அளவான கதி…
இளம் மஞ்சள் உடல் கொண்ட
தனியார் பேருந்து
இதமான இடைக்கால சினிமாப் பாட்டு
சொர்க்கத்தைக் காட்டுது காதைத் தொட்டு
சாரதியின் பக்கத்தில் ஜன்னல் ஓரமாய் நான்-சூரியனை
வழியனுப்பிவைத்து சிவந்து போகும் வான்
பாதையின் தூரத்தே ஓரமாய் நின்றவள்- தன்
வளையல் நிறைந்த கையை நீட்டி
மறித்தாள்
அமர்முடுகி நின்றது பேருந்து- தலை குனிந்து ஏறினாள் அம் மாது
அவள் குறித்து என் மனதில் பதிந்தது….
ஒன்று
ஊதா நிறப் புடவை
இன்னொன்று
அந்த வெள்ளி ஜிமிக்கி…
இரண்டாம் ஆசனம் தாண்டி வலப்புறம் திரும்பி
ஆசனம் ஒன்றை பிடிமானமாக பற்றி நின்றது- அக் கொடி
அனைத்து ஆடவர் கண்ணும் அவள் மீது
பாவை அவளோ பெண்களுக்கும் ஓர்
எடுத்துக் காட்டு
முன் பக்க கண்ணாடியால் பின் நின்ற அவளை
கண் வெட்டாமல் நிமிடத்திற்கு நிமிடம்
பார்க்கத் தவறவில்லை – நான்
காற்றிற்கு ஆடும் அதே வெள்ளி ஜிமிக்கி
காதோரமாய் அவள் சரிசெய்யும்
கலைந்த முடி
என் மனக் கவனம் கலைத்த கணம்
கத்தி விழியாள்!
கன்னியவள்- சாரதியின் கவனத்தையும்
கலைக்கத் தவறவில்லை.
சந்தியால் திரும்பியது பாரவூர்தி
கண நேர மோதல்….
உள்ளே சனங்களின் மரண கூச்சல்…
பேருந்தில் தொடர்ந்தும் ஒலிக்கிறது சினிமா பாடல்
கனவா?!
இல்லை!
ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கிறது
கால் துண்டு பட்டது போல் வலிக்கிறது
சற்றே மயக்கத்துடன் கண் விழிக்கிறேன்
ஆம்புலன்ஸில் ஏற்ற என்னை தூக்கும்போது
“எங்கே அந்தப் பெண்”
தேடியது என் இரு கண்
மீண்டும் ஒருமுறை பார்த்து விடுவோம் என்ற நம்பிக்கை
இதோ
என்னை ஏற்றிக் கொண்டு செல்கிறார்கள்
எங்கே உள்ளாய் கண்மணியே!
பார்தேன்!
அவள் என்னவானாள்?
தெரியவில்லை
பார்த்தது என்னவோ
நிலத்தில் கழன்று வீழ்ந்திருந்த அவளின்
வெள்ளி ஜிமிக்கி….
அருமை
மிக்க நன்றி
இவரது கவிதை பற்றி ஏதும் கருத்துகளை கூறுங்கள். அதிக கருத்துக்களை கொண்ட கவிதைகள் தெரிவு செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம்.
மிக்க நன்றி
மிக மிக அழகான வரிகள் கோர்த்து இப்படைப்பினை அழகாக செதுக்கியுள்ளார். வாசிக்க வாசிக்க மென்மேலும் மனதை வசீகரிக்கிறது. கவிக்கேற்ற தலைப்பு. காதலின் சுவையினை எல்லை மீறாது மிக அற்புதமாய் அமைத்துள்ளார். வாழ்த்துக்கள்.
மிக்க மிக்க நன்றி நண்பா
உங்கள் கருத்துக்கள் என்னை உற்சாகப்படுத்துகின்றது