அச்ச உணர்வு

0
1839

தன் உடலுக்கோ, உயிருக்கோ ஆபத்து நேரப்போகிறதென்று எண்ணக்கூடிய உயிரினங்களுக்கு ஏற்படும் ஒரு மனநிலையே அச்சவுணர்வாகும். ஏனைய உயிரினங்களுக்கு இவ்வுணர்வு தம்மை ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவே பெரும்பாலும் தோன்றினாலும், ஆறறிவு ஜென்மமான மனிதனுக்கோ பல்வேறுபட்ட பரந்த வகைகளில் அச்சவுணர்வு மனநிலை தோன்றுகின்றது. மனிதனுக்கு மட்டுமேயுள்ள சிந்தனையாற்றலே அச்சவுணர்வு இவ்வாறு ஏற்படுவதற்கான காரணமாகும்.

மனிதன் தாயின் கருவில் குழந்தையாய் உருவெடுத்தது முதல், அவளால் பூச்சாண்டி காட்டப்பட்டு உணவூட்டப்படும் வரை அல்லது உறங்கவைக்கப்படும் வரை அவனுக்கு அச்சவுணர்வு எழுவதில்லை. அது மனதில் அதுவரை செயலற்று இருக்கிறது. அதனைத் தாயானவள் தூண்டி விழிக்கச்செய்கிறாள் என்றுதான் சொல்லவேண்டும். அந்த நேரம் முதல் தூண்டப்படும் அச்சவுணர்வு மனத்தில் நன்கு கருக்கொண்டு வளர்ச்சியடைந்து பல்வேறு விதமாகப் பரிணாமம் பெற்று மனிதனின் இறப்புவரை ஆட்டிப்படைக்கிறது. மனத்தினால் ஆளப்படுபவனே மனிதன் ஆகையினால் மனத்தில் ஊன்றிவிட்ட அச்சவுணர்வினால் அவனது சிந்தனை,செயல்திறன் என்பனவும் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றது.

குழந்தையாயிருக்கும்போது, தன்னைத் தாய், தந்தையர் கைவிட்டுவிடுவார்களோ, பிரிந்துவிடுவார்களோ என்று அச்சமடைகின்றது. இந்த நியாயமான அச்சம் காரணமாக அது தாய், தந்தையரே தஞ்சம் என எண்ணி அவர்களைவிட்டுப் பிரியாமல் இருக்கிறது. ஓரளவு வளர்ந்ததும் பாடசாலை செல்லும் பருவத்தில் தன் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக விளங்கும் ஆசிரியர்களைச் சந்திக்கிறது. ஆசிரியர்களிடம் இயல்பாகவே பிள்ளை அச்சவுணர்வோடு பழகுவது, ஆசிரியரிடமிருந்து அறிவைப்பெற்றுக்கொள்வதற்கும் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்வதற்கும் வழிவகுப்பதால் அதுவும் நியாயமான, தேவையான அச்சவுணர்வாகவே இருக்கிறது. தொடர்ந்து கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் உயர்படிப்புக்களை மேற்கொள்ளும் பொழுது, விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் போன்ற கல்விமான்களுடன் ஒருவித அச்சவுணர்வுடனேயே மாணவன் பழகுகிறான். அப்போதுதான் கல்விமான்களின் நல்ல அபிப்பிராயத்தையும், அதன்மூலம் அவர்களின் உயர்தர கல்வி ஞானத்தையும் மாணவனால் பெற்றுக்கொள்ள முடிகிறது. கல்லூரி வாழ்க்கை முடிந்து இனி வேலை தேடும் படலம் தொடங்குகிறது. தொழில் ஒன்றில் சேர்வதற்காகப் பல நிபுணர்களின் மத்தியில் நேர்முகப்பரீட்சை நடைபெறுகிறது. அதில் பங்குகொள்ளும்போது அவனுக்கு ஒருவித அச்சவுணர்வு ஏற்படுகிறது. தான் சொல்வதை நிபுணர்கள் ஏற்றுக்கொள்வாரா, தன்னை வேலைக்குச்சேர்த்துக்கொள்வாரோ என்ற சந்தேகங்கள் அவன் மனத்தில் அச்சவுணர்வாகப் பிரதிபலித்து சிலவேளைகளில் நினைத்ததைச்சொல்ல வாயில் வார்த்தைகள் வராமல் ஊமையாய்ப்போவதும் உண்டு. அதனால் நேர்முகப்பரீட்சை தோல்வியில் முடிந்து வேலை வாய்ப்புகள் தடைப்படுதலும் உண்டு. உயர்தர கல்விவரை அவன் வளர்வதற்கு ஊன்றுகோலாய் விளங்கிய அச்சவுணர்வு, நேர்முகப்பரீட்சைக்குச் செல்லும்போது அவனின் வளர்ச்சியைத் தடைப்படுத்தும் ஒன்றாகவும் மாறலாம். இவ்விதமாகக் கல்வி கற்காதவர்களுக்கு இப்படியான அச்சவுணர்வுக்கு இடமிருப்பதில்லை. ஆனால் யாராயினும் வேலை ஒன்றில் சேர்ந்துவிட்டால் அவ்வேலையைக் கண்காணிக்கும் அதிகாரிகளிடம் அச்சவுணர்வோடுதான் பழகவேண்டியுள்ளது. அதிகாரிகளின் நன் மதிப்பைப்பெறுவதற்காகவும், அவர்களிடமிருந்து தொழில் திறனை நன்கு கற்றுக் கொள்வதற்காகவும், வேலையில் தொடர்ந்து நிலை கொள்வதற்காகவும் இவ்வாறு நடந்துகொள்ளவேண்டியுள்ளது.

பொதுவாகவே, நேர்மையையும் உண்மையையும் கடைப்பிடித்து உயர்ந்த ஒழுக்கநெறியைப் பின்பற்றி வாழும் ஒருவனுக்கு அச்சவுணர்வு அதிகமாகவேயிருக்கும். தனது நடத்தைகள், வார்த்தைகள் எங்கே தனது வாழ்க்கைப்போக்கில் களங்கத்தை உண்டுபண்ணிவிடுமோ என அதிகம் கவலைப்படுவதன் காரணமாகவே இவ்வித அச்சவுணர்வு எழுகிறது. இது அவனை வழி தவறவிடாது பாதுகாக்கும் கவசமாக இருப்பது உண்மையே. எனினும் தொடர்ந்த அச்சவுணர்வின் காரணமாக மனநிலையில் பாதிப்பு ஏற்படவும் இடமளித்துவிடுகிறது.

குறுக்குவழியில் பணம் சேர்க்கும் ஒருவனுக்கு ஏற்படும் அச்சவுணர்வோ வேறுவிதமானது. எந்த நேரத்திலாவது காவலர்களிடம் அகப்பட்டு விடுவோமோ என்ற பயமே அவனைப்போட்டு அரித்துக்கொண்டிருக்கும். அல்லது பிறர் தன் பணத்தை அபகரித்து விடுவார்களோ என்று சிந்தித்து அச்சவுணர்வுத் தீயில் கருகிக்கொண்டிருப்பான்.

அச்சம், மடம்,நாணம்,பயிர்ப்பு என இலட்சியப்பெண்களுக்கான நற்குணங்களில் அச்சமே முன்னிலைப்படுத்திக்கூறப்படுகின்றது. தன் கணவரல்லாத பிறரை நேருக்குநேர் காணும்போது பெண்ணுக்கு இயற்கையாகவே உளத்தில் அச்சவுணர்வு எழவேண்டும் என இலக்கியங்கள் கூறுகின்றன. அது பெண்மைக்கு ஒரு அணிகலன் என்பர்.

தனி மனிதர் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே அச்சவுணர்வில் மூழ்கிக்கிடக்கிறது என்று சொல்லவேண்டும். எங்கே மூன்றாம் உலகப்போர் மூண்டு, அணுக்குண்டுகளாலும், ஐதரசன் குண்டுகளாலும், ஏவுகணைகளாலும் தாக்கப்பட்டுவிடுவோமோ என்று உலகநாடுகள் பலவும் அச்சவுணர்வினால் நடுங்கிக்கொண்டிருக்கின்றன. இது போதாதென்று பயங்கர இயற்கைச்சக்திகளான பூகம்பம், எரிமலைக்குமுறல், பெருவெள்ளம், சூறாவளி போன்றவைகளால் அழிவு நேருமோ என்றும் அஞ்சியஞ்சிச்சாகும் மக்களும் உள்ளனர். பஞ்சம், பட்டினிகள் ஏற்பட்டுவிடுமோ என்றும் பயப்படுபவர்கள் பலர் உள்ளனர்.

எவனொருவன் உலகைக்கண்டு அஞ்சவில்லையோ, எவனைக்கண்டு உலகம் அஞ்சவில்லையோ அவனே எனது பக்தன்என்று பகவான் கிருஷ்ணர் இந்துமத ஆதாரநூலான பகவத்கீதையில் அருளியுள்ளார். ‘ உனது இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாகஎன்று இயேசு கிறீஸ்துநாதர் பரிசுத்த வேதாகமமான பைபிளில் திருவாய் மலர்ந்துள்ளார். பஞ்சமா பாதகங்கள் செய்வதற்கே அஞ்சவேண்டும் என்றே நீதிநூல்கள் யாவும் போதிக்கின்றன. அறந்தவற நேருமிடத்தும், மானம் இழக்கப்போகுமிடத்தும், நன்றி மறக்கும் போக்கு ஏற்படுமிடத்தும் அச்சவுணர்வு தோன்றிஅவை நடைபெறாமல் காக்க வழி ஏற்படுத்தவேண்டும். அச்சவுணர்வானது மனிதனின் பிறழ்வான போக்கினை மாற்றம் செய்யும் ஒரு காரணியாய் அமையும் பொழுதே அது ஆக்க சக்தியாய் வேலை செய்யும்.

மனிதனின் ஒரு பிரதான உணர்வான அச்சத்தைப் போக்குவதற்கென்றே கடவுள் வழிபாடு தோன்றியது. தனக்கு வரக்கூடிய ஆபத்துக்கள், இடர்கள் அனைத்தையும் போக்கி, சுகமாக அமைதியான, சுபீட்சமான வாழ்வு தரக்கூடிய பேராற்றல் ஆண்டவனிடம் உண்டு என்று மனிதன் நம்பிக்கை கொள்ளும்போது, அவன் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும்! என்று துணிவுடன் இருந்து செயற்பட இடம் ஏற்படுகிறது. ஆண்டவனிடம் இவ்வாறு கொள்ளும் நம்பிக்கை படிப்படியாக வளர்ந்து தன்னம்பிக்கையை வலுவூட்டுவதால் அவன் பெரும்பெரும் நற்காரியங்களை இவ்வுலக மனித சமுதாயத்திற்குச் செய்யமுடியும். வேண்டாத, முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ள அச்சவுணர்வை மனத்திலிருந்து அகற்றி, அவ்விடத்தில் துணிவையும், தன்னம்பிக்கையையும் இருத்தி, இந்த ஓய்வில்லாத வாழ்க்கைப்போராட்டத்தை எதிர்கொண்டு விழிப்பாகச்செயற்பட்டு மனிதகுலத்தின் மாண்பினைக்காக்க உறுதி கொள்வோமாக!

முந்தைய கட்டுரைசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 04
அடுத்த கட்டுரைசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 05
சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)
இலக்கிய, எழுத்துப்பணிகளில் சுமார் 52 வருடங்களாக ஈடுபாடு கொண்ட யான் சமயம்,அரசியல்,சமூகம், இலக்கியம்,கல்வி மற்றும் விஞ்ஞானம், நவீன தொழில்நுட்பம் பற்றிய துறைகளில் கட்டுரைகளையும் கவிதைகளையும் படைத்துள்ளேன். எனது கவிதைகள், இலங்கையின் புகழ்புத்த கவிஞர்களான நீலாவணன், சில்லையூர் செல்வராசன், நாவற்குழியூர் நடராசன், காசி ஆனந்தன் போன்றவர்கள் தலைமையில் கவி அரங்கேற்றம் பெற்றுள்ளன.இலங்கை வானொலியிலும் எனது கவிதைகள் ஒலித்தன. வீரகேசரி, சுதந்திரன், கலைவாணன்,தினகரன் போன்ற பத்திரிகைகளில் எனது கவிதைகளும் கட்டுரைகளும் பிரசுரமாகியுள்ளன. மாற்றம், கிழக்கொளி, இந்து தருமம்,இளங்கதிர் சாயிமார்க்கம், யாழோசை, சமாதானம்,நாணோசை, மருதம்,அருந்ததி,தாயக ஒலி போன்ற சஞ்சிகைகள் எனது ஆக்கங்களைப்பிரசுரித்துள்ளன.ஆங்கிலத்திலும் பல கவிதைகளைப்படைத்துள்ளேன். பட்டய இயந்திரப்பொறியியலாளராகிய யான் தொழில்நுட்பம்,விஞ்ஞானம் சார்ந்த கவிதைகளையும், ஆரய்ச்சிக்கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். கவிதைநூல்களையும், தொழில்நுட்ப நூல்களையும் எழுதி ஆவணமாக்கி வைத்துள்ளேன்.அத்துடன் பல கவிதைகளை எனது குரலில் பதிவுசெய்து வைத்துள்ளேன். திருக்குறள்கள் அத்தனையையும் விருத்தப்பாவில் மாற்றி எழுதியுள்ளேன்.வெண்பா,விருத்தப்பா, ஆசிரியப்பா,கட்டளைக்கலித்துறை, குறும்பா வடிவில் கவிதைகளைப்படைக்கிறேன். பாடசாலைக்காலங்களில் தமிழ் ஆங்கில நாடகங்களில் நடித்த அனுபவம் உண்டு. வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளிலும், நாட்டுக்கூத்திலும் பக்கப்பாடகராகப்பங்குபற்றியுள்ளேன். ஆலயங்களில் பஜனைப்பாடகராகவும் இருந்துள்ளேன். முகநூலில் சமூக,சமய, அரசியல், ஒழுக்கவியல் சார்ந்த விடயங்களைத் தொடர்ச்சியாக எழுதிவருகிறேன். சோதிட சாஸ்திரத்திலும் எனக்குப்பரிச்சயம் உண்டு. அக்கரைப்பற்று இராமகிருஷ;ண வித்தியாலயத்திலும், கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்திலும் கல்வி பயின்ற யான் பேராதனைப்பல்கலைக்கழகத்தின் இயந்திரப்பொறியியல் பட்டதாரியாவேன்.இலங்கைப்பொறியியலாளர் சங்கத்தின் பட்டய இயந்திரப்பொறியியலாளராகவும் உள்ளேன். தம்பிலுவில் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணியை ஆரம்பித்த யான், பேராதனைப்பல்கலைக்கழகம், கிழக்குப்பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கைத்திறந்த பல்கலைக்கழகம், இரத்மலானை தொழில்நுட்பப்பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை, இலங்கை சீமெந்துக்கூட்டுத்தாபன காங்கேசன் சீமெந்துத்தொழிற்சாலை என்பவற்றில் இயந்திரப்பொறியியலாளராகவும், யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரி, மட்டக்குளி உயர் தொழில்நுட்பக்கல்லூரி என்பற்றில் வருகை தரு விரிவுரையாளராகவும், பெலவத்தை நிர்மாண இயந்திரோபகரண பயிற்சிநிலையத்தில் செயற்திட்டப் பொறியியலாளராகவும், தேசிய கல்வி நிறுவகத்தின் பொறியியல் தொழில்நுட்பப்பகுதியில் செயற்றிட்ட அதிகாரியாகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். கல்முனை பாண்டிருப்பைப்பிறப்பிடமாகக்கொண்ட மூதறிஞர் சைவப்புலவர் இளைப்பாறிய உதவி அதிபர் சே.சாமித்தம்பி-நாகம்மா தம்பதிகளின் சிரேஷ;ட புத்திரனான யான் சாவகச்சேரியைப்பிறப்பிடமாகக்கொண்ட பாக்கியலட்சுமி அவர்களைத்துணைவியாக வரித்துள்ளேன். யான் மூன்று ஆண் மக்களுக்குத் தந்தையாவேன். (2018-07-15) எமது 35ஆம் ஆண்டு திருமண நிறைவுநாள் என்பது குறிப்பிடத்தக்கது. எனது 'இல்லறவாழ்வு இனிக்குமா? கசக்குமா? ' எனும் நூல் அருந்ததீ நிறுவனத்தினால் கொழும்புத்தமிழ்ச்சங்கத்தில் அன்றைய தினம் வெளியிடப்பட்டது.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments