்கேயான பேச்சுவழக்கில் கதைகளின் சுவாரஷ்யம் குறையாமல் கொண்டு போவது எனக்குப் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள் சகோதரி

ShamZana
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அந்த சம்பவத்தை நினைக்கும் போது மனதுக்குள் இப்பவும் ஒரு இனம்புரியாத சோகமும் குற்ற உணர்வும். அதிலும் ஒரு அழகான காதல் உணர்வை கொண்டு வந்து அசத்தியுள்ளீர்கள். எல்லாவற்றையும் விட மட்டக்களப்பு தமிழில் இதை படைத்ததையும் பாராட்டுகிறேன்.