கிரிம்சன் கூப்பரின் மாயக்கண்ணாடி

0
867
IMG_20200604_160226

கூப்பருக்கு இப்போதெல்லாம் அந்த அறையை விட்டு வெளியேறவே விருப்பம் இல்லை.
அவன் என்னதான் செய்கிறான் என்று அவனது தம்பி ஜிம்சன் கூப்பரை தவிர வேறு யாருக்கும் தெரியாது… இத்தனைக்கும் ஜிம்சன் பதின்மூன்று வயசு பையன் அவ்வளவு தான்.

அவனது பிரத்தியேக ஆய்வுகூடத்துக்கு ஜிம்சனை தவிர வேறு யாரும் நுழைவதும் இல்லை. வேளா வேலைக்கு சாப்பாடு ஸ்நாக்ஸ் என்று அத்தனையும் அவன்தான் எடுத்து செல்வான்.

“இந்த பாத்திரத்தில் இருப்பது தான் நீ சொன்ன திரவமா?”என்று கேட்டுக்கொண்டே அதில் விரலை விட்டு பார்க்க முயற்சித்தான் ஜிம்சன்.

“அடேய்… கொஞ்சம் சும்மா இருயேன். அதுல எல்லாம் கைவைக்க கூடாது .”என்று தடுத்தான் கிரிம்சன்.


“அப்போ இது என்னன்னு சொல்லு.”

“இது தான் நான் தயாரித்த பாதரசம்…கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு வா..வந்து எனக்கு உதவி செய் “என்றான்.

“அப்பாவோட பெக்டரியில் கண்ணாடி செய்றதுக்கு பாவிக்கிறது தானே.. ஆனா அது சில்வர் கலர்ல இருக்குமே! இது தங்கம் போல் ஜொலிக்குது”என்று சந்தேகத்துடன் கேட்டான்.

“அது முகம் பார்க்கும் கண்ணாடி செய்வதற்கு… இது காலத்தை காட்டும் கண்ணாடி செய்வதற்கு.”என்றான் கிரிம்சன்.

“ஓஹ் அப்போ இது வழியா நாம எல்லா காலங்களையும் பார்க்க முடியுமா?”

“முடியும். ஆனா அதுக்கு நீ கொஞ்சம் தொன தொன வென்று பேசாமல் இருந்தால் போதும்.”என்றான்.

வெளியில் ஜிம்சனை அம்மா கூப்பிடுவது கேட்டது.
அவனும் அம்மாவை காத்திருக்க வைக்காமல் ஓடிச்சென்றான்.

தேவையான குறிப்புக்களை எல்லாம் ஒரு பழைய புத்தகத்தில் இருந்து பெற்றுக்கொண்ட கிரிம்சன் கண்ணாடியை உருவாக்குவதில் முழுமூச்சாக செயற்பட்டான்.

எப்படியோ அந்த காலத்தை காட்டும் கண்ணாடியை செய்து முடிக்க சரியாக இரண்டு வாரங்கள் பிடித்து கொண்டன. பச்சை தண்ணி கூட பல்லில் படாமல் சாப்பாடு தண்ணீர் இன்றி சோர்ந்து விழுந்தான் கிரிம்சன்.

இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் கூப்பரின் கண்ணாடி உருவாக்குவதில் ஒரு சின்ன பிழை ஏற்பட்டாலும் மொத்த ஆராய்ச்சியும் வீணாகி விடுவதோடு மட்டுமன்றி காலங்களில் குழப்பம் ஏற்பட்டு பாரிய சிக்கல் ஏற்படும்.
எனவே தான் வழக்கமாக வரும் தம்பியை கூட உள்ளே வரவிடாமல் கதவை தாழிட்டு கொண்டு வேலைகளை பார்த்தான்.

இரண்டு வாரமாக உள்ளே இருந்து கொண்டு தான் உயிருடன் இருப்பதை தெரிவிக்க அடிக்கடி ஜிம்சனை கதவடியே கூப்பிட்டு ஏதாவதொரு புதிரை கேட்பான். ஜிம்சனும் அதி புத்திசாலி. அடுத்த மணி நேரத்தில் எப்படியாவது பதிலை கண்டுபிடித்து இன்னது தான் என்று சொல்லி அண்ணனிடம் பாராட்டை பெற்றுச்செல்வான்.


மயக்கத்தில் இருந்து கொஞ்ச நேரத்தில் தெளிந்து எழுந்தவன் கதவை திறந்து கொண்டு வந்து விழுந்தான்.

எதேச்சையாக அந்த பக்கமாக வந்த கூப்பரின் தாயார் ,”ஐயையோ கிரிம்சன்!!” என்று வந்து அவனை பதற்றத்துடன் ஆராய்ந்தார்.

உடனே கண்ணாடி பேக்டரிக்கு அழைப்பை ஏற்படுத்தி அவன் அப்பாவுக்கு தகவலை சொல்லி அழைத்தாள்.
பாடசாலை விட்டு ஜிம்சன் வீட்டுக்கு வந்த போது அண்ணனை ஹாலில் காற்றோட்டமாக படுக்க வைத்து அவனை சுற்றி அப்பாவும் அம்மாவும் டாக்டர் அங்கிளும் நிற்பதை கண்டு அண்ணனுக்கு ஏதோ ஆயிற்று என்று பயந்து போய் புத்தகப்பையை வீசிவிட்டு அவ்விடத்துக்கு விரைந்தான்.

கூப்பருக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு கொண்டிருந்தது.
சின்ன சின்ன டெஸ்ட்களை எல்லாம் முடித்து விட்டு டாக்டர் பேசினார்.

கிட்டத்தட்ட ரெண்டுவாரமா சாப்பாடு தண்ணி ரெண்டுமே உடம்பில் செல்லல. இத்தனை நாளைக்கு உயிரோட இருந்ததே கடவுள் கருணை.. இனி எல்லாம் சரியாயிடும் நல்லா பார்த்து கொள்ளுங்க.” என்றுவிட்டு கிளம்பினார்.
முகமெல்லாம் உக்கிப்போய் ஒல்லியாக இருந்த அண்ணனின் தோற்றத்தை பார்க்கையில் மிகவும் கவலையாக இருந்தது ஜிம்சனுக்கு.

மீண்டும் ஒருவாரம் கழித்து உடல் நலம் தேறிய பின்னர் மாடிக்கு சென்று தன் ஆய்வு கூடத்துக்குள் நுழைய முயற்சித்த போதுதான் கதவை யாரோ வெளியில் பூட்டி தாழிட்டு இருப்பது தெரிந்தது.


அப்போது அங்கு வந்த ஜிம்சனிடம் ,
“விளையாடலாம் சாவியை கொடு ஜிம்சன்.”என்றான்.

“நான் எடுக்கல..அம்மாதான் நீ மறுபடியும் உள்ளே போய்டுவே என்னு சொல்லி சாவியை ஒளிச்சி வெச்சிருக்காங்க.”என்றான்.

“டேய் உனக்கு சாக்லேட் வாங்கி தரேன் ..அந்த சாவி எங்க இருக்குன்னு சொல்லேன்.”என்றான்.

“சாக்லேட் எல்லாம் வேணாம்.. இந்த வாட்டி நானும் உன்கூட வருவேன்.” என்று சொல்லி டீல் பேசினான்.

“சரி முதலில் போய் எடுத்து வா..”என்று கிரிம்சன் சொல்ல அவனும் அம்மா ஒளித்து வைத்த சாவியை எடுத்து கொண்டு வந்து கொடுத்தான் .

உள்ளே இருவரும் சென்றனர். தங்க நிறத்தில் அந்த கண்ணாடி ஜொலித்தது.

“வாவ்… நீங்க உண்மையிலேயே ஜீனியஸ் அண்ணா!..ஆமா இது எப்படி வேர்க் பண்ணும்?”


“எனக்கு கிடைத்த தகவல்கள் எல்லாத்தையும் வெச்சி இந்த காலக்கண்ணாடியை உருவாக்கி இருக்கேன். ஆனா இது எப்படி வேலை செய்யும் என்னு பாக்க முன்னாடியே மயங்கி விழுந்துட்டேன்.
இதோ இந்த புத்தகத்தை எழுதினவர் செய்த தீவிர ஆராய்ச்சியின் முடிவு என்னன்னா நாம மட்டும் இந்த கண்ணாடியை உருவாக்கிட்டா நம்மலாள காலங்களை கடந்து பயணிக்க முடியும். நம்ம இறந்த காலத்தையும் நம்ம எதிர்காலத்தையும் நம்மலாள பார்க்க முடியும்.
ஆனா அவருக்கு இதை உருவாக்க கூடிய மெடிரியல்ஸ் எதுவும் அப்போ கிடைக்கவே இல்லை. அதனால் தான் அவரால இந்த எக்ஸ்பிரிமெண்டை பண்ண முடியல்ல.”

அப்போது வெளியே அம்மாவின் அழைப்பை கேட்டு இருவரும் ஆடிப்போயினர். சாவியை எடுத்து கொடுத்தமைக்காக ஜிம்சனுக்கும் மறுபடியும் அந்த அறைக்குள் சென்றதற்காக கிரிம்சனுக்கும் கண்டிப்பாக அம்மா ஏதாவது தண்டனை கொடுப்பாள்.

அந்த பயத்தில் இருவரும் அங்கும் இங்கும் ஒளிந்து கொள்ள முயற்சித்தனர். முதலில் கதவை உள்ளே மூடிவிட்டனர். அந்த களேபரத்தில் ஜிம்சன் கண்ணாடியில் கையை வைக்க அது அவனை இழுத்து கொள்வதை கண்டு கிரிம்சன் அவன் கையை பிடித்தான் கடைசியில் இருவரையும் கண்ணாடி உள்வாங்கி கொண்டது .இருவரும் அந்த அறையில் இருந்து காணாமல் போயினர்.

காலம் நேரம் இடம் எதுவும் இல்லாமல் இருவரும் ஒரு சுழலில் மாட்டிக்கொண்டது போல் இருந்தது…
ஆனால் சட்டென்று மீண்டும் கண்ணாடியில் இருந்து வெளியே வந்து விழுந்தார்கள் இருவரும்.

“அது ரொம்ப ஜாலியா இருந்தது..அண்ணா.. “என்ற தம்பியின் வாயை மூடிவிட்டு ஜன்னல் வழியாக கீழே எட்டிப்பார்த்தான் கிரிம்சன்.

சூழலே ரொம்பவும் வித்தியாசமாக இருந்தது .
இந்த அறையில் நாட்காட்டியோ ,மணிக்கூடு ஒன்றோ இல்லை .அதனால் இவர்கள் வெளியே செல்ல முயன்ற போது தான் தெரிந்தது கதவை யாரோ வெளியில் இருந்து அடைத்துள்ளனர்.


“அது எப்படி அண்ணா ..நான் உள்ளே தான் பூட்டினோம்… கதவை யாரோ வெளியே இருந்து பூட்டி இருக்காங்க.” என்றான் .

எதுவுமே புரியவில்லை. ஜிம்சனை ஜன்னல் வழியாக இறக்கி பக்கத்து அறைக்கு அனுப்பி அந்த பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.

அப்போது கீழே ஹாலில் சாப்பிட்டு கொண்டிருந்த ஒருத்தன் மேலே ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து அன்னார்ந்து பார்க்க தூக்கி வாரிப்போட்டது இருவருக்கும் .பக் என்று ஒளிந்து கொண்டனர்.

“அண்ணா …உன்னை மாதிரியே ஒருத்தன் நம்ம ஹாலில் இருக்கான்…”என்றான்.

இப்போது தான் கிரிம்சனுக்கும் எல்லாம் புரிந்தது. அங்கிருந்த நாட்காட்டியோ 20 வருடங்கள் எதிர்காலத்தை காட்டியது… .

“நாம இப்போ 2040 ம் வருஷத்தில் இருக்கோம் ஜிம்சன்… அது நானா தான் இருக்க வேண்டும்..20 வருஷங்களுக்கு பிறகு நான் இப்படி தான் இருப்பேன் போல ..”என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அந்த எதிர்கால மனிதன் இவர்களை நெருங்கி வந்துவிட்டான்.

அவன் வந்ததும் ஒரு கணம் மூவரும் பேச்சற்று போய் நிற்க அவனோ கிரிம்சனை கட்டி அணைத்தான். இவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“எதுக்காக அண்ணன் அவனையே கட்டிப் பிடிக்கணும்?”என்று ஜிம்சன் அவனையே கேட்டு கொண்டான்.

“இங்கிருந்தா சிக்கல் ஆகிடும் வாங்க ரெண்டுபேரும்”என்று சொல்லி அவன் இருவரையும் அந்த கண்ணாடி அறைக்கே அழைத்து சென்றான்.

“நீங்க என்னோட அண்ணன் தானே ?”என்ற ஜிம்சனை பார்த்து அவன் சொன்னான்.

“இல்ல நீ தான் நான் ..”என்றான். இருவருக்கும் மீண்டும் அதிர்ச்சி.

“என்ன?”

“அப்போ நீ முப்பத்தி மூணு வயசுல இருக்குற ஜிம்சன் ஆஹ்…நம்பவே முடியவில்லை.. அப்படியே என்னோட முகம் மாதிரியே இருக்கு.”என்றான் கிரிம்சன்.

“ஆமா..அப்போ நீங்க தான் நான் என்றால் அண்ணன் எங்கே. அவரும் நாற்பத்து மூன்று வயசில் இருப்பாரோ.. அவரையும் கூப்பிடுங்க.”என்றான் ஜிம்சன்.

அதற்கு எதிர்கால ஜிம்சன் மௌனமாக இருந்தான்.

“என்னாச்சு.. எனக்கேதாவது ஆயிடுச்சா?”என்று கேட்டான் கிரிம்சன்.

“அது வந்து …நீங்க… உங்க முப்பதாவது வயதில் ஒரு விபத்தில் இறந்து போய்ட்டீங்க.’என்றான்.
அதை கேட்டு கிரிம்சனுக்கும் ஜிம்சன் ஜுனியருக்கும் பேரதிர்ச்சி.

“இல்ல அப்படி நடக்க கூடாது.. வா அண்ணா இப்பவே நாம அந்த கால கட்டத்திற்கு போய் அந்த விபத்தை தடுப்போம்.”என்றான்.

“அவசரப்படாதே ஜிம்சன்…நான் அப்படி பண்ணதால் தான் அந்த விபத்தே நடந்தது.”என்றான்.

“நீ என்ன சொல்றே என்ன பண்ணி அந்த விபத்து நடந்தது. எப்படி நான் இறந்தேன்?”என்றெல்லாம் கிரிம்சன் கேள்விகளை அடுக்கினான்.

“நல்லா கேளுங்க நாம இப்போ ஒரு காலச்சுழலில் மாட்டிக்கிட்டு இருக்கோம். முதல் தடவை அண்ணன் இந்த கண்ணாடியை கண்டுபிடிச்சப்போ இதே போல தான் நடந்தது.. நான் எதிர்காலத்துக்கு போனேன் என்னையே பார்த்தேன். அண்ணன் இறந்துட்டான் என்னு தெரிஞ்சதும் நானும் அண்ணனும் சேர்ந்து மறுபடியும் அந்த கண்ணாடியை சரி செய்து அதுவழியா போனோம்… ஆனா அந்த விபத்தே நாங்க ட்ராவல் பண்ணி போன போது ஏற்பட்ட மின்சாரம் தாக்கி தான் அந்த இடத்தில் இருந்த கிரிம்சன் இறந்தார்..”என்றான்.

“அப்படின்னா அந்த ரெண்டாவது பயணம் நாங்க பண்ணல என்றால் கண்டிப்பாக அண்ணன் இப்போ உயிரோட இருந்திருப்பார் இல்லியா?”என்று கேட்டான் ஜிம்சன்.

“சரியா சொன்னாய்… ஒரு விஷயம் மட்டும் உண்மை ..காலத்தை அது பாட்டுக்கு விட்டுட்டா எல்லாமே சரியாவே போகும்.. ஒரு விஷயத்தை நாம மாத்திட முயற்சி செய்தாலும் அது மொத்த வரலாற்றையே மாற்றிடும்..”என்றான்.

“இந்த வார்த்தைகளை இதற்கு முன்னாடியே நான் கேட்டு இருக்கேன் .”என்றான் கிரிம்சன்.

அதற்கு எதிர்கால ஜிம்சன் சிரித்து விட்டு “சொன்னதே நீங்க தானே.”என்றான்.

“சரி ..ரொம்ப நாள் கழிச்சு உங்களை பார்த்ததில் ரொம்பவும் சந்தோசம் அண்ணா.. ஆனா நீங்க இப்போ உடனே கிளம்பி ஆகணும்… ஏன்னா அம்மாவுக்கு இதெல்லாம் தெரியாம உங்க ரெண்டு பேரையும் தேடிட்டு அந்த கண்ணாடியை தெரியாம பாழாக்கிடுவாங்க…
நான் சின்ன வயதில் பயணம் செஞ்சி மறுபடியும் போன போது அதுதான் நடந்தது.”

“அப்படின்னா அதுக்குள்ள நாங்க போகலைன்னா இங்கேயே மாட்டிக்குவோம். இல்லியா..?”என்று கிரிம்சன் கேட்டான்.

“ஆமா..நான் அண்ணன் இறந்த நாளில் இருந்து நீங்க வரும் நாளை எதிர்பார்த்துகிட்டே இருந்தேன் என்னோட இந்த வயதில் தான் நீங்க இறந்த காலத்தில் இருந்து வருவீர்கள் என்னு தெரியும் ஆனா எந்த நாளென்று நியாபகம் இல்லை… நான் உங்க கிட்ட இதெல்லாம் சொல்லுறதுக்கு இருபது வருஷம் காத்திருந்தேன்.”என்றான்


கீழே அவர்களின் அம்மாவும் அப்பாவும் ஷாப்பிங் முடித்து விட்டு வரும் சத்தம் கேட்டது .அங்கு எட்டி பார்த்த போது ஒரு சின்ன குழந்தையும் அவர்களின் கையில் இருந்தது. அது பார்க்க அழகாகவும் இருந்தது.

“அந்த குழந்தை யாரோடது?”என்று கேட்டான் ஜிம்சன்.

“எல்லா விஷயங்களையும் முன்கூட்டியே தெரிஞ்சிக்கிட்டா வாழ்க்கையில் சுவாரஷ்யமே இருக்காது… அவ பெயர் சாரா..அது மட்டும் உனக்கு தெரிஞ்சா போதும் .”என்று சொன்னான் வளர்ந்த ஜிம்சன்.

அவர்கள் அவசர அவசரமாக அந்த கண்ணாடியில் நுழைந்தனர். மீண்டும் சுழலில் சிக்கி கண்ணாடி வழியாக அதே அறையில் விழுந்தனர்.

அப்போது அந்த அறைக்குள் நுழைந்த அம்மா ரொம்பவும் கோபப்பட்டார்.
“ஜிம்சன் நீ என்ன காரியம் பண்ணி இருக்கே. எனக்கு தெரியாம சாவியை எடுத்து அண்ணன் கிட்ட கொடுத்து இருக்கே.. போன வாரம் அவன் எப்படி இருந்தான் தெரியும் தானே…”என்று கத்தி கொண்டே கோபத்தில் அந்த கண்ணாடியை உடைக்க போக இருவரும் அம்மாவிடம் மண்டி போட்டு மன்னிப்பு கேட்டனர்..

“இதை ஒன்னும் பண்ணிடாதீங்க மா…இனி நாங்க இந்த ரூம் பக்கமே வரமாட்டோம். “என்று அவளை சமாதானம் செய்து அழைத்து சென்றனர்.
அம்மாவின் கட்டளைக்கு ஏற்ப அந்த ரூம் வெளியே தாளிடப்பட்டது. கடைசியாக அந்த கண்ணாடியை இருவரும் பார்த்து கொண்டனர்.
ஏனெனில் இனி இருபது வருடங்கள் கழித்து அவர்களே அந்த அறையின் பூட்டை உடைக்க வேண்டி இருக்கும் இல்லியா?

“காலத்தை அது பாட்டுக்கு விட்டுட்டா எல்லாமே சரியாவே போகும்.. ஒரு விஷயத்தை நாம மாத்திட முயற்சி செய்தாலும் அது மொத்த வரலாற்றையே மாற்றிடும்.”என்று சொல்லி தனது தம்பியின் தோளில் தட்டிக்கொடுத்தபடியே புறப்பட்டான் கிரிம்சன் கூப்பர்.

இருபது வருடங்களின் பின்னர் அதே நாள் இவர்களுக்கு மாடியில் ஒரு சத்தம் கேட்க அண்ணனும் தம்பியும் அடித்து பிடித்து கொண்டு மேலே ஓடினார்கள். இந்த தடவை இருவரும் அவர்களின் இறந்த காலத்தை சேர்ந்த அண்ணன் தம்பியிடம் பேசினார்கள்.
என்ன நடந்தது என்று நமக்கு தான் முன்னாடியே தெரியுமே. அவர்களை அனுப்பி விட்டு கூப்பர் சகோதரர்கள் இருவரும் கீழே வர அவர்களின் அப்பா அம்மா இருவரின் குழந்தைகளையும் தூக்கி கொண்டு வந்து சேர்ந்தனர்.
ஜிம்சன் தனது அன்பு மகள் சாராவை தூக்கி அணைத்து கொண்டு மேல் மாடியை பார்த்து சிரித்தான்.

முற்றும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments