உயிர்வாழும் உயிரினங்களுக்கு
இவ் உலகில்
உறவென்று சொல்லி உறவாட உறவுண்டு
தாயென்றும் தந்தையென்றும்
தாரமென்றும் தமக்கையென்றும்
மனித உறவுகளில் பலபெயர்களுண்டு
உறவுகளைப் பேணுதலானது
பத்தோடு பதினொன்றென்று
இலேசாக எண்ணிவிடலாகாது
அது இறுக்கமாக
பிணைக்கப்படவேண்டிய ஒன்று
மென் சொற்களினாலும்
நன்னடத்தைகளினாலும்
உறவுகளைப் பிணைத்து
ஒற்றைக் கயிற்றில் கட்டிவிடுவதைக்காட்டிலும்
பிரசவவலி எவ்வளவோ போதுமானது…
ஐவிரல்கள் அத்தனையும்
ஒன்றாவதில்லையே
இதில்
உறவுகளும் விதிவிலக்கல்ல
சில உறவுகளிடத்தில்
அளந்து பேச வேண்டும்
சிலரிடத்தில் புகழ்ந்து பேசவேண்டும்
சிலரிடத்தில் அன்பாய்ப் பேசவேண்டும்
சிலரிடத்தில் பண்பாய்ப் பேசவேண்டும்
இன்னு சிலரிடத்தில்
பேசுவதைவிட புன்னகைத்தல்
மேலானது
எனினும்
மனிதன் என்ற அடிப்படையில்
சண்டைகளும், சச்சரவுகளும்
பிரச்சினைகளும், பிளவுகளும்
நிகழ்வது இயல்பே!
கடல்;
அலைகளைக் கரையை நோக்கித்
துரத்தினாலும்
மீண்டும் மீண்டும் அலைகள்
கடலைத் தேடி நாடி
செல்வதில்லையா?
அதுபோல்…
எங்கிருந்தோ வந்து
இருள் சூழ்ந்து கொள்ளும் போதெல்லாம்
சூரியன் தன் சுழற்சியால்
இருளை நீக்கி
ஒளிபரப்புவதில்லையா?
அதுபோல்…
உறவுகளுக்கிடையில் விரிசல்
விழும்போதெல்லாம்
அப்போதே தைத்துவிடுவது சிறந்தது
ஆறப்போட்டு காயமாற்ற
நினைத்தால்
அது உடல் முழுதும் பரவி
உள்ளத்தை அழித்துவிடும்
அவதானமாய் இருப்பது சிறந்தது…