நடுநிசியில் ஏதோ
ஓர் தனிமை
ஊரே அடங்கி
ஓய்ந்து விட்ட நேரம்
தூரத்தில் கடல்
இரையும் ஓசை
கேட்டது…
வெளியிலே காற்றின்
தீண்டலினால்
தென்னங்கீற்றுகள்
ஒன்றோடு ஒன்று
உராய்ந்து கொள்ளும்
சலசலப்பு சத்தம்
காதில் ஒலித்தது…
தென்னை மரத்தில்
இருந்த பூக்கள்
விடுதலை பெற்றுக்கொண்டு
கீழ் நோக்கி வருகையில்
முற்றத்து கூரையில் பட்டு
ஒலி எழுப்பியது…
தெருநாய்கள் உறுமிக் கொண்டும்
ஒன்றை ஒன்று துரத்தி
பிடித்துக்கொண்டும்
சண்டையிடும் சத்தமும்
நாய்களை விரட்டும்
ஆண் குரலும்
ஒய்யாரமாய் கேட்டது…
அண்மையில் எங்கோ
படலையை சாத்திச்
செல்லும் கிறீச் ஒலியும்
இராப் புள்ளினங்களின்
ஓசையும் தெளிவாகவே
கேட்டது…
ஒவ்வொன்றும் துல்லியமாய்
கேட்கும் அளவுக்கு
அவளது சிந்தையில்
ஓடிக் கொண்டிருப்பது
தான் என்ன?
ஊரே தூக்கத்தில்
ஆழ்ந்திருக்க அவள்
மட்டும் உறங்காமல்
யாரை பற்றி
எதனை பற்றி
சிந்தித்துக் கொண்டிருக்கின்றாள்…?!