மழை மேகத்தைச் சுமந்தும்
மண்டியிடா வானம் போல,
விழி வழிக் கண்ணீரை
புன்னகையால் துடைத்து
நிமிர்ந்து நிற்கிறாள் இவள்!
வலிகள் இவளிடம்
தஞ்சம் புகுந்தும்
பாறையென உறுதி கொள்கிறாள்…
சிதறி ஓடும் மேகங்களைப் போல
வாழ்க்கை சிதைக்கப் பார்த்தாலும்,
சிகரமாய் தன் கௌரவம் காக்கிறாள்!
அவளது அமைதியை
அலட்சியம் என்பார்கள் சிலர்…
அனுபவ பேச்சை
“திமிர்“ என முத்திரை
குத்துவர் பலர்!
ஆனால்…
அந்தத் திமிரின் பின்னால் இருப்பது
ஆயிரம் காயங்களை ஆற்றிய
ஆழ்ந்த பக்குவம்!
எதையும் தாங்கும் இதயம்…
அவள் தாங்கும் வலிகள் ஊர் அறியாத ரகசியங்கள்…
அவள் பூணும் மௌனம்
உலகுக்குத் தெரியாத போர்க்களங்கள்…
தன்னை உடைக்க நினைக்கும்
அத்தனை கவலைகளையும்,
ஏற்றுக் கொண்டு
அமைதி காப்பவள்!
உண்மையில்…
சிதறிவிடக் கூடாது என்பதற்காக
தன்னைத் தானே இறுக்கிக்கொண்ட
வைரம் இவள்!
ஹஸீதா அபுசாலி
பொத்துவில்































