கார்காலப்பொழுதுகள்

0
1256

இருளடர்ந்த மழைப் பொழுதொன்றில்
கால்களை பற்றிக் கொள்ளும்
நினைவுகளுக்கு
என்ன சொல்வாய்?
குறைந்தபட்சம்
மெல்ல மெல்லமாய்
உடைந்து போய்க் கொண்டிருக்கும்
புன்னகையிலிருந்து
சிறு துளியையும்
வெறுப்புப் படர்ந்த
வார்த்தைகளையும்
பாரம் நிறைந்த
கண்ணீரையும்
மெது மெதுவாய் கால்களை
பற்றிக் கொள்ளும்
நினைவுகளுக்கு
பரிசளிக்கலாம்…
அப்போது அவை
மென்மையாய் முன்னேறலாம்
உன் கண்களை
தன் வலுவிழந்த
கரங்களால்
மூடிக் கொள்ளலாம்
கன்னம் பற்றலாம்
தலை கோதலாம்
வகிடெடுத்து உச்சி தேடி
ஆழ முத்தமிடலாம்
ஆம்
அப்படியான நினைவுகள்
வரும் பொழுதுகளில்
முகம் திருப்பி விடாதே
மழைப் பொழுதில்
நீ வேண்டும்
உஷ்ணத்தை விட சிறந்தவை
உன் கரம் பற்றும்
இந் நினைவுகள்
அவற்றின்
வேர்க் கால்கள் அறி
இயலுமான வரை
இறுக்கமாய் பற்றிப் பிடி
நான் இப்படித்தான்
இருளடர்ந்த மழைப் பொழுதில்
வந்தமரும் வசந்த நினைவுகளை
விடாமல் பற்றிக் கொள்வேன்
ஒரு நத்தையைப் போல போர்வைக்குள் சுருண்டு கொள்வேன்
மீண்டும் சொல்கிறேன்
மழை இரவுகள்
எப்போதும் எல்லோருக்கும்
வரமாய் அமைந்து விடுவதில்லை….

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments