தூரத்து மலை உச்சியில்
ஏதோ கொஞ்சம்
புள்ளியாய் வெளிச்சம்
தெரிகிறது அவளுக்கு…
அந்த வெளிச்சத்தை
தொட்டுவிட வேண்டும்
எனும் ஆசை
அவளுக்கும் வந்து விட்டது…
வெளிச்சத்தை நோக்கி
நடந்து சென்றாள்
ஓடிச் சென்றாள்
எப்படியாவது தொட்டு
விட வேண்டும்
எனும் அவாவில்…
புள்ளி அளவு வெளிச்சம்
பெரிதாகத் தெரிகிறது
ஆனந்தம் கொண்டாள்
கைகளை நீட்டினாள்
ஆனாலும் அவளால்
தொட முடியவில்லை…
திரும்பிப் பார்த்தாள்
காலில் பூட்டப்பட்டு
இருந்தது நீண்ட
சங்கிலி வடிவில்…
உறவென…
குடும்பமென…
சமூகமென…
அத்தனையும் தடைகள்…
சங்கிலி இழுக்கப்பட்டது
வீழ்ந்தாள் மண்ணில்
ஆனாலும் அவாவை
அவள் விடவில்லை…
தொட்டுவிட வேண்டும்
என்றே இலட்சியம் பூண்டாள்
பார்த்துக் கொண்டே இருக்கிறாள்-அப்புள்ளி
அளவு வெளிச்சத்தை…
சங்கிலி தகர்க்கப்படும்
விலங்கு உடைக்கப்படும்
அந்நாளில் தொடுவாள்
ஆசை தீர வெளிச்சத்தை…