ப்ளூட்டிஸ்ட்…

0
1384
அவன் நூரைப் பற்றி பேசுவது இப்போதெல்லாம் அடிக்கடி எனக்கு எரிச்சலை வரவழைக்கின்றது. அதுவும் கைகளை பிடித்துக் கொண்டு என் கண்களை பார்த்தபடி அவளின் புகழ் பாடுவதை நான் புன்னகை மாறாமல் கேட்டுக் கொண்டிருப்பதுதான் இந்த உலகத்திலேயே மிகப் பெரும் சங்கடமாக இருக்க வேண்டும். அவன் சொல்வதைப் பார்த்தால் நூர் மிகப் பெரும் அழகியில்லை. ஆனால் எளிதில் கவரக் கூடியவளாக இருந்திருக்க வேண்டும். அவன் பேசுவதெல்லாம் அவளின் பெரிய கண்களை பற்றித்தான். நூர் மென்மையே கொண்டவள் என்கிறான். எனக்கு இதில் உடன்பாடில்லை. ஒரு பெண்ணாய் இருப்பதால் சொல்கிறேன் எந்தப் பெண்ணுமே மென்மையான சுபாவம் கொண்டவளில்லை. அப்படி இருப்பது போல் நடிக்க வேணுமானால் செய்யலாம். ப்ளூட் வாசிக்கும் வகுப்பொன்றில்தான் நூருக்கும் அவனுக்கும் முதல் சந்திப்பு ஏற்பட்டது என்றான். அவனுக்கு எந்தளவு ப்ளூட் மயக்கத்தை ஏற்படுத்துமோ அந்தளவு மயக்கத்தை அவன் கண்களில் நூரைப் பற்றி பேசும் போது பார்த்தேன். நூரின் விரல்களைப் போலவே இதழ்களும் மெலிந்தவை மென்மையானவை என்றான். அவள் இசையை வெறுப்பவளாக இருந்து கொண்டு ப்ளூட்டை மட்டும் விரும்பினாள் என்றது எனக்கு வேடிக்கையாக இருந்தது. இன்று மட்டுமே ஐந்தாவது முறையாக நூரைப் பற்றி பேசுகிறான். சட்டென்று கைகளை உருவிக் கொண்டு நகர்ந்து விட்டால் என்ன என்று தோன்றினாலும் பின் அவன் முகத்தைப் பார்த்ததும் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். ‘நூரை நீ இன்னமும் நேசிக்கிறாயா?’. அவன் ஆம் என்று சொல்வான் என்று தெரிந்திருந்தும் தயக்கத்தோடே கேட்டேன். 

‘ஏன் இந்த சந்தேகம் ‘
அவன் ஒரு நிமிடம் போல் என்னைப் பார்த்து விட்டு பார்வையை விலக்கிக் கொண்டான். நான் ஒன்றும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். 

‘நூர் எனக்கு வசந்தத்தை போன்றவள். I was a longtime hermit as a rootless wanderer in the desert’ 
மேலே பேசவில்லை. அவன் எழுந்து சென்று ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டான். எனக்கு முதுகு காட்டி நின்றாலும் அவன் அழுது கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. நூர் மென்மையானவளா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இவன் மென்மையானவன். 

மேசையில் இருந்த ப்ளூட்டை பார்க்கையில் கலைஞனாய் மேலும் அவன் மீது இரக்கம் வந்தது. 

‘நீ இன்னும் எனக்கு ப்ளூட் வாசித்துக் காட்டவில்லையே’. 

நான் பேச்சை மாற்ற வேண்டி அவனை குறைப்படுவது போல் சொன்னேன். அவனுக்கு இந்த உலகத்தில் இரண்டு விடயங்கள்தான் பெரிது. ஒன்று நூர். மற்றையது ப்ளூட். அவனை பொறுத்த வரையில் நூர் இன்னும் இறக்கவில்லை. அதுதான் மன நிலையில் சராசரிக்கும் குறைவாய் அவனை காட்டிக் கொண்டிருந்தது. ப்ளூட்டை கைகளில் எடுத்துக் கொண்டு வாசிக்க முன் கேட்டான்.

‘நாளையும் வருவீங்கதானே சிஸ்டர் ‘ நான் மென்மையாய் புன்னகைத்தேன். காற்றோடு சேர்த்து ப்ளூட்டின் இசையும் அந்த அறையை நிறைத்துக் கொண்டிருந்தது.

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments