நீ திறந்து வைத்திருப்பது
ஜன்னலை மட்டுமல்ல…
நம் நேசத்தின் கதவுகளையும் தான்!
பறக்கவிட்டேன் என்று
நீ ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்…
ஆனால், உன் விரல்
நுனி பிடித்துப் பழகிய எனக்கு
சிறகுகள் இருப்பதே
மறந்து போனதே!
தனித்துப் பறக்கும்
சுதந்திரத்தை விட,
உன்னோடு சேர்ந்து
மலர்களைப் பார்ப்பதே
என் வாழ்நாள் கனவு…
என்னை விரட்டுவதில் உனக்கு என்ன இலாபம்?
உன் சுவாசக் காற்று வீசும் திசையன்றி வேறெந்த
திசையிலும் – இந்த
வண்ணத்துப் பூச்சிக்கு
உயிர் வாழத் தெரியாதே!
சிறகுகள் இருந்தும்
கூட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறேன்…
பறக்கத் தெரியாமல் அல்ல,
உன்னைத் தவிக்க விட்டுப் போக
மனம் இல்லாமல்!
இன்னும் ஒருமுறை திரும்பிப் பார்…
உன் ஜன்னல் கம்பிகளில் நான்
உயிரற்ற ஓவியமாக மாறிப் போவதற்குள்!
ஹஸீதா அபுசாலி
பொத்துவில்































