மழைவரக்கூடும் என்றதும்
மண்வாசணையை முந்திக்கொண்டு
மொட்டைமாடித் துணிகளின்
ஈரநெடியே முதலில் மனதை
வந்தடைகிறது
யாரோ ஒருவர்,
தனிமையின் பிடியில் தவிக்கும்
வயோதிக நோயாளியின்
சந்திப்பை தள்ளிப்போடுகிறார்.
மூக்கின் மேல் விழுந்த
முதல்துளியை மட்டும்
சுருக்குப்பைக்குள் முடிந்து கொண்டு
சுமையோடு வீடுதிரும்புகிறாள்
நடைபாதையில் காய்கறி விற்கும்
கூன் கிழவியொருத்தி.
அதுவரை காலியாக இருந்த
பாத்திரங்களெல்லாம்
இந்த வருடத்தில் முதன் முதலாக
நிரம்ப காத்திருக்கின்றன
மழைநீரொழுகும் குடிசைகளில்
நேற்றுவரை கண்டும் காணாமலும் வந்த
சாலைப்பள்ளங்களையெல்லாம்
தன் ஞாபகப்பள்ளத்திலிருந்து
தோண்டியெடுத்து
கயிற்றில் நடக்கும்
குழந்தையின் கவனத்தோடு
ஊர்ந்து செல்கிறார்
இருசக்கர வாகன ஓட்டி ஒருவர்
மழையில் நனைவது பிடிக்கும் என்று
பிரமாணபத்திரம் தாக்கல்
செய்தவர்களெல்லாம்
மறக்காமல் கலர் கலர் குடைபிடித்து
எட்டி நடக்க,
யாருமே கொண்டாடாத போதும்
அவசரங்களின் நகரமெங்கும்
சடசட வென
அடித்துப்பெய்கிறது ஓர் மாமழை..!
உண்மையில் மழை என்றாலே மனசும் குளிர்ந்திடும். ஆனால் கூரையில்லாத தலைகளை நினைக்கும் போதுதான் ரசிக்க முடிவதில்லை மழையினை முழு மனதோடு