கருப்புக்கண்ணாடி

0
546
IMG_20210120_133706-c283814c

 

 

 

 

 

 

ஒரு வாரத்திற்குப் பிறகு
இன்றுதான் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கிறேன்

நீ பேசாமல்
திருப்பிக்கொண்ட முகத்தில்
கிழிக்கப்படாத
என் நாட்காட்டித் தாள்கள்

உன் குறுஞ்செய்தி
பதிலுக்காகக் காத்திருக்கும்
துருப்பிடித்த பற்சக்கரங்களுடன்
சுழலும் என் கடிகாரம்

உள்ளிருந்து நான்
உறக்கக் கூச்சலிட்டும்
வெளியே கேட்காத படி
கான்கிரீட்டால் நீ மூடிச்சென்ற
ஒரு பாழுங்கிணறு

நீ தாழ்ப்பாளிட்டுச்சென்ற
கதவுகளைத் தட்ட
எத்தனிக்கும்
அன்பின் கூர்வாளால்
துண்டாடப்பட்ட என் கரங்கள்

ஒரு பாலைவனப் புயலில்
உன்காலடிகளைத் தேடித் தட்டழியும் திரை விழுந்த
என் கண்கள்

பல வருட சூன்யத்திற்குப்பிறகு
இன்றுதான் நம்பிக்கை வந்தது
நம் நாட்கள் இனி திரும்பாதென்று!

சூரிய வெளிச்சம்
கண்ணைக்கூசுவதாக
பொய் சொல்லி
இந்த கருப்புக் கண்ணாடியை
அணிந்து கொள்கிறேன்

நிரந்தரமாக!

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments