நாம் நம் மாலை நேர சந்திப்புக்கு
தனித்தனியே நம்மை
தயார் செய்து கொண்டோம்
பல பிரிவுகளின் பின்
நேருக்கு நேராய் சந்தித்தல் உத்தமம் என
உறுதிகொண்டோம்
உனக்கும் எனக்கும் நெருக்கம் இல்லாத இடமொன்றில்
சந்தித்தலுக்கான
இருக்கைகளை பதிவிட்டுக்கொண்டோம்
பேச வேண்டியவை
பேசக்கூடாதவை என
நேர்த்தியாய் திட்டமிட்டு
சந்திப்பில் சண்டை வரக்கூடாதென
உறுதி எடுத்துக் கொண்டோம்
இது ஒன்றும் முதல் சந்திப்பு அல்ல
ஆனாலும் இந்தப் பிரிவின் துயரை
தனித்திருத்தல் பிரிந்திருத்தலின்
சோபையை பகிர
இந்த சந்திப்பாவது
கைகொடுக்க வேண்டும் என
இறைவனை பிரார்த்தித்துக் கொண்டோம்
குறைந்தபட்சம்
பரஸ்பரம் முத்தங்களையும்
நமக்கே நமக்கென
நெருக்கமான அணைப்புகளையும்
பரிமாறிக் கொள்ள வேணும் என்ற தவிப்புகளை
கண்களில் படரவிடக்கூடாதென
இருவரும் கண்ணாடியும் அணிந்து கொண்டோம்
உண்மையில் காதலும் காலமும் பொல்லாதது
தவித்துச் சேர்த்த வார்த்தைகளும்
தீரக்கூடாது என நினைத்த அன்பின் ஆற்றாமையும்
கண்ட மாத்திரத்தில் எங்கோ போய் விட்டன
நேரத்திற்கு நான் வரவில்லை என
நீயும்
இந்த டிராபிக்கில் வர வைத்து விட்டாய் என
நானும்
தோன்றிய கோபத்தை
கைகுலுக்கிய ஹலோக்களில் மறைத்துக்கொண்டோம்
என்ன பேசுவதென தெரியாமல்
தோன்றியதை எல்லாம் பேசிக் கொண்டும்
என் அருகாமையில்லா
உன் நிழலின் மாற்றத்தை நானும்
கன்னங்கள் கழுத்து
கைகள் இதழ்கள் என எதற்கும் இடம் கொடுக்க முடியா
இறுக்கத்தையும் மறைத்தபடி
இதழ்களில் மெல்லிய புன்னகையை மட்டும் நாம்
பூசிக் கொண்டோம்
நானே தொடங்கினேன்
வெறுமைதான் எத்தனை பயங்கரமானது
சூனியங்கள் கிளிஞ்சல்கள் அல்ல
என்னால் இயலாததற்கப்பாலும் பொறுக்கி விட்டேன் என்றேன்
குறுக்காய் கோர்த்த உன்
இரு கைவிரல்கள்
என் கரங்களை பற்றப் போவதில்லை
எனத் தெரிந்தது
நீ கடைசிவரை கண்ணாடியும் முகமூடியும்
கழற்றமாட்டாய் எனத்தெரியும்
கைப்பை திறந்து காகிதங்களை எடுத்துக் கொண்டேன்
பிரிவுப்பத்திரத்தின் முதல்
கையெழுத்தை நானே போட வேண்டியாயிற்று
பத்திரங்கள் பரிமாற்றும் போது
என் விரலில் வீழும்
உன் விழிநீர்த்துளிகள்
உணர்ந்தும் உணராமலே
மீண்டும் உன் கையெழுத்திட்ட
காகிதங்களை இறுக்கிக் கொண்டேன்
எது பிழை
எது தவறு
எது குற்றம்
எது நேர்த்தி
விளக்கம் விலகல்
இரண்டுக்கும் அப்பாலே
விடைபெறுகிறேன் என்றேன்
நல்லது என்றாய்
வார்த்தைகள் தீர்ந்து விட்டன
சந்திப்புகள் முடிந்துவிட்டன
ஆனாலும்..,
நாம் விடைபெற்ற இருக்கைகளை
காலி செய்த நேசத்தை
அடுத்த ஜோடிகள்
அதற்கடுத்த ஜோடிகள் என
நிரப்பிக் கொண்டுதானிருக்கின்றன
அதே பழைய மெலடிகள்
இன்னொரு நேசத்திற்கு
புத்தம் புதிய
மெட்டாய் பாடிக்கொண்டுதானிருக்கின்றன..
/காலி செய்த நேசத்தை அடுத்த ஜோடிகள் அதற்கடுத்த ஜோடிகள் என நிரப்பிக்கொண்டுதானிருக்கின்றன/ – அருமையான வரிகள்.. தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகள்!
நன்றி