சாம்பல் – வெள்ளை

0
608

“சாம்பலுக்கும் வெள்ளை நிறத்துக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?”

“நீயே சொல்லு. இதெல்லாம் எனக்கு பிடிபடாது”

“தெரியும் நீ ஒரு பைத்தியம். முசுடு. உன்னோடு சிநேகம் வைப்பதற்கு பதில் நான் வேறு யாரையும் நேசித்திருக்கணும்”

“ம் ம்..”

“இந்த ம் என்பதை விடுத்து வேறு ஒண்ணும் தெரியாதா?? “

அவள் மூஞ்சை உம் என்று தூக்கி வைத்துக் கொண்டாள்.

இப்போது அவளை நான் சமாதானம் செய்யணும். சிரித்துக் கொண்டே அவள் அருகில் சென்றேன்.

“இதோ பாரு” அவள் முகத்தை தொட்டு நிமிர்த்தினேன்.

“இதென்ன குழந்தையாட்டம் முரண்டு பிடிப்பது?? இதெல்லாம் நமக்கு அவசியமா என்ன?”



அவள் கோபம் குறைந்தாற் போல இல்லை. “நீ எதுவும் பேசாதே.. போ எப்போதும் போல இப்போதும் உன் வேலையையே கட்டிக்கொண்டு அழு.. நான் ஒரு பைத்தியம். இல்லாவிட்டால் ஏன் உன்னை நச்சரித்து கொண்டிருக்கேன்?? “

“அடடா இவ்வளவு கோபம் ஏன்.. என் மேல இரக்கம் காட்டக் கூடாதா?? இதோ பாரு நான் பாவமில்லையா? ” அவள் உள்ளங்கைகளுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டேன்.

அவள் நிமிர்ந்து பார்த்தாள். அதற்கு மேல் முடியவில்லை. பக்கென்று சிரித்தாள்.

“வாபஸ் தானே ” என்றேன்.

“எது?”

“இந்த சண்டை, கோபம், நான் ஒரு பைத்தியம் முசுடு என்பதெல்லாம்”

“சீ போ நான் சீரியசாக சொல்லவில்லை”

“ஓகே அப்போ வாபஸ்”

அவள் ஆம் என்பது போல் தலையாட்டினாள்.

“அப்போ முத்தம் கொடு”

“சீ போ சரியான பைத்தியம் நீ”

“அட இப்போ தானே சொன்னாய். நான் விட மாட்டேன். நீதிபதிகளையும் குற்றவாளியாக்கும் வக்கீல்கள் தான் இந்த மனைவிகள். அது என்னிடம் பலிக்காது” அவள் கைகளை பிடித்துக் கொண்டேன்.

“ஐயோ இதென்ன குழந்தையாட்டம் என்னை விடேன்.. ” அவள் அறுபது வயதிலும் அதிகமாய் வெட்கப்பட்டாள்.

“சரி இதற்கு பதில் சொல்லு. விடுகிறேன்”

“ம் ம்”

“சாம்பலுக்கும் வெள்ளை நிறத்துக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?”

அவள் புன்னகை விரிந்தது. கேசத்தை ஒதுக்கி என் தளர்ந்த நெற்றியில் முத்தமிட்டாள்…

அப்போ கேஸ் டிஸ்மிஸ் என்றேன்…

சாம்பல் என்பது எப்படி வெண்மையின் தளர்ச்சியோ அஃது போல் இளமையில் தோன்றி முதிர்கிறது முதுமை என்பது எங்கள் இருவருக்குமே தெரியும்…

எனது எழுத்தாளர் பக்கத்தில் பிரவேசிப்பதோடு எனது ஏனைய படைப்புக்களையும் பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை தெரிவியுங்கள். உங்களது கருத்துக்கள் மூலமே எங்கள் எழுத்துக்களில் மாற்றங்களை கொண்டு வர முடியும் என நம்புகிறேன்.
https://neermai.com/author/shafiya/


0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments